தமிழில் தான் டப்பிங் பேசுவேன்! – அறிமுகப் படத்திலேயே ஆச்சரியப்படுத்திய ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ

0

தெலுங்கில் வெறும் 6 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு சுமார் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை செய்த படம் ‘அர்ஜூன் ரெட்டி.’

இப்படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா ‘நோட்டா’ என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக தயாராகும் இப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்க இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஹீரோ அர்ஜூன் ரெட்டி கொடுத்த ஒரு வாக்குறுதி தான் விழாவில் கலந்து கொண்டவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா ‘பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு நிறைய பேர் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

இயக்குநர் ஆனந்த் சங்கர் என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்க முடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக் கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்’என்றார்.

தமிழ்சினிமாவில் நடிக்க வந்து பல வருடங்களாகியும் இன்றைக்கும் சில பிரபலங்களே தங்கள் காட்சிகளுக்கு வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேச வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அறிமுகப் படத்திலேயே நான் தமிழில் தான் டப்பிங் பேசுவேன் என்று சொன்னது தேவரகொண்டாவின் தொழில் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.