Banner After Header

தயாரிப்பாளர்கள் நிம்மதி : பெப்ஸி தொழிலாளர்களின் அராஜகத்துக்கு முடிவு கட்டிய விஷால்!

0

vishal2

லகத்தில் எங்காவது சம்பளம் கொடுக்கிற முதலாளிகள் தனக்குக் கீழ் வேலை செய்கிற தொழிலாளிகளின் முன்னால் கை கட்டி, கூனிக்குருகி நின்று அவர்கள் பேசுகிற கேவலமானப் பேச்சைக் கேட்கிற அவலத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

இந்த மாதிரியான பரிதாபக் காட்சிகள் எல்லாம் கோடம்பாக்கத்தில் சர்வ சாதாரணம். படம் தயாரிக்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியோடு வருகிற தயாரிப்பாளர்களை இனி சினிமா பக்கம் திரும்பியே பார்க்க மாட்டேன் என்கிற முடிவுக்கு வருகிற அளவுக்கு கொண்டு வந்து விடுவார்கள் சினிமா தொழிலாளர்களின் அமைப்பான பெப்ஸியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள்.

எந்தக் காட்சிக்கு எத்தனை தொழிலாளர்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்று இயக்குநரோ, தயாரிப்பாளரோ கூட முடிவு செய்ய முடியாது. அதை பெப்ஸி தொழிலாளர்கள் தான் முடிவு செய்வார்கள். 5 பேர் செய்யக்கூடிய வேலைக்கு 10 பேரை அமர்த்துவார்கள். ஒவ்வொருவருக்கும் சம்பளம், பேட்டா, வெளியூர் படப்பிடிப்பு என்றால் டபுள் சம்பளம், டபுள் பேட்டா, ஏ.சி ரூம், சலவை பேட்டா, சாப்பாடு பேட்டா என ரத்தத்தை உரிஞ்செடுக்கும் அட்டையைப் போல தயாரிப்பாளர்களின் பணத்தை உறிஞ்சுவார்கள்.

நூற்றாண்டை கண்ட பெருமைக்குரிய தமிழ்சினிமாவில் உலகத்தின் எந்த இடத்திலும் நடந்திராத இப்படிப்பட்ட அராஜகங்களுக்கு யார் மணி கட்டுவது? என்கிற எதிர்பார்ப்பு தயாரிப்பாளர்கள் மத்தியில் குறிப்பாக சிறுபடத் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது.

அந்த எதிர்ப்பார்ப்புக்கு நேற்று தனது அதிரடி முடிவின் மூலம் பதில் கொடுத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால்.

இப்படி ஒரு முடிவை விஷால் எடுக்கக் காரணமாக அமைந்ததே நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தயாரித்து நடித்து வரும் ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை தான்.  திண்டுக்கல்லில் நடந்து வரும் அப்படத்தின் படப்பிடிப்பில் சம்பளம், பேட்டை ஆகியவை ஒருநாள் தாமதமாகி விட்டது என்று படப்பிடிப்பையே நிறுத்தி விட்டது பெப்ஸி தொழிலாளர்களைச் சேர்ந்த கும்பல். இந்தப் பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்தில் ஆர்.கே.சுரேஷ் கொண்டு வந்தது அதையொட்டித்தான் நேற்று மாலை அவசரமாகக் கூடி சில அதிரடியான முடிவுகளை எடுத்தது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இடையே பல நிலைகளில் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் சம்மேளனத்தில் அங்கமாக இருக்கும் ஒரு சில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு அடிக்கடி பேச்சுவார்த்தை மற்றும் படப்பிடிப்புகளில் தடங்கல்கள் ஏற்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு பொருளாதாரா இழப்புகளையும், மன உளைச்சலையும் கொடுத்து வருகிறார்கள். சம்மேளனம் அவற்றை கண்டுகொள்ளாமலும் தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்களை இழிவுபடுத்துவதையும் கண்டிக்காமல் இருந்து வருகிறது.

இதுபோன்ற விஷயங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இவற்றால் ஒவ்வொரு முறையும் திட்டமிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவதும் இறுதியில் அவர்களாகவே ஒரு சம்பளம் நிர்ணயித்து அராஜக முறையில் தயாரிப்பாளர்களின் பலவீனத்தை பயன்படுத்தி அதை நிரந்தரமான சம்பளமாக நிர்ணயித்து விடுகிறார்கள்.

ஆனால் இனிமேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களை கைவிட இயலாது. சம்மேளனமோ தொழிலாளர்களோ தயாரிப்பாளர்களுக்கு எதிரி அல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு அதற்குறிய ஊதியத்தை முறையாக வழங்குவது தயாரிப்பாளர்களின் கடமை ஆகும். அதே வேளையில் அநியாயமான முறையில் தயாரிப்பாளர்கள் நஷ்டப்படுவதை ஒருபோதும் ஏற்க இயலாது.

இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயிக்கும் சம்பள விவரங்களின்படி தயாரிப்பாளர்கள் தங்களின் படத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் 25-07-17 முதல் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு உடன்படும் யாருடனும் தேவையான அளவில் ஆட்களை வைத்து வேலை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்த பெரிய தலைகள் அத்தனை பேரும் முடிவெடுக்கத் தயங்கிய இந்த விவகாரத்தில் விஷால் எடுத்த இந்த அதிரடி முடிவை அவருக்கு எதிரணியில் இருந்த தயாரிப்பாளர்கள் கூட முழுமனதோடு வரவேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பலே… விஷால்… பலே…

Leave A Reply

Your email address will not be published.