ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – விமர்சனம்

0

RATING : 3/5

நடித்தவர்கள் – விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா (அறிமுகம்), காயத்ரி, ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனியல், விஜி சந்திரசேகர் மற்றும் பலர்

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு – ஸ்ரீ சரவணன்

வகை – அட்வென்ச்சர், காமெடி, நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’ ( அனைத்து வயதினரும் பார்க்கலாம்)

கால அளவு – 2 மணி நேரம் 28 நிமிடங்கள்

டத்துக்கு படம் வித்தியாசமான கதைக்களத்துடன் இறங்கியடிக்கும் விஜய் சேதுபதி – சாக்லேட் பாய் இமேஜிலிருந்து மாறியே ஆக வேண்டும் என்கிற வெறியுடன் போராடிக் கொண்டிருக்கும் கெளதம் கார்த்திக்கும் இணைந்து நடித்திருக்கும் படம் தான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.’

நம்பி வாங்க சந்தோஷமா சிரிச்சிட்டு போங்க என்கிற கொள்கையுடன் பிளாக் காமெடிப்படமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார்.

திருட்டு தான் குலத்தொழில் என்றாலும் திருடப் போகிற இடத்தில் யாரையும் வதைக்காமல், திருடுவது தான் விஜய் சேதுபதி கும்பலின் தர்மம்.

ஆந்திரவிலுள்ள எமசிங்க புரம் என்ற காட்டுப்பகுதி ஒன்றில் வாழும் இந்த கும்பலை விஜய் சேதுபதியும், அவரது அம்மா விஜி சந்திரசேகரும் தான் வழி நடத்துபவர்கள். எப்போது திருடச் சென்றாலும் எமனிடம் குறி கேட்டு விட்டுச் செல்வது தான் அவர்களின் வாடிக்கை.

அதன்படி ஒருநாள் எமனிடம் குறிகேட்டு விட்டு நகரத்துக்கு தனது கூட்டாளிகளுடன் திருட வருகிறார் விஜய் சேதுபதி. அப்படி திருடப்போன ஒரு வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் போட்டோ ஒன்றில் நாயகி நிஹாரிகாவைப் பார்க்கிறார். அவர் தான் என் மனைவி என்று அவரை கடத்திக் கொண்டு காட்டுக்குள் போக நினைக்கும் போது

நிஹாரிகா இன்னொரு நாயகனாக கெளதம் கார்த்திக்கை காதலிக்கிற விஷயத்தையும் தெரிந்து கொள்கிறார். இருந்தும் கூட அவரை கடத்திக் கொண்டு காட்டுக்குள் வருகிறார் விஜய் சேதுபதி. கடத்தப்பட்ட தனது காதலியைத் தேடி காட்டுக்குள் வருகிறார் கெளதம் கார்த்திக்.

விஜய் சேதுபதி ஏன் நிஹாரிகாவை கடத்தினார்? தனது காதலியை விஜய் சேதுபதியிடமிருந்து கெளதம் கார்த்திக் மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் புகுந்து விளையாடும் விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தின் எமன் கேரக்டர் இன்னொரு அல்வா சாப்பிடுகிற மாதிரி. நிஜத்தில் அவர் எப்படியெல்லாம் பழகுவாரோ? நடந்து கொள்வாரோ? அப்படியே தான் திரையிலும் கலக்குகிறார்.

தொடர்ச்சியாக அவருடைய படங்களை ரசிகர்கள் பார்ப்பதால் ஒரே மாதிரியாக நடிக்கிறாரோ என்று கூட சந்தேகிக்கத் தோன்றும் ஆனால் தனது சின்னச் சின்ன வித்தியாசமான நடிப்பின் மூலம் அந்தக் குறையைச் சரி செய்து விடுகிறார்.

ரமேஷ் திலக், ராஜ்குமார் இருவர் கூட்டணியுடன் சேர்ந்து அவர் செய்யும் சேட்டைகளும், அதற்கேற்ற உடல்மொழிகளும் தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளுகிறது. அதேபோல கெளதம் கார்த்திக் நண்பராக வரும் டேனியலும் காமெடியில் தியேட்டரை களைகட்ட வைக்கிறார்.

வெட்கம், மானம், சூடு, சொரணை என எதுவுமே இல்லாத ஒரு ஜாலியான பேர்வழி கேரக்டரில் வருகிறார் கெளதம் கார்த்திக். பல காட்சிகளில் அப்பா கார்த்திக்கின் நடிப்பை ஞாபகப்படுத்துகிறார்.

அறிமுக நாயகியான ஆந்திர வரவு நிகாரிகா முகத்தில் குழந்தைத்தனம் தாண்டவமாடினாலும் நடிப்பில் அசர வைக்கிறார்.

விஜய் சேதுபதியை ஒருதலையாகக் காதலிப்பவராக வருகிறார் இன்னொரு நாயகியான காயத்ரி. தன்னுடைய காதலை விஜய் சேதுபதியிடம் சொல்ல தயங்குகிற அதே சமயம் விஜய் சேதுபதியை திருமணம் செய்வதற்காக அவர் போடும் திட்டம் ரசிக்க வைக்கிறது.

மெலோடிப் பாடல்களுக்குப் பெயர் போன ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்தின் பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்கிறார். காட்டுப் பகுதியில் போடப்பட்ட அந்த பிரம்மாண்டமான செட்டுகளும், அதற்கேற்ற ஒளிப்பதிவும் கவர்கின்றன.

இரண்டரை மணி நேரம் ஜாலியாக ரசித்துப் பார்த்து சிரித்து விட்டுச் செல்ல வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் மட்டுமே படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இடைவேளைக்கு முன்பு வரை நேரம் போவது தெரியாமல் காட்சிகள் நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பிறகு மெதுவாக நகரும் காட்சிகளும், காடு சம்பந்தப்பட்ட நீளமான காட்சிகளும் போரடிக்கிறது.

இப்படித் தெரியும் சின்னச் சின்ன குறைகளை ஒரு பொருட்டே இல்லை என்றால் ஒரு கலகலப்பான படமாக குடும்பத்தோடு பார்த்து ரசிக்கத் தோதான படம் தான் இந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.

Leave A Reply

Your email address will not be published.