அறவழிப் போராட்டத்தில் அசத்தல்! – களத்துக்கு முதல் ஆளாக வந்த விஜய்!

0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடி மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் நேற்று ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர் சங்கத்தினர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாகவே திரையுலகின் சார்பில் நடைபெறும் இதுபோன்ற போராட்டங்களில் எத்தனை முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என்பதைத் தான் ரசிகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள்.

அந்த வகையில் நேற்றைய போராட்டத்திலும் நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், கார்த்தி, சிவக்குமார், ராஜேஷ், விவேக், பார்த்திபன், பிரேம், பொன்வண்ணன், நடிகைகள் ஸ்ரீப்ரியா உள்ளிட்ட திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இருந்தாலும் அர்ஜூன், பிரகாஷ்ராஜ், பிரபுதேவா போன்ற கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளும் கலந்து கொள்ளவில்லை. அதைப்பற்றி யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் முன்னணி நடிகர்களின் முக்கியமானவரான நடிகர் அஜீத் கலந்து கொள்ளாததைத் தான் பெரும்பாலானோர் கடுமையாக விமர்சித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, நேற்றைய போராட்டத்தில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய்.

9 மணி ஆரம்பிக்க இருந்த அறப்போராட்ட மேடைக்கு சரியாக காலை 8:50க்கே வந்து முதல் ஆளாக கலந்து கொண்டார் விஜய். அதேபோல ஒரு சமயத்தில் மேடையில் இருக்கும் விஜய்க்கு புழுக்கம் ஏற்படக்கூடாது என்று திடீரென்று ராட்ஸச மின் விசிறி ஒன்று அவருக்காக கொண்டு வரப்பட்டு இயக்கப்பட்டது. அதைப்பார்த்ததும் ”எனக்கு வேண்டாம், மின் விசிறியை எடுத்து விடுங்கள்” என்று விஜய் சைகை மூலமாகச் சொன்னதை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் வீடியோக்களாக சமூகவலைத்தளங்களில் பரவ விஜய் ரசிகர்கள் ”தான் என்றுமே உண்மைத் தமிழன்” என்று நிரூபித்து விட்டார் தளபதி விஜய் என்று பாராட்டு மழை பொழிந்தனர்.

நடந்த போராட்டம் மெளன அறப் போராட்டம் என்பதால் நேற்று யாருமே மைக்கைப் பிடித்து பேசவில்லை. போராட்டம் முடியும் போது சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நடிகர் சத்யராஜ் மட்டும் உணர்ச்சி பொங்க சில கருத்துகளை தெரிவித்து கூட்டத்தினர் மத்தியில் பாராட்டுகளை வாங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.