Banner After Header

படைவீரன் – விமர்சனம்

0

RATING – 3/5

நடித்தவர்கள் – விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அகில், அம்ரிதா (அறிமுகம்) மற்றும் பலர்

இசை – கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன்

இயக்கம் – தனா (அறிமுகம்)

வகை – ஆக்‌ஷன், நாடகம்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 10 நிமிடங்கள்

னுஷின் ‘மாரி’ படத்தில் வில்லனாக வந்த பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் முதல்முறையாக தனி ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம் தான் இந்த ‘படை வீரன்.’

இப்படத்தின் இயக்குநர் தனா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பட்டை தீட்டப்பட்டவர். ஆனால் படத்தில் மணிரத்னம் ஸ்டைல் என்று எதுவுமே இல்லை.

தேனியில் அருகருகே உள்ள இரண்டு கிராமங்களில் வசிக்கும் ஆதிக்க சாதி மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகிறது.

இதில் ஆதிக்கச் சாதி குடும்பத்தைச் சேர்ந்த சேர்ந்தவரான ஹீரோ விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கும் போகாமல் ஊருக்குள் நண்பர்களுடன் வெட்டியாகச் சுற்றி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான நாயகி அம்ரிதாவுக்கு வருகிற வரன்களை எல்லாம் ஏதாவது ஜாலியாக சொல்லி களைத்து விடுகிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி செல்லமாய் மோதல் வருகிறது. போகப்போக அந்த மோதல் காதலாக மாறுகிறது.

இதற்கிடையே பொதுமக்கள் மத்தியில் போலீசுக்கு இருக்கும் மவுசைப் பார்த்து, தானும் அந்த வேலையில் முடிவுக்கு வருகிறார். அதற்கான தகுதிகள் இல்லாததால் தனது மாமா பாரதிராஜா மூலம் லஞ்சம் கொடுத்து பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார். பயிற்சி காலத்தில் அடி தாங்க முடியாமல் ஊருக்கு ஓடி வரும் அவரை நாயகி அம்ரிதா கேலி செய்வதோடு, நீயெல்லாம் எங்க போலீஸ் ஆகப்போற? என்று கிண்டல் செய்கிறார்.

காதலியால் அவமானப்பட்டு விட்டதாக நினைத்து கூனிக்குறுகும் விஜய் யேசுதாஸ் மீண்டும் பயிற்சிக்கு சென்று போலீசுக்கானமுழுத்தகுதிகளையும் பெறுகிறார்.

போலீஸ் ஆனதும் முதல் வேலையாக அவரது ஊரிலேயே ஏற்படும் சாதிக்கலவரத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் சொந்த பந்தங்களாகிப் போய் விட, தன் ஊர் மக்களிடையே சாதி உணர்வைத் தூண்டி விட்டு தொடர் உயிர்பலிகளுக்கு காரணமாக இருப்பதே தனது சித்தப்பா கவிதா பாரதி தான் என்கிற உண்மை மாமா பாரதிராஜா மூலம் தெரிய வருகிறது.

சாதி வெறி பிடித்த சொந்த பந்தங்கள் முக்கியமா? அல்லது போலீசுக்கான கடமை முக்கியமா? என்கிற இக்கட்டான சூழலை எப்படி அவர் சமாளிக்கிறார்? சாதி வெறியைத் தூண்டி விடும் கவிதா பாரதிக்கு எப்படி பாடம் கற்பிக்கிறார்?  என்பதே மீதிக்கதை.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸின் நடிப்பு நிச்சயமாக எதிர்பாராதது. ஒரு அக்மார்க் கிராமத்து இளைஞனாகவும், எந்த தடுமாற்றமும் இல்லாமல் வசனங்கள் உச்சரிப்பிலும் அசர வைக்கிறார்.

அசல் கிராமத்துப் பெண்களுக்கே உரிய துணிச்சலும், தைரியமுமாக துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக வருகிறார் அறிமுக நாயகி அம்ரிதா . தன்னை ‘ஆம்பள’ என்று கலாய்க்கும் விஜய் யேசுதாஸை அடுத்த நிமிடம் முக வசீகரத்தால் கிறங்கி விழ வைக்கிற காட்சியில் ரசிகர்களும் சொக்கித்தான் போகிறார்கள்.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதியவராக வருகிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. வருகிற காட்சிகளில் எல்லாமும் யதார்த்தம். சந்தையில் விளையாடுவது, ஊரில் உள்ள பெண்களை கேலி செய்வது, மகளுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து கண் கலங்குவது, ராணுவ வீரன் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வது என நடிப்பில் நவசரம் கலந்து கலக்குகிறார்.

மொத்த ஊரும் சாதித் திமிரோடு திரிந்து கொண்டிருக்க, ”ஏண்டா நாங்க தான் ஆண்ட பரம்பரைன்னு பெருமை பீத்திக்கிறீங்களே? அப்போ வெள்ளைக்காரன் 200 வருஷம் நம்ம நாட்டை ஆண்டானே அப்போ அவன் யாருடா?” என்று சொல்கிற காட்சியில் சாதி வெறியர்களுக்கு சாட்டியடி கொடுக்கிறார். வைரமுத்து விவகாரத்தில் மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்த வெச்சிறாதீங்க… என்று சாதி அடையாளத்தை எச்சரிக்கையாக ஞாபகப்படுத்திய பாரதிராஜாவை அவர் சார்ந்த சாதிக்காரர்களைப் பார்த்து ”திருந்துங்கடா” என்று பேச வைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

சாதி வெறிப்பிடித்த தலைவராக வரும் கவிதா பாரதி பார்வையாலேயே படம் முழுக்க பயத்தைக் கொடுக்கிறார். கிளைமாக்ஸில் அவருக்கு நேரும் முடிவும் எதிர்பாராதது.

பின்னணி இசையில் தனக்கே உரிய பாணியில் மேஜிக் காட்டியிருக்கிறார் கார்த்திக் ராஜா, ‘மாட்டிக்கிட்டேன்’ மனசை இதமாக்கும் மெலோடிப் பாடல். ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவில் தேனி அதைச்சுற்றியுள்ள பகுதிகள் அழகோ அழகு!

இன்றைக்கும் தென் மாவட்டங்களில் ஆதிக்க சமூகத்தினருக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குமிடையே நடந்து கொண்டிருக்கும் சாதி மோதல்களின் பின்னணியில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் தனா.

சாதி பெருமைக்காக ரத்த உறவையே கொடூரமாக கொலை செய்யத் துணியும் உயர் சாதிக்காரர்களின் இரக்கமற்ற செயல்களை மீண்டும் அவர்களது வாரிசுகளுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக காட்சிகளாக வைத்திருப்பதை முழுமையாகத் தவிர்த்திருக்கலாம்.

முக்கால் வாசிப் படத்தில் ஒரு குறிப்பிட்ட உயர் சாதியினரின் பெருமைகளை மட்டுமே காட்டி விட்டு, கிளைமாக்ஸில் சாதியே வேண்டாம் என்று டக்கென்று ‘நடுநிலை’ வகிப்பது மட்டும் எந்த மாதிரியான டிசைன்? என்பது படை வீரனுக்கே வெளிச்சம்! ஆனால் முத்தையாவைப் போல் முழுப்படத்திலும் சாதி வெறி பிடிக்காமல் பார்த்துக் கொண்டது பாராட்டுக்குரியது.

Leave A Reply

Your email address will not be published.