Banner After Header

பிச்சுவா கத்தி – விமர்சனம்

0

PICCHIVA-KATHTHI

RATING : 2.5/5

நட்சத்திரங்கள் : இனிகோ பிரபாகரன், யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், பால சரவணன், காளி வெங்கட், ஸ்ரீ பிரியங்கா, அனிஷா மற்றும் பலர்

இயக்கம் : ஐய்யப்பன்

வகை : ஆக்‌ஷன்\ க்ரைம்\ டிராமா

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U/A’

கால அளவு : 2 மணி நேரம் 8 நிமிடங்கள்

விளையாட்டுத்தனமாக செய்யத் துணிகிற ஒரு திருட்டு வேலையால் பின்னாளில் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கை தடம் மாறிப்போகும் என்பதைச் சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘பிச்சுவா கத்தி.’

தஞ்சாவூரிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் மூவரும் வேலையில்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றுபவர்கள்.

ஒருநாள் போதையில் ஆடு ஒன்றை திருட முயற்சித்த குற்றத்துக்காக மூவரையும் தூக்கிக் கொண்டு போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது.

அங்கு 30 நாட்களுக்கு கும்பகோணத்திலுள்ள காவல்நிலையம் ஒன்றில் தினமும் வந்து கையெழுத்து போட வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஜாமீன் கிடைக்கிறது.

முதல் நாள் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடும் போதே ஆளுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 30 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன் என்று மூவரையும் மிரட்டுகிறார் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான சரத்ராஜ்.

எதற்கு வம்பு என்று பயப்படும் மூவரும் தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் பணம் கேட்டுப் பார்க்கிறார்கள். ஆனால் யாருமே தர முன் வராத நிலையில் இரவில் இன்னொரு நாயகியான அனிஷாவிடம் செயினை பறிக்க முயற்சித்து மீண்டும் போலீசில் சிக்குகிறார்கள்.

அவர் கொடுத்த புகாரை வைத்து இன்ஸ்பெக்டர் பணத்துக்காக மூவரையும் தொடர்ந்து டார்ச்சர் செய்ய, வேறு வழி தெரியாமல் சேட்டு ஒருவரிடம் கேட்ட பணத்தை விட கூடுதலாகவே திருடி இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கிறார்கள்.

அத்தோடு பிரச்சனை முடிந்தது. ஊரில் தனக்காகக் காத்திருக்கும் காதலி ஸ்ரீபிரியங்காவை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்கும் இனிகோவிடம், மேற்படி இரண்டு குற்றங்களையும் சொல்லிக் காண்பித்தே மூவரையும் தொடர்ந்து அந்த ஊரில் பிரபல ரெளடியான ஆர்.என்.ஆர் மனோகர் சொல்கிற சட்டத்துக்குப் புறம்பான வேலைகளை செய்யச் சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.

தண்டனை காலமான ஒரு மாதம் வரை அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து விட்டு ரெளடி, மற்றும் போலீசிடமிருந்து விலகி ஊருக்கு திரும்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் ரெளடியும், போலீசும் மூவரையும் விடுவதாக இல்லை.

இதனால் வெறுப்படையும் இனிகோ தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதே அனிஷா தான் என்று அவரை பழி வாங்க போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்கும் போது இன்னொரு நாயகனான தன் காதலன் செங்குட்டுவனை காதல் திருமணம் செய்ய அதே காவல் நிலையத்துக்கு வருகிறார் அனிஷா.

திட்டமிட்டபடி இனிகோ அனிஷாவை பழி வாங்கினாரா? அல்லது இதுவரை செய்ததெல்லாம் போதுமென்று ஊர் திரும்பினார்களா? என்பதே கிளைமாக்ஸ்.

பல படங்களின் ஹீரோவின் நண்பராக வந்த இனிகோ பிரபாகர் இதில் ஹீரோவாக காட்சி தருகிறார். ரொமான்ஸ், காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என பல முகங்களை காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை இனிகோவும் அவரது நண்பர்களாக வரும் ரமேஷ் திலக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதிலும் யோகி பாபு அடிக்கும் டைமிங் கவுண்டர்கள் எல்லாமே காமெடிக்கு உத்தரவாதம்.

