Banner After Header

நடிகையர் திலகம் – விமர்சனம்

0

RATING : 3/5

நடித்தவர்கள் – கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, சமந்தா, ராஜேந்திர பிரசாத், பானுப்ரியா, மாளவிகா நாயர், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – டேனி சான்செஸ் லோப்ஸ்

இசை – மிக்கி ஜெ. மேயர்

இயக்கம் – நாக் அஸ்வின்

வகை – பயோகிராபி – நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 56 நிமிடங்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து காலத்தால் அழியாத பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை, அவரது புகழ்பரப்பும் விதமாக சுவைபட காட்சிப் படுத்தியிருக்கும் படம் தான் இந்த ‘நடிகையர் திலகம்’.

சாவித்திரி ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கில் இப்படத்தை ‘மகாநதி’ என்ற பெயரில் பிரம்மாண்டமாக தயாரித்தவர்கள் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற டைட்டிலோடு டப்பிங் செய்திருக்கிறார்கள்.

சிறு வயதிலிருந்தே நாட்டியம், நாடகம் போன்றவற்றில் ஆர்வத்தோடு இருக்கும் சாவித்திரி அப்பாவை இழந்ததால் அம்மாவோடு பெரியப்பாவின் வீட்டில் வளர்கிறார்.

அவருடைய திறைமைக்கு பல நாடக மேடைகள் கிடைத்தாலும், 14 வயதில் ஏற்படும் நடிப்பாசையால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வருகிறார். ஆனால் அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைத்து விடுமா என்ன?

பல ஸ்டூடியோக்கள் ஏறி இறங்கியும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. இதனால் மனம் நொந்து மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பும் அவரைத் தேடி ஒன்றிரெண்டு வருடங்களுக்குப் பிறகு சினிமா வாய்ப்பு தானாக வருகிறது.

சென்னை சென்றிருந்த போது ஜெமினி கணேசன் எடுத்த ஒரு புகைப்படத்தால் தான் அந்த வாய்ப்பு சாவித்திரிக்கு கிடைத்தது என்ற விபரம் தெரியவும் அவருக்கு நன்றி சொல்கிறார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி சாவித்திரி மிகப்பெரிய நடிகையாக வளர, கூடவே ஏற்கனவே திருமணமான ஜெமினி கணேசன் உடனான நட்பு காதலாக வளர்ந்து திருமணத்தில் போய் முடிகிறது.

அதன்பிறகு சாவித்திரியின் சினிமா கேரியரில் ஏற்படும் ஏற்ற இறங்கங்கள்,வாழ்க்கையில் நடக்கிற ‘போதை அடிக்ட்’ உள்ளிட்ட சம்பவங்கள்,  அதனால் சாவித்திரி தனித்து விடப்படுகிற கொடுமை, அந்த ஏழ்மையான சூழலிலும் கூட தேடி வருவோருக்கெல்லாம் உதவிகள் செய்வது என சாவித்திரியின் வாழ்க்கையில் நடந்த நல்லதும், கெட்டதுமான விஷயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.

பொதுவாகவே ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படமென்றால் முழுப்படமும் அவரைப்பற்றிய புகழ் பரப்பும் விஷயங்களாகவே இருக்கும். ஆனால் இதில் சாவித்திரி போதைக்கு அடிமையானர் என்கிற உண்மையையும் சொல்லியிருக்கும் துணிச்சல் பாராட்டுக்குரியது.

பத்திரிகை நிருபராக வரும் சமந்தாவுக்கு சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டிய அசைன்மெண்ட் வருகிறது. அதற்காக அவர் சாவித்திரியின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்களை தேடிப்போவதும், அவர்கள் சம்பவங்களை சொல்வது போலவும் திரைக்கதை அமைத்திருப்பது ‘வாவ்’ மூவ்மெண்ட்.

‘தொடரி’ படத்தில் ரசிகர்களால் படு மோசமாக விமர்சிக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தின் மூலம் அதே ரசிகர்களால் கொண்டாடப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்தளவுக்கு 14 வயதிலிருந்து 42 வயது வரையான காட்சிகளில் சாவித்திரியாகவே வாழ்ந்து அசத்தியிருக்கிறார். நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே காலத்துக்கும் பெயரை பெருமையோடு உச்சரிக்க வைக்கும் இப்படி ஒரு படம் இனி அவருக்கு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். அந்த மெனக்கிடலுக்காகவே ஸ்பெஷல் பாராட்டுகள் கீர்த்தி.

ஜெமினி கணேசனாக வரும் துல்கர் சல்மான் அந்தக் கேரக்டருக்கு முழுமையாகப் பொருந்தவில்லை. அட்லீஸ்ட் பின்னணிக் குரலையாவது மாற்றியிருக்கலாம். ஜெமினி லுக்கில் மலையாள மொழி வாடையோடு அவரே பேசியிருக்கும் டப்பிங் சுத்தமாக ஒட்டவில்லை.

