Banner After Header

பகிரி – விமர்சனம்

0


pagiri-reviewRATING 2.3/5

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தடுக்கி விழுந்தால் ஒரு தெருவுக்கு ஏழெட்டு எஸ்.டி.டி பூத்துகள் இருக்கும். இப்போது அதே சைஸ் இடங்களில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகள் அணிவகுக்கின்றன.

அரசே டாஸ்மாஸ் கடைகளை நடத்தி மக்களை முழு நேர குடிகாரர்களாக்குவது சரியா? தவறா? என்கிற கேள்விக்கு நியாயமான பதிலைச் சொல்வதில் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல நீதிமன்றங்களே தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றன.

அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதைச்சுற்றி பின்னணப்பட்டு காமெடி கலந்த ஸ்ட்ராங்க் மேசேஜ் படமாக வந்திருப்பது தான் இந்த ”பகிரி”.

நாயகன் பிரபு ரணவீரனுக்கு நாஸ்மாக் கடையில் வேலைக்குச் சேர்வது தான் லட்சியம். விவசாயத்தை கவனிக்கச் சொல்லும் அப்பாவிடம் ”நாஸ்மாக்ல வேலை செய்றவங்களுக்குத்தாம்பா இப்போ மரியாதை. எந்த கவர்மெண்ட் ஆபீஸ்லேயும் போலீஸ் பாதுகாப்புக்கு நிக்குதா? ஆனா நாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பா நிக்குது. அப்படிப்பட்ட நாஸ்மாக் கடையில வேலை செய்றது தான் என்னோட லட்சியம்” என்று வியாக்கியானம் பேசி வேலைக்கு சேர முயற்சிக்கிறார்.

அதற்கான ஆட்களைப் பிடித்து லஞ்சம் கொடுத்து அப்பாயின்மெண்ட் ஆர்டர் கையில் கிடைத்த முதல்நாளே நாயகனுக்கு வேலை கிடைக்கும் கடை பொதுமக்களால் அடித்து நொறுக்கப்படுகிறது. அதிர்ச்சியடையும் நாயகன் ஒருநாள் அரசே மக்கள் மத்தியில் பரவும் போராட்டங்களால் எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடிவிடுவதாக கனவு காண்கிறான்.

அந்த கனவு பழித்ததா? அல்லது நாஸ்மாக்கில் வேலை செய்யும் அவனது நிஜக்கனவு நிறைவேறியதா? என்பதே கிளைமாக்ஸ்.

நாயகனாக வரும் பிரபு ரணவீரனுக்கு இது முதல்படம். ஆனால் படத்துல நடிப்பைப் பார்த்தா அப்படித் தெரியல ஜி!. நாஸ்மாக்கில் வேலை செய்ய அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தவுடன் நேர்முகத் தேர்வில் உயர் அதிகாரி கேட்கும் கேள்விகளுக்கு பட்டு பட்டென்று பதில் சொல்லி அவரையே மலைக்க வைப்பது செம காமெடி.

நாயகி ஷ்ரவியாவை பார்த்த மாத்திரத்திலேயே காதலிக்கத் துரத்துவதும் பதிலுக்கு நாயகியும் நாயகன் ஐ லவ் யூ சொன்னதும் அதிர்ச்சியடைந்து காதலை ஏற்றுக் கொள்வதும் வழக்கமான தமிழ்சினிமா ஃபார்முலா.

சின்ன பொண்ணாக அம்சமான நாயகியாக அறிமுகமாகியிருக்கும் ஷ்ரவியா திருத்திய அழகு முகமாக படம் முழுக்க ஜொலிக்கிறார். நல்ல படங்கள் வரிசைக்கட்டினா ஒரு ரவுண்டு வரலாம் இந்த அழகு மயில்!

படத்தில் காமெடிக்காக ரவிமரியாவையும் ஏ.வெங்கடேஷையும் இறக்கி விட்டிருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். திருமண வயசைத் தாண்டிய ரவிமரியா ஏ.வெங்கடேஷ் பொண்டாட்டியை டாவடிப்பது செம கலாய். அதைவிட ஏ. வெங்கடேஷின் மனைவி ”அண்ணா…” என்று சொல்லி ரவிமரியாவுக்கு ஷாக் கொடுப்பதும் கலாய்க்கு மேல் கலாய். இருந்தாலும் ஏ.வெங்கடேஷைக் காட்டிலும் காமெடியில் நம்மை சிரிக்க வைப்பதில் ஸ்கோர் செய்வது ரவிமரியா தான்.

மதுபானத்துறை அமைச்சராக வரும் டி.பி.கஜேந்திரன் மூன்று பொண்டாட்டிகளை வைத்து சமாளிப்பதும், அதற்கு ஏர்டெல், ஐடியா, வோடபோன் என ரகசியப் பெயர்களை வைத்துப் பேசுவதும் தியேட்டரை அதிர வைக்கிறது. ”சார்ஜே நிக்காத போனுக்கு மூணு சிம்கார்டா’..?’ என்று அவரது சமாளிப்பை கிண்டல் செய்யும் போது தியேட்டர் கூடுதலாக அதிர்கிறது.

தெருவுக்குத் தெரு மதுபானக்கடையை அரசு திறந்து வைத்திருக்கிறது என்கிற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஒரு மதுபானக்கடையை திறப்பதற்காக இடம் கிடைக்காமல் அரசாங்கம் எவ்வளவு கஷ்டப்படுகிறது? என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிற இயக்குநர் அந்த ஒரு காட்சியிலேயே இது டாஸ்மாக் கடைகளை ஆதரிக்கிறதோ என்கிற சந்தேகத்தையும் சேர்த்தே ரசிகர்களிடம் கிளப்பி விடுகிறார்.

முக ஸ்டாலினின் ”நமக்கு நாமே” பயணத்தை ”எனக்கு நானே” என்று நக்கல் செய்திருக்கும் இயக்குநர் ”பொம்பளைங்களே சாராய பேக்டரி வெச்சு நடத்துறாங்க…” என்று ஆளும் கட்சியை விளாசுவதையும் விட்டு வைக்கவில்லை. இப்படி படம் முழுக்க ஆங்காங்கே வருகிற நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனங்கள் தான் படத்தில் கூடுதல் கவனத்தையும் ரசிப்பையும் ஒரு சேரத் தருகின்றன.

”விவசாயத்தைக் கவனிக்கணும்” என்று சொல்ல வந்த இயக்குநர் இரவு பத்து மணிக்கு மேல் டோர் டெலிவரி உள்ளிட்ட சாராயக் கடைகளின் விற்பனைக்கு புதுப்புது ஐடியாக்களை படத்தில் வைத்திருப்பது சரியா?

கருணாஸின் இசையில் பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம் இல்லை என்றாலும் செவிகளை டேமேஜ் ஆக்காத ரகம்.

சாராயக்கடைகளில் கட்டிங் போடுவதில் ஆரம்பித்து அரசியல் தலைவர்கள் கட்டிங் வாங்குவது வரை எல்லா விஷயங்களையும் காட்சிப்படுத்தியிருப்பதோடு அது சம்பந்தமான வசனங்களையும் நீட்டி முழக்காமல்  வைத்திருக்கும் இயக்குநரின் துணிச்சலுக்கு பத்து ஃபுல் அளவுக்கு பாராட்டுகள்.

பகிரி – விழிப்புணர்வு!

Leave A Reply

Your email address will not be published.