Banner After Header

அடுத்து ‘A’ படம் எடுக்கப் போகிறேன்… : மிரள வைத்த மிஸ்கின்!

0


MYSSKIN1

வாரிசு ஹீரோக்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு.

அவரது அந்த போராட்டத்துக்கு தக்க வெற்றியைத் தரும் படமாக தயாராகியிருக்கிறது ‘தற்காப்பு’. போலீஸைப் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் இப்படத்தை ஆர்.பி.ரவி இயக்கியிருக்கிறார். கினெடாஸ்கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் பங்ஷன் இன்று சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது சென்ஸார் அமைப்பு செய்யும் அழிச்சாட்டியங்களை கடுமையான சாடினார்.

அவர் பேசியதாவது : “இந்தப் படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். யுஏ மற்றும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்ட வேண்டியிருக்கிறது. இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரியஅடி. தணிக்கைத் துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம்.

கெட்ட வார்த்தைகள், வன்முறை இருந்தால் அதற்கு ஏ சான்றிதழ் என்று சொல்லி விடுகிறார்கள். கெட்ட வார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம் கொண்டு பேசும் போது போடா செல்லமேன்னா திட்ட முடியும்?

நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன். ஒரு படம் தோற்று விட்டால் 50 குடும்பங்கள் தோற்று விடும். ஒரு கலைஞனுக்குச் சுதந்தரம் தேவை. படத் தணிக்கையின் போது சில வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை.

சினிமாவைப் பற்றிய தவறான எண்ணம் உள்ளது. படத்தைக் குழந்தைகளுடன் பார்க்க வேண்டும் என்று. சினிமாவை குழந்தைகளுடன் பார்க்கக்கூடாது. அதற்கான மீடியம் அல்ல சினிமா. கார்ட்டூன் தான் குழந்தைகளுடன் பார்க்க வேண்டும். திரையரங்கில் பார்க்கப்படும் சினிமா, அடல்ட் மீடியம். பெரியவர்கள் பார்க்கும் படம். குழந்தைகளுடன் யாரும் திரையரங்குக்கு வரவேண்டாம். மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு வேண்டுமானால் குழந்தைகளுடன் வரலாம். டைட்டானிக் படத்தில் கூட முத்தக்காட்சி உள்ளது.

சென்சாரில் இது குழந்தைகளுடன் பார்க்க முடியாது என்கிறார்கள். என் படத்துக்கு குழந்தைகளுடன் வராதீர்கள். பிசாசு படம் பார்த்து விட்டு சொன்னார்கள், படம் அருமையாக உள்ளது. ஆனால் பிசாசு இருக்கிறது என்றார்கள். பிசாசை மோசமாகச் சித்தரித்து தான் படங்கள் வந்துள்ளன. ஆனால் மனிதர்களை விட பேய்கள் நல்லவை. பிசாசு ஒரு தெய்வம், தெய்வத்துக்கு ஒருபடி மேல். பிசாசைப் பார்த்தால் பயப்பட வேண்டாம், என்று ஒரு படம் எடுத்தேன். ஆனால் படத்தில் பிசாசு வந்து விட்டது, அதனால் ஏ சான்றிதழ் என்றார்கள். இதனால் இயக்குநர் பாலாவிடம் திட்டு தான் வாங்கினேன். தணிக்கைக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. கதையை எழுதும்போதும், காட்சியாக எடுக்கும் போதும் எண்ணியதுபோல செய்ய முடியவில்லை. சுதந்திரம் இல்லாவிட்டால் அது என்ன கலை?

நாங்கள் படப்பிடிப்பு நடத்தும் போதே ஒரு காட்சி வைத்தால், இதை வெட்டி விடுவார்கள் என்று கேமிராமேன் சொல்லுகிறார், அந்த இடத்திலேயே எங்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் போய் விடுகிறது. ஒரு விஷயத்தை எழுதும் போதே இப்படி வைத்தால் திட்டுவார்களே என்று அடித்து விட்டு எழுதவேண்டியிருக்கிறது. எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்கு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஆவண செய்யவேண்டும்.

நான் அடுத்து திகில் கலந்த ‘ஏ’ படம்தான் எடுக்கப் போகிறேன், என் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவு செய்து வர வேண்டாம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தத் துறையைப் பாதுகாக்க வேண்டியது அனைவருடைய கடமை” என்று பேசினார் இயக்குநர் மிஷ்கின்.

முன்னதாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் படத்தின் பாடல்களை நடிகர் கார்த்தி வெளியிட ஜெயம்ரவி பெற்றுக் கொண்டார். ட்ரெய்லரை இயக்குநர் மிஷ்கின் வெளியிட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.