ஓம் சாந்தி ஓம் – விமர்சனம்

0

om-shanthi-om

Rating : 2.9/5

சூர்யாவின் ‘மாஸ்’ படத்தின் கதையும், இந்தப்படத்தின் கதையும் ஒரே மாவில் சுடப்பட்ட இரண்டு இட்லிகள் தான்.

2012 ஆம் ஆண்டு ரிலீசான ‘பாகன்’ படத்துக்குப் பிறகு ஸ்ரீகாந்த் கமிட்டான படம் இது. தயாரான வேகத்தில் ரிலீசாகியிருந்தால் ‘கிரேட் எஸ்கேப்’ ஆகியிருக்கும்!

திருச்சியில் கார் கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீகாந்த்தை துரத்தி துரத்தி காதலிக்கிறார் கதாநாயகி நீலம் உபதயா.

அவரை காதலிப்பதற்காகவே அவர் வேலை செய்யும் கார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து மிச்ச காதலை கண்டினியூவ் செய்கிறார்.

ஒருநாள் ஸ்ரீகாந்த் எங்கு நின்றாலும் அவரை முதியவர் ஜுனியர் பாலையா, ஒரு இளம்பெண், ஒரு சிறுவன், நடுத்தர வயதுப் பெண்மணி, ஒரு ஆண் என் ஐந்து பேர் பின் தொடர்கிறார்கள்.

அதில் இரண்டு பேர்களுக்கு அவர்கள் கேட்ட உதவிகளை செய்து விட்டு மூன்றாவதாக நடுத்தர பெண்மணிக்கு உதவி செய்யும் போது தான் உதவி கேட்டவர்கள் எல்லோருமே ஆவிகள். யாருமே மனிதர்கள் இல்லை என்கிற உண்மை தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் ஸ்ரீகாந்த் மீதமுள்ளவர்களின் கண்ணீர் கதைகளைக் கேட்டு அவர்களுக்கும் உதவியை செய்கிறார்.

மற்றவர்களின் கண்களுக்கு தெரியாமல் ஸ்ரீகாந்த் கண்களுக்கு மட்டும் ஆவிகள் தெரிவதால் அவர்களோடு பேசும்போது அவர் மெண்டல் ஆகியிருப்பாரோ என்று சந்தேகப்படுகிறார் நாயகி நீலம்.

இதனால் இருவரின் காதலுக்கும் இடையே விரிசல் வர பிரிந்து போன ஜோடி ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

படத்தின் ஆரம்பக்காட்சியே ஒரு பேருந்து விபத்தில் சிக்கிக் கொள்ள அதிலிருந்து ரத்தம் படிந்த கையோடு அறிமுகமாகிறார் ஸ்ரீகாந்த். அதன்பிறகு கதை செல்லும் போக்கும், சொல்லப்படும் விஷயங்களும் ஐந்து படங்களை ஒரே படத்தில் பார்த்த திருப்தியைத் தருகின்றன.

ஆவிகளாக வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை. அதை சமுதாயம் சம்பந்தமான பிரச்சனையாக்கி படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சூர்ய பிரபாகர்.

முன்பை விட கொஞ்சம் வெயிட் போட்டிருக்கும் ஸ்ரீகாந்த இடைவெளி விட்டதால் நடிப்பை கொஞ்சம் மறந்து விட்டார் போலிருக்கிறது. அதிலும் சிறுவனாக அவர் மாறும் காட்சிகளை எப்படி ரசிப்பது?

கதாநாயகியாக வரும் நீல உபதயா கொஞ்சம் லாங்க் சாட்டில் பார்த்தால் கவர்ச்சி நடிகை பாபிலோனாவை சின்ன வயதில் பார்த்த மாதிரி முகவெட்டு. ஆனால் படம் முழுக்க டீசண்ட்டான நாயகியாக வந்து போகிறார்.

காமெடிக்கு மலையாள நடிகர் பைஜ்ஜீயை போட்டிருக்கிறார்கள். அவரும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். ஆனால் காமெடி தான் வரமாட்டேன் என்கிறது…

அவர் இடத்தை மொட்டை ராஜேந்திரன் நிரப்பியிருக்கிறார். தனது அம்மாவிடம் ஸ்ரீகாந்த்தைக் காட்டி ”டேக் இட் மம்மி மை டாடி மம்மி” என்று சொல்லும் காட்சியில் தியேட்டரே கலகலப்பில் அதிர்கிறது.

ஆவிகளில் ஒருவராக வரும் ஜூனியர் பாலையா நெகிழ வைக்க, வில்லனாக வரும் நரேன் சைலண்ட்டாக மிரட்டுகிறார்.

பஸ் விபத்துக்குள்ளாகும் காட்சியை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன்.

விஜய் எபிநேசரின் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அத்தனையும் கேட்கும் ரகம் என்றாலும் காட்சிக்கு தேவையில்லாமல் வருவது எரிச்சல்.

பேய் படம் என்பதையும் தாண்டி ஒரு படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தில் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சூர்ய பிரபாகர். அதை பல சம்பவங்களின் தொகுப்பாக ஒரு செய்திச் சித்திரம் போல காட்டியிருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

Leave A Reply