Banner After Header

நிமிர் – விமர்சனம்

0

RATING – 3/5

நடித்தவர்கள் – உதயநிதி ஸ்டாலின், பார்வதி நாயர், நமீதா பிரமோத், மகேந்திரன், சமுத்திரக்கனி மற்றும் பலர்

இசை – (பாடல்கள்) – தர்புகா சிவா, பி.அஜினேஷ் லோகேஷ், (பின்னணி) – ரோனி ரபேல்

ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம்

இயக்கம் – பிரியதர்ஷன்

வசனம் – சமுத்திரக்கனி

வகை – நாடகம், காமெடி

சென்சார் சர்ட்டிபிகேட் – ”U”

கால அளவு – 2 மணி 10 நிமிடங்கள்

லியன் ஒருவனிடம் அடிவாங்கிய எளியவன் அவனை திருப்பி அடிக்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பது தான் இந்த ‘நிமிர்.’

திலீஷ் போத்தன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் தமிழ்ப்பதிப்பாக பிரியதர்ஷன் இயக்கத்தில் வந்திருக்கிறது இந்தப்படம்.

தென்காசியில் சிறிய போட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருபவர் ஹீரோ உதயநிதி ஸ்டாலின்.

அவருக்கும் முரட்டு ஆசாமியான சமுத்திரக்கனிக்கும் எதிர்பாராத விதமாக மக்கள் அதிகளவில் கூடியிருக்கும் பஜாரில் மோதல் ஏற்படுகிறது.

அந்த மோதலில் சமுத்திரக்கனியால் கடுமையாக தாக்கப்படுகிறார் உதயநிதி. பொதுமக்கள் கூடும் இடத்தில் சமுத்திரக்கனியிடம் அடி வாங்கியதை அவமானமாகக் கருதும் உதயநிதி தன்னை அடித்த சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும் வரை காலில் செருப்பு போடுவதில்லை என்று சபதம் போடுகிறார்.

அதற்காக கராத்தே உள்ளிட்ட சண்டைப்பயிற்சிகளை கற்றுக் கொண்டு தயாராகி வரும் அவருக்கு சமுத்திரக்கனி துபாயில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டார் என்கிற தகவல் வருகிறது.

இதனால் அதிர்ச்சியடையும் உதயநிதி ஸ்டாலின் தான் போட்ட சபதத்தில் ஜெயித்தாரா? இல்லையா? என்பதை சொல்வதே மீதிக்கதை.

நேரடித் தமிழ்ப்படங்களில் நடிக்கும் போது மொக்கையான கதைகளை டிக் செய்து அதற்கு பல கோடிகளை வெட்டியாக செலவு செய்யும் உதயநிதி ரீமேக் படங்களை தேர்வு செய்வதில் வியக்க வைக்கிறார். அந்த வகையில் ‘மனிதன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு உதயநிதிக்கு இன்னொரு வெற்றிப்படமாக இந்த ‘திமிர்’ படம் இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

மலையாளப் படங்கள் என்றாலே அவற்றில் ஒரு எளிமை தெரியும், இந்தப் படத்தில் தெரியும் நம் வாழ்வியலோடு கலந்து விட்ட அந்த எளிமை தான் படத்தை நம்மை ஒன்றிப்போய் ரசிக்க வைக்கிறது.

மாஸ் ஹீரோவாக ஆசைப்படும் உதயநிதிக்கு இந்தப் படம் மிகச்சிறந்த நடிகர் என்கிற பெயரைப் பெற்றுத்தரும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இரண்டு நாயகிகளுடனான அவருடைய காதல் அதில் ஒன்றில் தோற்றுப் போகிற போது அதை கனத்த வலியோடு கை விடும் போதும், அடுத்த காதல் வரும்போது அதை ஏற்றுக் கொள்கிற சந்தோஷ மனநிலையையும் கண்களில் மிக அழகாக பிரதிபலிக்கிறார்.

பார்வதி நாயர், நமீதா பிரமோத் என இரண்டு நாயகிகள், இருவரும் தங்கள் பங்குக்கு நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள். அதிலும் பார்வதியை விட அறிமுக நாயகியாக வரும் நமீத பிரமோத் மணி ரத்னம் படங்களில் வரும் நாயகிகளைப் போல துருதுருவென்றும், துணிச்சலான பெண்ணாகவும் வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் அப்பாவாக வரும் இயக்குநர் மகேந்திரன் படம் முழுக்க வந்தாலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் நம் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கிறார். அதான் அடிச்சி ஜெயிச்சிட்டல்ல, போ… என்று மகனை அடித்த சமுத்திரக்கனியை வார்த்தையால் அடக்குகிற காட்சிகளிலும், புகைப்படங்களை சிறப்பாக எடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருப்பதுமாக அசத்துகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் – கருணாகரன் கூட்டணியும் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

கஞ்சா கருப்பு, சில முன்பின் அறிமுகமில்லாத மலையாள நடிகர்களும் தங்கள் கேரக்டரை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள்.

”நம்ம கூடவே இருஜ்கிறவங்க உண்மையை சொல்ல மாட்டாங்கள்ள, இந்த மாதிரு திடீர்னு வர்றவங்க தான் சொல்வாங்க”

”மனசுல இவ்ளோ குப்பையை வெச்சுக்கிட்டு எத்தனை சாமி படத்துக்கு ப்ரேம் போட்டாலும் வெளங்காது.”

போன்ற சமுத்திரக்கனியின் கருத்துச் செறிவான வசனங்கள் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம்.

தர்புகா சிவா, பி.அஜினேஷ் லோகேஷ் இசையில் நெஞ்சில் மாமழை, பூவுக்கு தாழ்ப்பாள் எதற்கு? இரண்டு பாடல்களும் ஒன்ஸ்மோர் ரகம்.

தென்காசி, குற்றாலம் பகுதிகளின் இயற்கை அழகை மிச்சம் வைக்காமல் அள்ளி சில்லிட வைக்கிறது என்.கே ஏகாம்பரத்தின் பரிசுத்தமான ஒளிப்பதிவு.

மலையாளப் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழுக்காக சில மாற்றங்களை செய்து குடும்பத்தோடு சென்று ரசித்து பார்க்கக் கூடிய படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.

Leave A Reply

Your email address will not be published.