பொன்மகள் வந்தாள்- விமர்சனம்


தமிழ்சினிமாவில் நாயகன் மட்டுமே அறம் பேசுவார். அவருக்கு ஒரு இளைப்பாறுதல் போன்ற வஸ்துவாகத் தான் நாயகி பாத்திரம் கட்டமைக்கப்படும். எப்பவாவது சில அத்திப்பூக்கள் பூப்பதுண்டு. இப்போது அப்படியான அத்திப்பூக்கள் நிறைய பூக்கின்றன. பெண்களும் நாயகனுக்கு நிகரான கனமான பாத்திரங்களை ஏற்று அசத்தி வருகிறார்கள்.

பொன்மகள் வந்தாள் இன்னொரு அத்திப்பூ என்று சொல்ல முடியாவிட்டாலும் இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ற படமாக வந்துள்ளது.

நாடே ஒரு பெண்ணை கொலைகாரி எனப்பட்டம் சூட்டுகிறது..இல்லை போலீஸால் சூட்டப்படுகிறது. பதினைந்து வருடங்களுக்குப்.பிறகு அந்தப்பெண் கொலைகாரி அல்ல என்று வழக்கறிஞர் வெண்பா வாதாட வருகிறார். அவருக்கு எதிராக பலம் பொருந்திய அதிகாரம் இருக்கிறது. நீதியை மேல் எழ விடாமல் அதிகாரம் தடுக்கிறது. அதை வெண்பா எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே பொன்மகள் வந்தாள்.

Related Posts
1 of 13

வெண்பாவாக வரும் ஜோதிகா மிக நேர்த்தியாக நடித்துள்ளார். அவரின் அப்பா கேரக்டரில் பாக்கியராஜ் பாசத்தைப் பொழிகிறார். பிரதாப் போத்தன் நடிப்பு நிஜமாகவே தரம். பார்த்திபன் கோர்ட் வாதங்களில் படத்தை எனர்ஜியாக வைத்திருக்க உதவுகிறார். தியாகராஜன் வில்லனத்தில் செயற்கைத் தனம் அப்பட்டமாக தெரிகிறது.

படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் சட்டத்தை விட அதிகமாக இருக்கின்றன. நிறைய செயற்கைத்தனமான காட்சிகளும் இருக்கின்றன. அதையும் மீறி படம் சமகாலத்தில் பெண் குழந்தைகள் சந்திக்கும் வலிகளையும், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு அதிலிருந்து தப்பிக்க அதிகார வர்க்கம் செய்யும் அட்டுழியங்களை உடைத்துச் சொல்லி இருப்பதற்காகவும் இப்படத்தை கொண்டாடலாம்.

பிரெட்ரிக் இயக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். பாடல்களும் பின்னணி இசையும் ஓரளவு ஓ.கே ரகம். ஒளிப்பதிவு கன கச்சிதம்.

மிக வலிமையான கதையை இன்னும் வலிமையாகச் சொல்லிருக்கலாம்.இருந்தாலும் பாதகமில்லை. பொன்மகளை வரவேற்கலாம்!