இருந்தாலும் தன்னுடைய மார்க்கெட் குறைய ஆரம்பித்து சாவித்திரியின் மார்க்கெட் உயரும் போதும், பொது இடங்களில் அவர் கண் முன்னாலேயே சாவித்திரிக்கு கிடைக்கும் பெயரையும், புகழையும் பார்த்து பொறாமைப்பட்டு அதுவே அவர்கள் இல்லற வாழ்க்கையின் விரிசலுக்கு காரணமாக அமைவதும் என அந்த லேசான வில்லத்தனம் கொண்ட காட்சிகளில் நடிப்பில் அதி அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார் துல்கர்.

நிருபராக வரும் சமந்தா, அவரோடு புகைப்படக் காரராக வரும் விஜய் தேவர கொண்டா, கீர்த்தியின் தோழியாக வரும் ஷாலினி பாண்டே ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

மேலும் பானுப்பிரியா, ராஜேந்திர பிரசாத், மாளவிகா நாயர், பிரகாஷ் ராஜ் என மற்றவர்களும் அந்தந்த கேரக்டராகவே மாறி கைத்தட்டல்களை அள்ளுகிறார்கள். குறிப்பாக கீர்த்தி சுரேஷின் பெரியப்பாவாக வரும் ராஜேந்திர பிரசாத் தன்னுடைய நகைச்சுவை கலந்த செண்டிமெண்ட் நடிப்பால் ரசிகர்களிடம் தனிக்கவனம் ஈர்க்கிறார்.

சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகள் ஒரு கலர்; படத்துக்குள் படமாக்கப்படும் காட்சிகள் ஒரு கலர்; நிருபராக வரும் சமந்தாவின் காட்சிகள் இன்னொரு கலர் என மூன்று கலர் டோன்களில் திரையில் கன கச்சிதம் காட்டியிருக்கிறது டானி சா லோவின் ஒளிப்பதிவு.

மெட்ராஸ் சென்ட்ரலின் முகப்பு, MCP நம்பருடன் சாலையில் நகரும் கார்கள், விஜய வாஹிணி ஸ்டுடியோஸ், பழைய கால கேமரா என அபாரமான உழைப்பை கொட்டியிருக்கும் கலை இயக்குனருக்கு ஒரு பொக்கே.

சாவித்திரியின் புகழை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று நினைத்ததெல்லாம் ஓ.கே தான். அதற்காக மற்ற கேரக்டர்களில் பெரும்பாலானோரை நெகட்டீவ் ஆக காட்டியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சாவித்திரிக்கு மது பழக்கத்தை அறிமுகப்படுத்தி அவருடைய வாழ்க்கை மோசமடையக் காரணமே ஜெமினி கணேசன் தான் என்று காட்சிப்படுத்தியதை எப்படித்தான் ஜெமினி கணேசனின் குடும்பத்தார் அனுமதித்தார்களோ தெரியவில்லை.

வரட்டுப் பிடிவாதமும், எதையும் ஆராய்ந்து பார்க்காமல் சதா எந்த நேரமும் போதையே கதியென்று கிடந்ததும் கூட சாவித்திரியின் வாழ்க்கை மோசமான பாதைக்கு திரும்புவதற்கு முக்கிய காரணம் என்பதை அழுத்தமாகச் சொல்லாமல், பட்டும் படாமல் சொன்னது மட்டும் சரியா? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

அதேபோல படத்தில் தெலுங்குப் பட இயக்குனர்களை உயர்வாகக் காட்டியும், தமிழ்ப்பட இயக்குனர்களை கோமாளிகளாகக் காட்டியதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சாவித்திரியின் சொந்த மாநிலம் ஆந்திராவாக இருந்தாலும் அவரை இன்றளவும் தமிழ்ப்பட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான காட்சிகளில் கேரக்டர்கள் தெலுங்கு மொழியே பேசுவதால் ஒரு நொடி இது தமிழ்ப்படமா அல்லது தெலுங்கு படமா என்கிற சந்தேகமும், எரிச்சலும் வருவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல லிப் சிங் ஆகாமல் பல காட்சிகளில் பளிச்சென்று தெரிகிற குறையையும் தவிர்த்திருக்கலாம்.

கீர்த்தி சுரேஷின் பர்ஸ்ட் கிளாஸ் நடிப்புக்காகவும், சாவித்திரியின் நெகிழ வைக்கும் வாழ்க்கையை காட்சிகளாகப் பார்க்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்திற்காகவும் நடிகையர் திலகத்தை ரசிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.