‘வாழ்நாள் முழுவதும் நண்பனாக, சகோதரனாக, தந்தையாக இருப்பேன்!’ – பூர்ணாவை நெகிழ வைத்த மிஸ்கின்

0

யக்குநர்கள் ராம் – மிஸ்கின் இருவரின் நடிப்பில் வெளியாகிருக்கும் ‘சவரக்கத்தி’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப் படங்களில் வரிசையில் சேர்ந்திருக்கிறது.

மிஸ்கினின் தம்பி ஜி.ஆர். ஆதித்யா அறிமுகப்படமான இதில் ஒரு பக்கம் ராம் தன்னுடைய எளிமையான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட , இன்னொரு பக்கம் பார்வையாலேயே வில்லத்தனம் செய்து மிஸ்கின் மிரட்ட, இந்த இருவரின் நடிப்பையும் தூக்கிச் சாப்பிடுகிற அளவுக்கு அசல் கிராமத்துப் பெண்ணாக வெள்ளந்தியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் பூர்ணா.

அந்த சந்தோஷத்தோடு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.

சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஸ்கின் ”இந்தப் படத்தில் நான் எந்த லாபமும் சம்பாதிக்கவில்லை. ஆனால் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஒரு மலை அருவி என் தம்பி ஆதித்யா இந்த படத்தை சிறப்பாகவே இயக்கி விட்டார். இனிமேல் அவரைப் பற்றி எனக்கு கவலையில்லை. இனி நான் அவருக்கு எந்த உதவியும் செய்யப்போவதுமில்லை. வெளிப்படங்களை அடுத்தடுத்து இயக்கி ஒரு நல்ல நிலைக்கு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது.

இயக்குநர் ராம் இந்த படத்தில் அவரது முழு உழைப்பையும் கொடுத்து நடித்தார். நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன். இப்போதும் கூட நான் அவருக்கு சம்பளப் பாக்கி வைத்திருக்கிறேன். அதை பெரிதுபடுத்தாமல் நீங்க நல்லா சம்பாதிக்கும் போது கேட்கிறேன். அப்போது கொடுத்தால் போதும் என்று பெருந்தன்மையாக சொல்லி படத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்துக்கு பெரிய பலம்.

என்னுடைய படங்களில் வன்மம் அதிகம் இருக்கிறது என்கிறார்கள். உண்மைதான். இங்கே ஒரு முழுமையாக அன்பைக் காட்ட வன்மம் தேவைப்படுகிறது. எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அதை நான் மிகவும் நேசிக்கிறேன். வருடத்துக்கு ஒரு படம் இயக்குகிறேன் என்றாலும் அதை நல்ல படமாகத் தர வேண்டும் என்று ஒவ்வொரு படத்தையும் ஒரு தாய் ஒரு குழந்தையை பிரசவிக்கும்போது எவ்வளவு வலிகளோடு பிரசவிக்கிறாளோ அப்படிப்பட்ட வலிகளோடு தான் நான் படங்களை இயக்குகிறேன்.

பூர்ணா நல்ல திறமையான நடிகை. அவருக்காக நான் நிறைய கதைகளை எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் என் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல நண்பனாக, ஒரு சகோதரனாக, ஒரு சிறிய தந்தையாக அவருடன் இருப்பேன், அவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன், அவரை சினிமாவில் வழி நடத்துவேன்” என்றார்.

மிஸ்கினின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கையெடுத்து நன்றி தெரிவித்த பூர்ணா ஒரு கட்டத்தில் நெகிழ்ந்து போய் லேசாக கண் கலங்கினார்.

பின்னர் பேசிய அவர் ”எனது திரையுலகப் பயணத்திலேயே ‘சவரக்கத்தி’ படம் மட்டும் தான் மிகச்சிறந்த படம். அந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் சில நாட்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தேன். அதில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. அந்தளவுக்கு அந்தக் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. சொல்லப்போனால் அப்படிப்பட்ட ஒரு பெண்ணாகத் தான் நான் வாழ விரும்புகிறேன். சவரக்கத்தி படம் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத படமாகி விட்டது” என்றார்.

Leave A Reply