டீசரைப் பார்த்ததும் கண்டிப்பா சொல்வீங்க… : இந்தப் படத்தைப் பார்க்க ‘மிக மிக அவசரம்’

0

miga-miga-avasaram1

ரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான திறமைசாலிகள் என்று சொல்லப்பட்டு வந்த தமிழ்நாட்டு போலீசின் நடத்தைகள் இன்றைக்கு கூவத்தை விட நாற்றமெடுக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்த துறையாகி விட்டது.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையும் அதில் பணியாற்றும் போலீஸ்காரர்களின் நல் ஒழுக்கங்களும் இன்றைக்கு பல்வேறு சம்பவங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிற போலீஸ் அதிகாரிகள் முதலில் அவர்கள் துறையில் வேலை செய்யும் பெண் போலீஸ் அதிகாரிகளை கண்ணியமாக நடத்துகிறார்களா? என்கிற கேள்விக்கு இதுவரை பதில் கிடைத்ததே இல்லை. அந்த மிக மிக முக்கியமான கேள்வியை எழுப்பும் படமாக வந்திருக்குமோ? என்கிற ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறது ”மிக மிக அவசரம்” படத்தின் டீசர்.

இயக்குநர் சேரன் வெளியிட்ட இப்படத்தின் டீசருக்கு சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள், ஊடகங்கள், திரையுலகினர் அவ்வளவு ஏன் காவல் துறையினர் மத்தியிலுமே பெரிய அளவில் வரவேற்பையும், பாராட்டுக்களையும் வாங்கிக் குவித்திருக்கிறது.

மேற்படி டீசரின் முதல் காட்சியில் சைரன் சத்தத்துக்கு மத்தியில் ஒரு மொபைல் போன் ஒலிக்க, தனக்குக் கீழ் பணியாற்றும் இளம் பெண் போலீசை போனில் வக்கிற எண்ணத்தோடு வர்ணிக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. ‘இது தப்பில்லைங்களா சார்…’ என அந்த இளம் பெண் கெஞ்சலாக கேட்க, அந்த பரிதாபக் குரலைக் கேட்கிற போது நமக்கே மனசு வலிக்கிறது.

‘ப்ளீஸ் சார் என்னை விட்ருங்க…’ என்று அந்தப் பெண் கேட்டும் அவர் விடுவதாகத் தெரியவில்லை. தன் ஆசைக்கு இணங்க மறுக்கும் அந்தப் பெண் போலீசை பழிவாங்கும் விதமாக கொளுத்தும் வெயிலில் ஒரு பெரிய பாலத்தில் நிற்க வைத்து கொடுமைப்படுத்துகிறார் அந்த போலீஸ் அதிகாரி. இப்படி இன்னும் என்னென்ன கொடுமைகளை அந்த இளம் பெண் போலீஸ் அனுபவித்திருப்பாரோ? என்று யோசிக்கிற போதே நம் இதயம் சுக்கு நூறாக நொறுங்கிப் போகிறது.

தனக்கு மேலிருக்கும் உயர் போலீஸ் அதிகாரியால் டார்ச்சர்களை அனுபவிக்கும் அந்த இளம் பெண் போலீஸ் அவரது ஆசைக்கு இணங்குகிறாரா..? அல்லது வேண்டாம்டா இந்த பொழப்பு என்று வேலையை விட்டுப் போனாரா? ஆகியவை தான் படத்தின் காட்சிகளாக இருக்கும் என யோசிக்க வைத்திருக்கிறார், இந்தப் படத்தை முதல் முறையாக தயாரித்து இயக்கியிருக்கும் சுரேஷ் காமாட்சி. ஏற்கனவே ”கங்காரு” உள்ளிட்ட சில படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய ஸ்ரீபிரியங்கா தான் இப்படத்தில் வரும் பெண் போலீசாக நடித்திருக்கிறார்.

”டீசரைப் பாருங்க; அப்புறம் சொல்வீங்க…” இந்தப் படத்தைப் பார்க்க ‘மிக மிக அவசரம்’ என்றும், டீசரைப் பார்த்த அத்தனை பேரையும் இயக்குநரான முதல் படத்திலேயே இதுவரை யாரும் எடுக்காத கதைக்களத்தை கையில் எடுத்திருப்பாரோ என்றும் பேச வைத்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

Miga miga avasaram – Official Teaser

Leave A Reply