இனிகோவின் காதலியாக வரும் ஸ்ரீபிரியங்காவுக்கு படத்தில் அவ்வளவாக காட்சிகள் இல்லை. அதோடு மெலிந்து போய் வத்தலும், தொத்தலுமாக பரிதாபமாகக் காட்சியளிக்கிறார்.

இனிகோ பிரபாகர் தான் ஹீரோ என்றாலும் படத்தில் அவரை விட அதிக காட்சிகளில் வருவது இன்னொரு ஹீரோவான செங்குட்டுவன் தான். முதல் படம் போல இல்லாமல் நடிப்பில் குறை வைக்கவில்லை. அவருக்கு ஜோடியாக வரும் அனிஷாவுக்கும் காட்சிகள் அதிகம். சளைக்காத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், கோலி சோடா சீதா மூவரும் தாங்கள் வருகிற காட்சிகளில் கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்கள். ஆர்.என்.ஆர் மனோகரை விட கொடூர வில்லனுக்குரிய நடிப்பை கொட்டியிருக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் சேரன்ராஜ்.

மன்னார் அன் கம்பெனியில் வேலை செய்பவராக வரும் காளி வெங்கட் எம்.எல்.எம் எனப்படும் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் மோசடிகளை விளக்கமாகச் சொல்லி ரசிகர்களை எச்சரிக்கிற இடம் அருமை.

என் .ஆர். ரகுநந்தன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும்படி அமைந்திருக்கிறது, கிராமத்து அடையாளங்களையும், இரவு நேர காட்சிகளையும் உள்ளது உள்ளபடி திரையில் கொண்டு வந்திருக்கிறது கே.ஜி.வெங்கடேஷின் கேமரா.

இனிகோவும் அவரது நண்பர்களும் ஆட்டை திருடவில்லை. திருட முயற்சிக்கிறார்கள். அதற்கெல்லாம் போய் 30 நாட்கள் போலீஸ் ஸ்டேஷனில் வந்து கையெழுத்துப் போடச்சொல்வது நன்னடத்தை தண்டனையாகுமா?

நீதிமன்றம் வரை சென்று தண்டனை பெற்றவர்களை அவ்வளவு எளிதில் இன்ஸ்பெக்டர் லெவலில் இருக்கும் ஒருவர் மிரட்டி விட முடியுமா?

இன்ஸ்பெக்டர் தான் இனிகோவையும் அவரது நண்பர்களையும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளைச் செய்யச் சொல்லி தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார். அவரை விட்டு விட்டு புகார் கொடுத்த ஒரே காரணத்துக்காக அனிஷாவை இனிகோ கொலை செய்ய முயற்சிப்பது சரிதானா? போன்ற லாஜிக் மீறல் கேள்விகளும்…

முந்தைய காட்சியில் ”டேய் உன்னால தாண்டா என் மகள் வெளியில தலை காட்ட முடியாம வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறா…” என்பார் அனிஷாவின் அப்பா. அடுத்த சீனில் ”டேய் அனிஷா எங்க இருக்கான்னே தெரியலடா..” என்று தன் நண்பர் பால சரவணனிடம் சொல்லி புலம்புவார் செங்குட்டுவன். போன்ற அப்பட்டமாகத் தெரியும் சின்னச் சின்ன சொதப்பல்களும் படத்தின் ரசிப்புத் தன்மையை வெகுவாகக் குறைக்கின்றன.

போலீஸ் அதிகாரிகள் நினைத்தால் அப்பாவி இளைஞர்களை பகடைக்காயாக்கி தாங்கள் நினைத்ததை எப்படியெல்லாம் சாதித்துக் கொள்வார்கள்? என்பதை வெட்ட வெளிச்சமாக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் ஐயப்பன். அதோடு படத்தில் ஆங்காங்கே பளிச்செனத் தெரியும் மேற்படி சில குறைகளையும் சரி செய்திருந்தால் இந்தப் பிச்சுவா கத்தி இன்னும் ‘ஷார்ப்’ ஆகியிருக்கும்!

Leave A Reply

Your email address will not be published.