Banner After Header

நமது – விமர்சனம்

0

 

Namadhu-Review1

RATING : 2.5/5

ரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்கள். நான்கு பேர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவங்கள் எப்படி அந்த நான்கு பேர்களையும் ஒன்றிணைக்கிறது என்பதே இந்த ‘நமது.’

பிரபல தெலுங்கு இயக்குநரான சந்திர சேகர் ஏலட்டி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகியிருக்கிறது.

மூன்று மொழிகளிலும் போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு தமிழுக்கு கெளதமி, மலையாளத்துக்கு மோகன்லான் தெலுங்குக்கு சில தெலுங்கு நட்சத்திரங்களைக் கொண்டு படத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் மோகன்லான் புரமோஷனுக்காக அதே கடையில் வேலை செய்யும் சக ஊழியருக்கு எதிராக ஒரு சதியைச் செய்கிறார். அது  அவரை பெரும் பிரச்சனையில் கொண்டு போய் விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது ஒரு லைன்.

எந்தப் பொருளாக இருந்தாலும் குறைந்த விலையில் கிடைக்காதா என்று தேடும் கெளதமிக்கு அதிக சம்பளத்தில் சிங்கப்பூரில் வேலை கிடைக்கிறது. ஆனால் கணவன், குழந்தைகளை விட்டுப் போக அவள் மனசு மறுக்கிறது. அவள் அந்த வேலைக்கு சென்றாளா இல்லையா என்பது இன்னொரு லைன்.

கல்லூரியில் படிக்கும் விஷ்வாந்த் அவர் வயசு ஹனிஷா அம்ரோஷ் மீது காதல் வயப்படுகிறார். அவரது நெருக்கம் காதல் என்று நம்ப வைக்க, அது மீதான  முழுமையான நம்பிக்கையில் ஒருநாள் தன் காதலை சொல்கிறார். ஆனால் ஹனிஷாவோ அந்தக் காதலை ஏற்க மறுக்கிறார். வெறுத்துப் போகும் விஷ்வாந்த் தற்கொலைக்கு முயல்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது அடுத்த லைன்.

பள்ளி ஒன்றில் படிக்கும் சிறுமி ரைனாவுக்கு 4 வயசு ரோட்டோர சிறுவனுடன் அறிமுகம் கிடைக்கிறது. அது நட்பாக மாறி இருவரும் நண்பர்களான பிறகு ஒருநாள் அந்தச் சிறுவன் காணாமல் போகிறான். சிறுவனைத் தேடி அலைகிறாள் ரைனா. சிறுவன் கிடைத்தானா? இல்லையா? என்பது ஒரு லைன்.

இப்படி இந்த நான்கு பேர் பின்னணியில் சொல்லப்படும் ஒன்லைன் கதைகள் ஒரே கோட்டில் இணைவது தான் கிளைமாக்ஸ்.

சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர் வைசராக வருகிற மோகன்லாலுக்கு சாதாரண பார்மல் ஷர்ட், பேண்ட் தான் காஸ்ட்யூம். எந்த சீனிலும் மாஸ் ஹீரோவுக்கான பில்டப்புகள் இல்லை. படம் முழுக்க கதையின் நாயகனாக மட்டுமே வந்து ஆச்சரியப்படுத்துகிறார்.

புரமோஷனுக்கு ஆசைப்பட்டு சக ஊழியரை ஆள் வைத்து கடத்தி விட்டு பிறகு அதே கடத்தல் காரனிடம் கெஞ்சுகிற காட்சிகளில் ரசிகர்களை பரிதவிக்க வைத்து விடுகிறார். இப்படி நடிப்பில் அசத்தினாலும் அவரது வசனங்களில் அடிக்கும் மலையாள வாடை இது ஒரு டப்பிங் படம் என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டி விடுகிறது.

பாபநாசம் படத்தில் கிச்சனிலேயே பார்த்த கெளதமிக்கு இதிலும் அதே ஏரியாவில் தான் அதிக வேலை. அந்தப் படத்தில் ஒரு குடும்பத் தலைவியாக பார்த்தது போல இதிலும் அதே கேரக்டர் என்பதால் இரண்டு படத்திலும் நடிப்பில் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை.

அவரது பக்கத்து வீட்டு தோழியாக வரும் ஊர்வசி தான் வரும் காட்சிகளில் கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

இளம் காதல் ஜோடியாக வரும் விஷ்வாந்த், ஹனிஷா ஆம்ரோஷ், தங்கள் பங்குக்கு கேரக்டருக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக வரும் ரைனா ராவ் நடிப்பில் நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறார்.

அந்த நான்கு வயது சிறுவனைத் தேடி அவள் அலைகிற காட்சிகளில் நம் கண்களே நம்மை அறியாமல் கலங்கி விடும். அதேபோல அந்த நான்கு வயதுச் சிறுவனும் அப்பா… என்று மோகன்லாலின் பேண்ட்டை பிடித்து அழுகிற காட்சியில் அப்படியே நம் மனதை உருக்கி விடுகிறான்.

மகேஷ் சங்கரின் இசை அமைதியான வெள்ளோட்டம் என்றால் ராகுல் ஸ்ரீவஸ்தவ்வின் ஒளிப்பதிவு அதற்கேற்ற ஒளியைப் பாய்ச்சியிருக்கிறது.

ஒரே குடும்பத்தில் இருக்கும் நான்கு பேரின் வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்களை கதையாக்கிய இயக்குநர் அதற்கான திரைக்கதை வடிவத்தில் விறுவிறுப்பை கூட்டுவதில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். மெதுவாக நகரும் திரைக்கதை தான் படத்தின் பலவீனம்.

படத்தை ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக கொடுக்க ஆசைப்பட்ட இயக்குநர் கூடுதலாக அதில் கொஞ்சம் காமெடி போன்ற கமர்ஷியல் சமாச்சாரத்தையும் சேர்த்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.