Banner After Header

மீசைய முறுக்கு – விமர்சனம்

0

Meesaya Murukku

RATING :3/5

பிரபல இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ ஆதியின் சொந்தக் கதை பாதி, அவருடைய கற்பனை மீதியுமாக ஹீரோ கம் டைரக்டராக களமிறங்கியிருக்கும் படம் தான் இந்த ”மீசைய முறுக்கு.”

சிறு வயதில் தன்னோடு ஒன்றாகப் படித்த நாயகி ஆத்மிகாவை பல வருடங்களுக்குப் பிறகு தான் படிக்கின்ற கல்லூரியில் பார்க்கிறார் ஹீரோ ஆதி. பார்த்தவுடன் கூடவே இருக்கின்ற நண்பர்கள் துணையுடன் ஆத்மிகாவோடு காதலில் கசிந்துருகிறார்.

இசை தான் தன் எதிர்கால வாழ்க்கை என்று அதன் பாதையில் ஓடத் தொடங்குபவர் அந்தத் துறையில் சாதிக்கும் கனவுகளோடு அப்பாவின் ஆதரவோடு நண்பன் விக்னேஷைக் கூட்டிக் கொண்டு சென்னைக்கு செல்கிறார்.

இடையில் இருவருடைய காதலும் பணபலம், அரசியல் பலம், சாதிய பாகுபாடு கொண்ட நாயகி ஆத்மிகாவின் அப்பாவுக்குத் தெரிந்து விட அவர் ஆதியின் அப்பாவான விவேக்கிடம் வந்து எச்சரித்து விட்டுப் போகிறார்.

ஒரு பக்கம் தன் லட்சியமான இசைத்துறையில் சாதிப்பது? இன்னொரு பக்கம் தான் நேசித்த காதலியை கரம்பிடிப்பது? இரண்டிலும் ஆதிக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

தமிழ்சினிமாவில் நாம் பல தடவைக்கும் மேல் பார்த்து பார்த்து சலித்த அரைச்ச மாவு ரகம் தான் கதை. ஆனால் அதை காலச்சூழலுக்கேற்ப திரைக்கதையில் சுவாரஷ்யம் கூட்டி காட்சிப்படுத்திய விதம் தான் கைதட்டல் ரகம்.

கல்லூரிகளில் நடக்கும் ஜூனியர் சீனியர் மாணவர்களுக்குள்ளான ராக்கிங், காதல், காமெடி கலாட்டா ஒரு ஜாலியான படமாகத் தந்திருக்கிறார் ஆதி.

ஆதியின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை படம் முழுக்கக் காட்சிப்படுத்தியிருந்தாலும் படத்தில் அவரோடு பயணிக்கிற அத்தனை கேரக்டர்களுக்கும் அதன் தன்மைக்கேட்ப முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்தை இன்னும் சுவாரஷ்யமாக்கியிருக்கிறது.

நாயகியாக வரும் ஆத்மிகா நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும், இளமை பொங்கி வழியில் கல்லூரிக் கதையில் இன்னும் வசீகரமான பெண்ணை போட்டிருக்கலாம்.

ஆதியின் அப்பாவாக வரும் விவேக் சிறந்த தமிழ்மொழி உணர்வாளராகவும், இப்படி ஒரு அப்பா தனக்கும் அமைய மாட்டாரா என்றும் எங்க வைத்து விடுகிறார். குறிப்பாக ஆங்கில மொழி எந்தளவுக்கு தேவை என்பது குறித்து அவர் பேசும் வசனங்கள் தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது.

ஆதியின் நண்பர்களாக வரும் யூ- ட்யூப் பிரபலங்கள் எல்லோரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். அதிலும் விக்னேஷ், சாரா இருவரும் அடிக்கிற டைமிங் கூத்துகளில் பெரிய திரையில் அவர்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றன.

‘தோற்றாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு’ போன்ற நம்பிக்கை தருகிற வசனங்கள் கூடுதல் சிறப்பு. பழைய படங்களில் அடிக்கடி பாடல்கள் வந்து நமது பொறுமையை சோதிக்கும், அப்படி இதிலும் அடிக்கடி வருகிற மாண்டேஜ் பாடல்கள் பொறுமையைச் சோதிக்காமல் காட்சிகளோடு சேர்ந்து ரசிக்கிற இனிமையைத் தருகின்றன.

சொந்தக் கதையாக இருந்தாலும் அதிலும் கொஞ்சூண்டு கற்பனை கலந்து கலர்ஃபுல்லான காலேஜ் கலக்கலாக ஒரு நல்ல டைம்பாஸ் படமாகத் தந்து இயக்குநராகவும் மீசையை கம்பீரமாக முறுக்கி விட்டிருக்கிறார் ஆதி.

Leave A Reply

Your email address will not be published.