மோ – விமர்சனம்

0

mo-review

RATING : 3/5

வாரத்துக்கு ஒரு பேய்ப்படமாவது வராமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடிவதில்லை.

அப்படி வருகிற எல்லா பேய்ப்படங்களும் ஒரே வகையறா தான் என்கிற நினைப்போடு தியேட்டருக்குப் போகிற ரசிகர்களை அட.., என்னப்பா இது பின்னிட்டாங்களே என்று அசர வைக்கிற, காசுக்கு வஞ்சகம் செய்யாத அனுபவத்தை ஒரு சில படங்கள் கொடுக்கும். அப்படி ஒரு வித்தியாசமான ஹாரர் – காமெடிப்படம் தான் இந்த ‘மோ’.

பேய், பிசாசுக்கு பயப்படாத மனிதர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த பயத்தையே மூலதனமாக்கி மற்றவர்களை பயப்படுத்தி பணம் பிடுங்கிற வேலையைச் செய்கிறார்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், சுரேஷ் ரவி, ரமேஷ் திலக் தர்புகா சிவா நட்பு வட்டம்.

அப்படி ஒரு ப்ளாட்டுக்குள் பேய் ஓட்டுவதாகச் சொல்லி நாடகமாடி அந்த ப்ளாட்டின் செகரெட்டரியும், ரியல் எஸ்டேட் அதிபருமான செல்வாவை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

இந்த விஷயம் அவருக்குத் தெரிய வரவும் அந்த கும்பலை கொத்தோடு பிடித்து வந்து ஒன்றும் செய்யாமல் அனுப்புகிறார். அதே சமயம் தொழில் போட்டியாளரான மைம்கோபிக்கு ஆவி, பேய், பிசாசு மீது இருக்கிற பயத்தைப் பயன்படுத்தி அவர் வாங்கப்போகும் ஒரு பாழடைந்த பழைய பள்ளிக்கூடத்தில் பேய் இருப்பதாகச் சொல்லி இவர்கள் மூலமாக அந்த பள்ளிக்கூடத்தை வாங்க முடிவு செய்கிறார்.

இதற்காக அந்த பள்ளிக்கூடத்துக்கு பேய் இருப்பதாக பயமுறுத்த இந்த கும்பலை அனுப்புகிறார். அங்கே மற்றவர்களை பயமுறுத்தும் அவர்கள் அங்கே நிஜமாகவே ஒரு பேய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். யார் அந்தப் பேய்? அதனிடமிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா என்பதே கிளைமாக்ஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ரமேஷ்திலக், சுரேஷ்ரவி, முனிஸ்காந்த், தர்புகா சிவா என இவர்கள் கூட்டணி சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாமே காமெடியின் உச்சஸ்தாயம். ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைக்கிற கேப்பில் டைமிங்கில் வசனங்களைப் பேசி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.

இவர்கள் போதாதென்று யோகிபாபுவும் இருக்கிறார். அவரும் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். அவருக்கான காட்சிகளை இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக்கியிருக்கலாமே டைரக்டர் சார்…

பாலிவுட் வரை சென்று விட்டாலும் நல்ல கதையென்றால் நடிக்காமல் விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தக் கதையைக் கேட்டு நடிக்க ஓ.கே சொன்னதே அதற்கு சான்று தான். பயமுறுத்துகிற மேக்கப்பில் வருகிற போது சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க வைத்தும், பயமுறுத்த வேண்டிய இடத்தில் பயமுறுத்துகிறார்.

மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அந்த பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பயமுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆங்கிளில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஷ்ணு ஸ்ரீ கே. சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை பயமுறுத்தலில் குறையில்லை. பாடல்களில் கொஞ்சம் நிறைவைத் தந்திருக்கலாம்.

வழக்கமாகபேய்ப் படங்களில் பேயாக வரும் பெண்களின் ப்ளாஷ்பேக்கை விவரிக்கும் போது இப்படித்தான் சம்பவம் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் ஈஸியாக யூகித்து விடுவார்கள். ஆனால் இதில் அதையும் யூகிக்க முடியாதபடிக்கு திரைக்கதையை புத்திசாலித்தனமாக நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் புவன் ஆர். நல்லான்.

மோ – ஜாலியான ஹாரர் ரைட்!

Leave A Reply