Banner After Header

நிபுணன் – விமர்சனம்

0

nibunan

RATING : 3.5/5

‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூன் படமென்றால் ஆக்‌ஷன் இல்லாமலா? அவருக்கே உரிய பரபர ஆக்‌ஷனோடு க்ரைம் த்ரில்லர் படமாக வந்திருக்கும் படம் தான் இந்த ‘நிபுணன்.’

இப்படத்தின் இயக்குநர் அருண் வைத்யநாதனின் முந்தைய படம் ‘பெருச்சாளி’. மோகன்லான் நடித்த இந்த மலையாளத் திரைப்படம் கேரள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து  வந்திருக்கும் இந்தப்படத்தை வழக்கமான கிரைம் த்ரில்லராக இல்லாமல் ஒரு மாறுபட்ட படமாக துப்பறியும் நிபுணர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தியிருக்கிறார் அருண் வைத்யநாதன்.

ஒரு அரசியல்வாதி, இரண்டாவதாக ஒரு டாக்டர், மூன்றாவதாக ஒரு வக்கீல் என சிட்டிக்குள் அடுத்தடுத்து மூன்று பேர் ஒரே மாதிரியான அடையாளங்களுடன் கொலை செய்யப்படுகிறார்கள்.

அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிப்பதற்கான வேலையில் சிஜடி ஆபீஸரான அர்ஜூன் மற்றும் அவரோடு பிரசன்னா, வரலட்சுமி மூவரும் இறங்குகிறார்கள்.

ஒவ்வொரு கொலையிலும் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்துக் கொண்டிருக்கும் அந்தக் கொலைகாரன் விட்டுச் செல்கிற அடையாளங்களை ஒன்றிணைத்து யோசிக்கிற போதுதான் கொலைகாரன் அடுத்து அர்ஜூனைத்தான் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறான்? என்கிற ரகசியம் தெரிய வருகிறது.

அவன் ஏன் அர்ஜூனை கொல்லத் துடிக்க வேண்டும்? நடந்த கொலைகளுக்கும், அர்ஜூனுக்கும் என்ன சம்பந்தம்? கொலைகாரன் மூன்று வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்யக் காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதிலாக அமைவது தான் கிளைமாக்ஸ்.

ஏற்கனவே அர்ஜூன் பல ஆக்‌ஷன் படங்களில் போட்டு கழட்டிய காக்கி ட்ரெஸ் தான், இதிலும் சரியாகப் பொருந்தியிருக்கிறது. 32 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கட்டுமஸ்த்தான உடம்புடன், தனக்கே உரிய ஸ்டைலில் ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார். டூட்டி என்று வந்து விட்டால் சீரியஸாக இருப்பவர்  வீடென்று வந்து விட்டால் ஒரு சாராசரி மனிதராக மனைவி மற்றும், குழந்தையிடம் பாசமழை பொழிவது அழகான ரசனை. இது அவருக்கு 150- வது படமென்பது கூடுதல் விசேஷம்.

அர்ஜூன் மனைவியாக வரும் ஸ்ருதி ஹரிஹரன் அழகான இளம் மனைவியாக வருகிறார். அர்ஜூனுடன் அவர் செய்யும் ரொமான்ஸ் ஹைக்கூ கவிதை.

அர்ஜூன் தலைமையிலான துப்பறியும் குழுவில் முதன்மை அதிகாரியாக வருகிறார் பிரசன்னா. கேரக்டர் ரோல் ஆக இருந்தாலும் அதிலும் கூட ஒரே மாதிரியான இருந்து விடக்கூடாது என்று படத்துக்குப் படம் வித்தியாசம் காட்ட நினைக்கும் அவருடைய டெடிகேஷனுக்கு ஒரு ஸ்பெஷல் லைக்!

பெண் அதிகாரியாக வரும் வரலட்சுமி குரலுக்கும், உடலமைப்புக்கும் ஏற்ற கதாபாத்திரம் தான். குத்துச்சண்டை பழகுகிற போது இவருக்கும் ஒரு ஆக்‌ஷன் காட்சியை கொடுத்திருக்கலாமோ என்று சொல்ல வைக்கிறார்.

சில காட்சிகளே வந்தாலும் திருப்புமுனைக் காட்சிகளில் வந்து போகிறார்கள் சுஹாசினியும், சுமனும்! அர்ஜூனின் பாசமான தம்பியாக அமைதியே வருகிறார் வைபவ்.

முதல் கொலையை செய்து விட்டு அடுத்த கொலைக்கான அடையாளத்தை விட்டுச் செல்லும் அந்த துணிச்சலான சீரியல் கில்லர் யாராக இருக்கும்? ரசிகர்கள் மனதில் எழும் அந்தக் கேள்விக்கு கிளைமாக்ஸில் தான் சஸ்பென்ஸை உடைக்கிறார் இயக்குநர்.

சரி யார் அந்த சீரியல் கில்லர்? அதை நீங்களே படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.

இரவு நேரக் காட்சிகளில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. அதற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது நவீனின் பின்னணி இசை.

ஒரு கொலைக்கான காரணத்தையும், அதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிப்பதும் அவ்வளவு எளிதல்ல, அதன் பின்னணியை நூல் பிடித்தாற் போல செல்லும் போலீஸ் அதிகாரிகளின் பரபரப்பான வாழ்க்கையை  சீனுக்கு சீன் விறுவிறுப்பைக் கூட்டி ”இது  வழக்கமான கிரைம் த்ரில்லர் படம் இல்லை; அதுக்கும் மேல” என்று சொல்கிற அளவுக்கு திரைக்கதை அமைத்து இயக்கித் தந்திருக்கிறார் அருண் வைத்யநாதன்.

நிபுணன் – ‘புத்திசாலி’

Leave A Reply

Your email address will not be published.