Banner After Header

பேட்ட – விமர்சனம் #Petta

0

RATING – 3/5

நடித்தவர்கள் – ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், கார்த்திக் சுப்புராஜ்

ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு

இசை – அனிருத்

இயக்கம் – கார்த்திக் சுப்புராஜ்

வகை – ஆக்‌ஷன், நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 52 நிமிடங்கள்

‘லிங்கா’, ‘கபாலி’, ‘காலா’ என தொடர்ந்து நொந்து போயிருந்த ரஜினி ரசிகர்களுக்கு 80, 90களில் நாங்கள் பார்த்து ரசித்த ரஜினியை கண்முன்னே கொண்டு வந்து உற்சாக டானிக் ஆகவும், பொங்கல் கொண்டாட்டமாகவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கித் தந்திருக்கும் படம் தான் இந்த ‘பேட்ட’.

ஊட்டியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்கிறது அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களான பாபி சிம்ஹா கோஷ்டி.

அங்கு ஹாஸ்டல் வார்டனாக வந்து சேரும் ரஜினி வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே பாபி சிம்ஹா அன்கோவின் கொட்டத்தை அடக்குகிறார். அதோடு அதே கல்லூரியில் படிக்கும் காதலர்களான சனத்தும், மேகா ஆகாஷையும் கொலை செய்ய ஒரு கும்பல் ஹாஸ்டலில் நுழைகிறது.

அதற்கு பாபி சிம்ஹா தான் காரணம் என்று நினைத்தால், வந்ததோ வட இந்தியாவிலிருந்து ஒரு கும்பல். அந்த கும்பல் யார்? அவர்களுக்கும் காதல் ஜோடிக்கும் என்ன சம்பந்தம்? அவர்களிடமிருந்து காதல் ஜோடியை ரஜினி காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

80, 90 களில் பார்த்து ரசித்த ரஜினியை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்பது தான் ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

அவரே ரஜினி ரசிகர் என்பதாலோ என்னவோ உடை, மேக்கப், ஸ்டைல் என எல்லாவற்றிலும் ரஜினியை அங்குலம் அங்குலமாக பார்த்து திரையில் பழைய ரஜினியாக மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்.

ரஜினிக்கும் வயது ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதைத் தாண்டி பழைய ரஜினியாக மாறி காமெடி கலந்த குறும்புடனும், சுறுசுறுப்புடனும் திரையில் அதகளம் செய்கிறார்.

‘பேட்ட’ வேலன், காளி என இரண்டு வித கதாபாத்திரங்களுக்கு ஜோடியாக த்ரிஷாவும், சிம்ரனும் வருகிறார்கள். முழுப்படமும் ரஜினியை சுற்றியே நகர்வதால் அவர்கள் கேரக்டர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. அதேபோல சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இவர்களில் விஜய் சேதுபதிக்குத் தான் கொஞ்சம் எஸ்க்ட்ரா ஸ்கோப்.

வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் ஆள் பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் கண்களில் வில்லத்தனத்தை காட்டுவதில் கில்லியாக இருக்கிறார். அதிலும் சொந்த குடும்பத்தையே குண்டுக்கு தீக்கிரையாக்கி விட்டு அசால்ட்டாக உட்கார்ந்து கொண்டிருப்பது வில்லத்தனத்தின் உச்சம்!

அனிருத்தின் இசையில் ‘மரண மாஸ்’, ‘உல்லாலா’ பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. அதற்கேற்ற நடன அமைப்பை வைக்காமல் சொதப்பியிருக்கியிருக்கிறார்கள் திருவாளர் டான்ஸ் மாஸ்டர்கள்.

திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் கலக்கல். இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் அட்லீஸ்ட் 20 நிமிடங்களாவது கத்தரி போட்டிருக்கலாம் எடிட்டர் சார்.

”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்பதில் ஆரம்பித்து ”புதுசா வர்றவனை மிரட்டுறதும், துரத்துறது அரசியலும் இங்க தான் தொடங்குது. இந்த பூமி எவன் அப்பன் சொத்தும் இல்ல.” என்பது வரை ரஜினியின் அரசியல் களத்துக்கான வசனங்களையும் அங்கங்கே தூவியிருக்கிறார்கள்.

காலம் காலமாக நாம் பார்த்து ரசித்து சலித்துப் போன பழி வாங்கும் கதை தான் என்றாலும், திரைக்கதையில் சுவாரஷ்யங்களை புகுத்தி, இப்படி ஒரு ரஜினியைத் தான் நாங்கள் திரையில் பார்க்க ஆசைப்பட்டோம் என்று நீண்ட நாட்களாக காத்துக் கிடந்த ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்கள். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

Leave A Reply

Your email address will not be published.