நெருப்புடா – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Neruppuda-review

RATING : 3.5/5

போலீஸ் கதைகளுக்கு பஞ்சமில்லாத தமிழ்சினிமாவில் நாம் அதிகம் பார்த்திராத தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு வந்திருக்கும் படம் தான் இந்த ‘நெருப்புடா.’

சிறு வயதில் தான் வசிக்கும் ஏரியாவில் நடக்கும் தீ விபத்தில் உயிரை துச்சமாக மதித்து வேலை செய்யும் தீயணைப்பு வீரர்களைப் பார்த்து அசந்து போகிறார் விக்ரம் பிரபு. அன்று முதல் தானும் தீயணைப்பு வீரராக ஆசைப்படும் அவர் தன்னைப்போலவே அதே ஆசையில் இருக்கும் நான்கு நண்பர்களோடு நட்பை வளர்த்துக் கொள்கிறார்.

எல்லோரும் இளைஞர்கள் ஆனதும் சொந்தமாக தீயணைப்பு வண்டி ஒன்றை வைத்துக் கொண்டு எங்கு தீப்பிடித்தாலும் அணைக்க கிளம்பி விடுவார்கள். அதோடு அரசாங்க தீயணைப்பு வீரர் வேலைக்காக தேர்வு எழுதக் காத்திருக்கும் அவர்கள் சக நண்பன் ஒருவனால் ஏற்படுகிற பிரச்சனையில் பிரபல ரெளடி ஒருவனின் மரண சம்பவத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இதனால் போலீஸ் ஸ்டேஷன், வழக்கு என்று போய் எங்கே நாம் தீயணைப்பு வீரராக முடியாதோ? என்று பதைபதைக்கும் அவர்கள் அந்த மரண சம்பவ சிக்கலிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? ஆசைப்பட்டபடி தீயணைப்பு வீரர்கள் ஆனார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

படத்தில் விக்ரம் பிரபு ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக வருகிறார். இப்படி ஒரு சமூகப் பின்னணி கொண்ட கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

அவருடைய உயரமான உடற்கட்டு படத்தில் தீயணைப்பு வீரர் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருக்கிறது. அதிலும் வேகமாக ஓடி வந்து தீயணைப்பு வண்டியில் ஏறும் அந்த அறிமுகக் காட்சி செம… செம..!

அடுத்தடுத்த படங்களிலும் இதுபோன்ற பெர்பெக்ட் பிட் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னும் பல உயரங்களை நீங்கள் தொடலாம் ப்ரோ.

Related Posts
1 of 47

ஹீரோயின் நிக்கி கல்ராணி காதல் காட்சிகளில் விக்ரம் பிரபுவுக்கு நல்ல பொருத்தம். பட் ஆள் ஒரு சுற்று பெருத்துப் போயிருப்பார் போல…. முந்தைய படங்களில் பார்த்த அழகு இதில் கொஞ்சம் குறைந்து ரொமான்ஸ் காட்சிகளில் கூட பொலிவில்லாமல் காட்சியளிக்கிறார்.

வருண் உட்பட விக்ரம் பிரபுவின் நண்பர்களாக வருபவர்கள் அத்தனை பேரும் தங்கள் கேரக்டரை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

டம்மி அரசியல்வாதியாக வரும் மொட்டை ராஜேந்திரன் அந்த வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்ட புல்லட்டில் வருகிற போதெல்லாம் நம்மால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

வில்லனாக வரும் மதூசூதன் ராவ், நிக்கியின் அப்பாவாக வரும் நாகி நீடு, சில நிமிடங்களே வந்து போகும் வின்சென்ட் அசோகன், விக்ரம் பிரபுவின் அப்பாவாக வரும் பொன் வண்ணன் என மற்ற கேரக்டர்களும் கன கச்சிதம்.

ஒரு த்ரில்லர் படத்துக்குரிய டெம்போவை குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும்.

தன் உயிருக்கு உயிரான நண்பனின் மரணத்துக்கு விக்ரம் பிரபுவும் அவருடைய நண்பர்களும் தான் காரணம் என்கிற உண்மை தெரிய வரவும் அவர்களை பழி வாங்க சபதம் போடுகிறார் ‘புளியந்தோப்பு ரவி’யாக வரும் மதுசூதன் ராவ்.

படம் முழுக்க ‘புளியந்தோப்பு ரவி’ என்கிற பெயரை விக்ரம் பிரபுவும் அவரது நண்பர்களும் எத்தனை தடவை உச்சரித்தார்கள்? என்று ஒரு போட்டியே வைக்கலாம். அந்தளவுக்கு மதுசூதன் ராவ்வின் அந்த வில்லன் கேரக்டருக்கு பில்டப் கொடுக்கிற இயக்குநர் கடைசியில் அவரையும் டம்மியாக்கி விட்டு இன்னொரு வில்லனை அறிமுகப்படுத்துவது எதிர்பாராதது.

அப்படியானால் அந்த மெயினான கொடூர வில்லன் யார்? என்கிற சஸ்பென்ஸ் கிளைமாக்ஸில் தான் உடைகிறது. அதுவரை திரைக்கதை ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்களோடு காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கிறது.

இப்படி சீனுக்கு சீனுக்கு அடுத்தது இப்படித்தான் நகரும் என்று யோசிக்கவே விடாமல் திரைக்கதையோடு கட்டிப்போட்டு திரையில் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அசோக்குமார்.