Banner After Header

மணியார் குடும்பம் – விமர்சனம்

0

RATING 2.3/5

நடித்தவர்கள் – உமாபதி ராமையா, மிருதுளா முரளி, விவேக் பிரசன்னா, சமுத்திர கனி, ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா மற்றும் பலர்

இசை, இயக்கம் – தம்பி ராமையா

ஒளிப்பதிவு – பி.கே வர்மா

வகை – நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 8 நிமிடங்கள்

டிகராக பிஸியான பிறகு படம் இயக்குவதை அறவே நிறுத்தி விட்ட தம்பி ராமையா தனது மகன் உமாபதி ராமையாவுக்காக மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் இந்த ‘மணியார் குடும்பம்’.

ஊரில் பெரிய செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த தம்பி ராமையா எந்த வேலைக்கும் செல்லாமல் தன் அப்பா சேர்த்து வைத்த சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று சாப்பிடுகிறார்.

அப்பாவைப் போலவே ஊதாரித்தனமாக வளரும் உமாபதி தனது மாமன் ஜெயப்பிரகாஷின் மகளான ஹீரோயின் மிருதுளா முரளியை காதலிக்கிறார்.

ஆனால் உமாபதி எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக ஊரைச் சுற்றி வருவதைப் பார்க்கும் ஜெயப்பிரகாஷ் அவருக்கு தன் மகளை கட்டிக்கொடுக்க மறுக்கிறார்.

இதனால் ஆவேசமடையும் உமாபதி, மிருதுளா முரளியின் ஆலோசனைப்படி சொந்தமாக தொழில் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்களிடம் பணம் வாங்கி 1 கோடி ரூபாயை சேர்க்கிறார். அந்த 1 கோடி ரூபாயை காரில் கொண்டு செல்லும் போது கார் டிரைவரான மொட்டை ராஜேந்திரன் பணத்தோடு எஸ்கேப் ஆகி விடுகிறார்.

இதனால் அதிர்ச்சியடையும் தம்பி ராமையாவும், உமாபதியும் இழந்த பணத்தை மீட்க கிளம்புகிறார்கள். பணம் கிடைத்ததா? காதல் ஜோடி ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அறிமுகப்படம் என்பதே தெரியாதபடி ஒரு சாதாரண இளைஞர் கேரக்டரில் சரியாகப் பொருந்திப் போயிருக்கிறார் ஹீரோ உமாபதி. சண்டைக் காட்சிகளிலும், நடனக் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்புகிறவர் மிருதுளா முரளி உடனான ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார்.

தம்பி ராமையாவின் அறிமுகக் காட்சியில் கொடுக்கப்படும் பில்டப்பிலேயே இவர் வெட்டி ஆபீசர் தான் என்பது தெரிந்து விடுகிறது. இருந்தாலும் பணத்தை இழந்த பிறகு அதைத் தேடி அலைகிற காட்சிகளில் தனக்கே உரிய பாணி நடிப்பில் படம் பார்ப்பவர்களை நெகிழ வைத்து விடுகிறார்.

பார்ப்பதற்கு கொழுக் மொழுக் போல இருக்கும் ஹீரோயின் மிருதுளா முரளி குத்தாட்ட பாடல் காட்சியில் கூட, கவர்ச்சி காட்டாமல் அந்தக் கால நடிகை சுவலட்சுமி போல முழுக்க போர்த்திக் கொண்டு வருகிறார். இப்படியே வந்தால் இன்னும் எத்தனை படங்களில் தாக்குப்பிடிப்பார் என்பது அவருக்கே வெளிச்சம்.

வில்லனாக வரும் பவன் போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திர கனி, கார் டிரைவராக வரும் மொட்டை ராஜேந்திரன், உமாபதியின் மாமாவாக வரும் விவேக் பிரசன்னா, மிருதுளா முரளியின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ் என படத்தில் நடித்த அத்தனை பேரும் தங்களது பணியை ஓரளவுக்கு சரியாகச் செய்திருக்கிறார்கள்.

பாடல்கள், இசை, இயக்கம் என மூன்றையும் தானே கையாண்டிருக்கிறார் தம்பி ராமையா.

அப்பா சேர்த்து வைத்த சொத்துக்களில் வாழ ஆசைப்படாமல் சொந்த உழைப்பில் வாழ வேண்டுமென்கிற கருத்தோடு ஒரு பெண் நினைத்தால் எப்பேர்ப்பட்ட ஊதாரி மனிதனையும் உழைப்பாளியாக மாற்றி விடலாம் என்கிற கருத்தையும் திரைக்கதையாக்கித் தந்திருக்கிறார்.

ஃபேமிலி, செண்டிமெண்ட், காதல், காமெடி, சஸ்பென்ஸ் என எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக தர நினைத்தவர் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யத்தையும், விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் ‘மணியார் குடும்பம்’ ‘மணியை அள்ளும் குடும்பம்’ ஆகியிருக்கும்!

Leave A Reply

Your email address will not be published.