Banner After Header

மேற்கு தொடர்ச்சி மலை – விமர்சனம்

0

RATING – 4/5

நடித்தவர்கள் – அண்டனி, காயத்ரி கிருஷ்ணா, ஊத்து ராசா மற்றும் பலர்

ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்

இசை – இளையராஜா

இயக்கம் – லெனின் பாரதி

வகை – நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 1 மணி நேரம் 58 நிமிடங்கள்

‘ஓட்டு வீடு’.

‘நெல்லு சேமிச்சு வைக்கிற தாழி’.

‘சாணம் மொழுகின மண் தரை’.

‘புகையும் மண் அடுப்பு’.

‘மண் சுவரு’.

‘சிமெண்ட் திண்ணை’.

மழை பெய்யும் நேரத்தில் அதிகாலை டீக்கடை.

வீட்டு வாசலில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு அரிசியில கல் பொறக்குவது. அதில் பொக்கான அரிசிகளை அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் கோழிகளுக்கு போடுவது.

3 ஏலக்காய், 300 மல்லிகைப்பூ என்று சிறுசுகள் முதல் பெருசுகள் வரை ஊரே கேலி செய்கிற கங்காணி.

மனநிலை பாதிக்கப்பட்டு மலைப்பகுதிகளில் யானைகளை பழிவாங்க அங்கேயே சுற்றும் பாட்டி என இன்னும்… இன்னும்… மறந்து போன கிராமத்து நினைவுகளை மீட்டெடுத்து மீண்டும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைப்படம்.

ஒரு காலத்தில் நிலமிருந்தவர்கள் எல்லாம் பணக்காரர்களாக இருந்தார்கள். இன்றைக்கு அந்த நிலங்களை தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் களவாணிகளுக்கு கையகப்படுத்திக் கொடுத்து சொந்த மண் மக்களை அகதிகளாக்கி நக்கல் சிரிப்பு சிரிக்கிறது ஆளும் அரசுகளும், அதிகார வர்க்கமும்.

அந்த வகையில் நிலமே கனவாக இருக்கிற எளிய மக்கள் படுகிற கஷ்டங்களை காட்சிப்படுத்தி உலகம் முழுக்க குறுக்கும், நெடுக்குமாக இருக்கிற நிலமற்ற மக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி.

எளிய மக்களின் நிலம் சார்ந்த கனவு, அதை தட்டிப் பறிக்கப் பார்க்கும் அரசு, அதற்காக அது செய்யும் அரசியல், அந்த மக்களின் யதார்த்த வாழ்வு, பிள்ளை சம்பாதித்தாலும் சாகும் வரை தன் சொந்த உழைப்பிலேயே சம்பாதித்து வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போய் விட வேண்டும் என்கிற வைராக்கியம் கொண்ட கிராமத்து முதியவர்கள் என படத்தில் நெகிழ்ந்து, சிலாகித்து, கண்ணீர் சிந்தி, ரசித்து, உருகி, சந்தோஷப்பட வைக்கும் காட்சிகள் நிறைய உண்டு.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிற கோம்பை, பண்ணைபுரம், குதிரைப் பாஞ்சான் மெட்டு, சதுரங்கப் பாறை, தலையங்காவல் உள்ளிட்ட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி.

அதற்கு கொஞ்சமும் குறையாமல் பனித்துளியின் பரிசுத்தம் போல மொத்த அழகையும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தேனி ஈஸ்வர்.

உள்ளத்தை உருக்கும், மனசை பிசைகிற மெல்லிய இசையைக் கொடுத்து படத்தோடு ஒன்றிப்போகச் செய்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. ‘கேட்காத வாத்தியம் கேட்குது..’ ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் பாடலாக இனி எங்கும் ஒலிக்கும்.

தரமான சினிமாவை நேசிக்கும், ரசிக்கும் அத்தனை பேரும் பார்த்து பாராட்ட வேண்டிய இந்த வாழ்வியலை எந்த லாப நோக்கமும் இல்லாமல் முதலீடு போட்டு படமாக்க முன் வந்த தயாரிப்பாளரான நடிகர் விஜய் சேதுபதிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

‘ஏய் இடம் வாங்கிட்டுத்தான் கல்யாணம் பண்ணனும்னு நெனைச்சிருந்தா ஒக்காலி நீ பொறந்திருப்பியாடா?’ என கிராமத்து பெருசுகளுக்கே உரிய பேச்சுக் குசும்பை ரசிக்க வைக்கின்றன வசனங்கள்.

எல்லா படத்திலும் தேடுவது போல இந்தப் படத்திலும் தமிழ்சினிமாவின் வழக்கமான கமர்சியல் பார்முலா கதையைத் தேடாதீர்கள்.

இது மண் சார்ந்த வெள்ளந்தியான, உண்மையான, பிறந்த மண்ணுக்கு துளி கூட துரோகம் செய்ய நினைக்காத, அர்ப்பணிப்புள்ள, கள்ளம் கபடமில்லாத மனிதர்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே நிறுத்தும் அதி அற்புதமான சுகானுபவம்.

நீங்கள் கிராமத்தில் பிறந்தவராக இருந்தால் சிலகாலம் அந்த மண் வாசனையை நுகர்ந்து விட்டு, சம்பாத்தியம் பொருட்டு நகர வாழ்க்கைக்கு நகர்ந்திருந்தவராக இருந்தால் நிச்சயம் நீங்கள் மறந்து போன அந்த நிம்மதியான வாழ்க்கையின் ஏதாவது ஒரு சிறிய அடையாளத்தை இந்தப்படம் தட்டியெழுப்பும்!

மேற்கு தொடர்ச்சி மலை – அரிதாரம் பூசாத உழைக்கும் மக்களின் எளிய வாழ்க்கை

Leave A Reply

Your email address will not be published.