Banner After Header

நாச்சியார் – விமர்சனம்

0

RATING – 3.5/5

நடித்தவர்கள் – ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பலர்

இசை – இளையராஜா

ஒளிப்பதிவு – ஈஸ்வர்

இயக்கம் – பாலா

சென்சார் பரிந்துரை – ‘U/A’

வகை – ஆக்‌ஷன், க்ரைம், த்ரில்லர்

கால அளவு – 1 மணி நேரம் 41 நிமிடங்கள்

‘தன்னைத் தானே அறியாமல் தன் தேகத்தை காவு கொடுத்த இளம் பெண்களுக்கு’ என்று படத்தின் ஆரம்ப டைட்டில் கார்டில் சமர்ப்பணம் போடும் போதே இது ஏதோ ஒரு கற்பழிப்பு சம்பந்தமான கதை என்கிற மனநிலைக்கு வந்து விடுகிறோம். அப்படியான கூச வைக்கும் குரூரமான காட்சிகள் படத்தில் இருக்கும் அதுவும் இது பாலா படமாச்சே? என்கிற உதறலும் ஒட்டிக் கொள்கிறது.

போதாக்குறைக்கு பட போஸ்டர்களையும், ஜோதிகா பேசிய சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்ற படத்தின் டீஸரையும் பார்த்த போது அந்த உதறலை உறுதிப்படுத்த, நமது எண்ணத்தை தவிடு பொடியாக்கி ஒரு அசாதரமாண கதையை தனக்கே உரிய சாடிஸ்ட்டு அடையாளங்களை வெகுவாகக் குறைத்து விட்டு  எளிமையான படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பாலா.

இந்த மன மாற்றத்துக்கே ஸ்பெஷல் பாராட்டுகள் பாலா சார்..

துணிச்சலான போலீஸ் அதிகாரியான ஜோதிகா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதனால் கர்ப்பமாகும் சேரிப்பகுதியில் வசிக்கும் மைனர் பெண்ணான நாயகி இவானாவின் வழக்கை விசாரிக்கக் கிளம்புகிறார். இவானாவின் கர்ப்பத்திற்கு காரணம் அவளது மைனர் காதலனான நாயகன் ஜி.வி.பிரகாஷ் தான் என்று சந்தேகப்படும் போலீஸ் அவரைப் பிடித்து சிறார் சிறையில் தள்ளுகிறது. ஆனால் டி.என்.ஏ ஆய்வில் அந்த கர்ப்பத்துக்குக் காரணம் ஜி.வி.பிரகாஷ் இல்லை என்கிற உண்மை தெரிய வருகிறது.

அப்படியானால் இவானாவை அந்த அவலமான நிலைக்கு தள்ளியது யார் என்பதை ஜோதிகா கண்டுபிடிப்பதே? மீதிக்கதை.

‘மொழி’யில் வாய் பேச முடியாத பெண்ணாக வந்து நடிப்பில் அசத்திய ஜோதிகா, இதில் துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மிடுக்கான நடையும், ஆண் போலீஸ் அதிகாரி இருந்தாலும் அவர் முன்னால் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு அவரது கம்பீரத்தைக் காட்டுவதும் செம..! செம..!!

தொடர்ந்து தோல்விப்படங்களை மட்டுமே கொடுத்து வந்த ஜி.வி.பிரகாஷூக்கு இந்தப்படம் முதல் வெற்றிப்படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாலா படங்களில் வரும் வழக்கமான ஹீரோக்களைப் போன்ற தோற்றத்தில் வந்தாலும் ரத்தம், வன்முறை, குரூர சண்டைக்காட்சிகள் இல்லாதது ஆறுதல்.

ஜி.வியின் ஜோடியாக வரும் இவானாவுக்கு முதல் படமா இது? சென்னையின் லோக்கல் பாஸையை எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் பேசுவது, அதற்கேற்ற அப்பாவித்தனம், பேச்சில் மழலைத்தனம், தவிப்பு என அசல் சேரிப்பெண்ணாக சீனுக்கு சீன் சிக்ஸர் அடிக்கிறார் அந்தச் சுட்டிப் பெண்.

தமிழ்சினிமாவுக்கு கெட்டியான குட்டி ஹீரோயின் கெடைச்சாச்சு!

ஒரு க்ரைமை துப்பறிகிற சீரியஸ் கதைக்குள்ளும் ”இந்த பணம் இருக்கே அது மீத்தேன் மாதிரி. அதலபாதாளத்துல பாய்ஞ்சி மொத்தமா நாசம் பண்ணிடும்” போன்ற வசனங்களால் மக்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் போகிற போக்கில் வசனங்களாகச் சொல்லிவிட்டுப் போவது ஆஹா!

மனதை உருக்கும் பின்னணி இசையை உயிரோட்டமாகக் கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் தேன் இசை!

வருஷக்கணக்கில் எடுக்கிற படங்களெல்லாம் எப்போது முடிவும் என்கிற உணர்வைத் தந்த பாலா படங்களுக்கு மத்தியில் குறுகிய காலத்தில் ஒன்றே முக்கால் மணி நேரத்துக்குள் எடுத்திருக்கும் இந்தப்படம் இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டதே என்கிற ஆவலைத் தூண்டுகிறது. அந்தளவுக்கு திரைக்கதையை வேகமாக நகர்த்தியிருக்கிறார் பாலா.

தேவையில்லாத, திணிக்கப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது சதீஷ் சூர்யாவின் எடிட்டிங்.

சேரிப்பகுதிகளை அதன் இயல்பு மாறாமல் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது ஈஸ்வரின் ஒளிப்பதிவு. குறிப்பாக படத்தின் தொடக்கக் காட்சியான டாப் ஆங்கிள் குப்பை மேடு காட்சி அருமை! அருமை!!

ரத்தம், வன்முறை, பார்க்கவே தயக்கத்தைக் தரக்கூடிய குலை நடுங்க வைக்கும் குரூரமான காட்சிகள் இவை தான் பாலா படங்களில் இருக்கும் தனித்த அடையாளங்கள்.

அதனாலேயே இளகிய மனது உடையவர்கள் பாலா படம் என்றாலே முகத்தில் ஒருவித பய உணர்வை வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட தனது வழக்கமான குரூர ஃபார்முலாவிலிருந்து முற்றிலுமாக வெளியேறி இன்றைய சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிற பேரவலம் ஒன்றை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் பாலா.

நாச்சியார் – பெண்களும் பயப்படாமல் பார்க்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.