Banner After Header

நெடுநல்வாடை – விமர்சனம் #Nedunalvaadai

0

RATING – 3.5/5 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாத்தாவுக்கும், பேரனுக்குமிடையே உள்ள உறவை ஒரு மெல்லிய காதலோடு மண்மனம் மாறாத கிராமத்து தெருக்களின் அழகியலை திரையில் கொண்டு வந்திருக்கும் படம் தான் இந்த ‘நெடுநல்வாடை’.

காதல் கணவன் கை விட்ட நிலையில் ஆண், பெண் குழந்தைகளோடு வரும் மகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் விவசாயியான ‘பூ’ ராமு. அவருடைய இந்த நடவடிக்கையை பிடிக்காமல் முறுக்கிக் கொண்டு நிற்கிறார் மகன் மைம் கோபி.

தாத்தாவின் அரவணைப்பில் வளரும் பேரரான ஹீரோவை அந்த ஊரில் வசதியான வீட்டைச் சேர்ந்த ஹீரோயின் அஞ்சலி நாயர் விரட்டி விரட்டி காதலிக்கிறார்.

விவகாரம் தாத்தாவின் காதுகளை எட்டவும் ”நமக்கெல்லாம் எதுக்குப்பா காதல்?” என்று அறிவுரை சொல்கிறார். தாத்தாவின் அறிவுரைப்படி அஞ்சலியின் காதலை முதலில் வெறுத்தாலும் அந்தக் காதலை விடவும் முடியாமல் தவிக்கிறார்.

அதை நினைத்து நினைத்து பேரன் தூக்கம் தொலைப்பதைப் பார்க்கும் தாத்தா பூ ராமு ஆசைப்பட்ட பெண்ணை பேரனுக்கு கட்டி வைக்க பெண் கேட்டுப் போகிறார். வசதி வாய்ப்பு, சொத்து பத்தை காரணம் காட்டி அங்கே திருமணத்துக்கு ரெட் சிக்னல் போடுகிறார் நாயகியின் அண்ணன். அந்த எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அறிமுக நடிகர் என்பதாலோ என்னவோ எல்லா காட்சிகளிலும் ‘அளந்து’ தான் நடிக்கிறார் ஹீரோ இளங்கோ.

ஆனால் வருகிற காட்சிகள் எல்லாம் சிக்சர் அடிக்கிறார் நாயகி அஞ்சலி நாயர். தென் மாவட்டத்தில் இருக்கிற இளம் பெண்களின் துணிச்சலும், தைரியத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அதிலும் ஹீரோ இளங்கோவை அவர் துரத்தி துரத்தி காதலிக்கிற காட்சிகள் கிராமத்துப் பெண்களுக்கே உரிய துணிச்சல்.

இரண்டு கை குழந்தைகளோடு அடைக்கலம் தேடி வரும் மகளை எந்த இடத்திலும் விட்டு விடக்கூடாதென்று அன்பு காட்டுகிற அப்பாவாக பூ ராமு. பேரன் மீது பாசம் காட்டுகிற அதே நேரத்தில் கண்டிப்பு காட்டுவதும், அவன் ஆசைப்பட்டு எதையும் கேட்டதில்லை, முதல் தடவையா கேட்கிறான். அதை நாம தான செய்யணும் என்று சொல்கிற காட்சியிலும் தாத்தா, பேரனுக்குமிடையே அன்பை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

மொறைத்துக் கொண்டே இருக்கும் மாமனாக வரும் மைம் கோபி, பேச்சுத்துணை நண்பனாக வரும் ஐந்து கோவிலான் என படத்தில் வருகிற மற்ற நடிகர், நடிகைகளும் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறார்கள்.

படம் முழுக்க வரும் தூத்துக்குடி, திருநெல்வெலி மாவட்ட வட்டார மொழியை அதன் இயல்பு மாறாமல் படம் முழுக்க பேச வைத்திருப்பது நல்ல ரசனைக்கு தீனி.

கிராமத்து வயல் வெளிகளின் பச்சை பசேல் என்கிற அழகை நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி. ஜோஸ் பிராங்க்ளினின் பின்னணி இசையும், காசி விஸ்வநாதனின் கச்சிதமான எடிட்டிங்கும் விறுவிறுப்புக்கு பலம்.

கதைகளும் காட்சிகளும் புதிதல்ல, ஆனால் தென் மாவட்ட கதை என்றாலே உயர்சாதிப் பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பையனுக்கும் காதல், அதனால் நடக்கும் ரத்த வெறியாட்டம் என வன்முறை பக்கம் போகாமல், தன் தாத்தாவுக்கும், தனக்குமிடையேயான வாழ்க்கையை உண்மைச்சம்பவங்களின் பின்னணியோடு அழுத்தமான கிராமத்துப் பதிவாகத் தந்திருக்கிறார் இயக்குனர் செல்வகண்ணன்.

நெடுநல்வாடை – கிராமத்து அற்புதம்

Leave A Reply

Your email address will not be published.