நமீதாவின் ரீ-எண்ட்ரி சக்சஸ்! : உறுதி செய்த ‘புலி முருகன்’

Get real time updates directly on you device, subscribe now.

namitha

ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ-எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார். ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”.

நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது.
தனது ரீ-எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம்.

” புலிமுருகன்” படம் பற்றி…

கடந்த ஆண்டு ரீ-எண்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்த படத்தின் இயக்குனரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜுலி. ஒரு பணக்கார குடும்பத்தில் இருப்பவள். புலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர் மீது காதல் வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே புலிமுருகனுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம். ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? உடனே ஓகே சொல்லி விட்டேன்.

பொதுவாக மலையாள படங்கள் என்றாலே குறைவான பட்ஜெட்டில் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நான் எப்போதுமே பட்ஜெட், ஹீரோ ஆகியவற்றை பார்ப்பவள் இல்லை. ஆனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

மோகன்லாலுடன் நடித்த அனுபவம்…

Related Posts
1 of 6

அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நமக்கு தெரியும். ஆனால் நமக்கு அதிகம் தெரியாத அவரது இன்னொரு முகம் இண்டெலெக்சுவல். ஆமாம், அத்தனை புத்தகங்கள் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. புலிமுருகன் கேரக்டரில் மோகன்லால் தவிர வேறு ஒருவரை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பாத்திரமாகவே மாறினார். படப்பிடிப்பில் திடீரென்று ஒரு ஆசை வந்தது. அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்டவுடனேயே ஓ… தாராளமா… என்று எடுத்துக் கொண்டார்.
அந்த படம் அத்தனை பெரிய வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

நீங்கள் பிராணிகளை அதிகம் நேசிப்பவர். உங்களுக்கு இந்த படம் அமைந்தது தற்செயலானதா?

ஆமாம். என் வீட்டில் நான் இப்போது மூன்று சிட்சு வகை நாய்க்குட்டிகளை வளர்க்கிறேன். அவை நாய்கள் அல்ல, என் குழந்தைகள். என் குடும்பத்தில் அவர்களும் இணைந்து விட்டார்கள். இந்த கதை சொல்லும் போது ஆரம்பத்தில் இது வேட்டை கதை போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் போக போக வன விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு படம் என்பது புரிந்தது.

அரசியல், சினிமா இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஏன் இதில் என்ன கஷ்டம்? இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்து கொண்டும் இருக்கிறேன். அதற்காக மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சியான அதிமுகவில் இணைந்தேன். அதற்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லை. பரத்துடன் நடிக்கும் ”பொட்டு” படம் அல்மோஸ்ட் ஓவர். ஜானி என்பவர் சொன்ன கதை நன்றாக உள்ளது. அடுத்த நகர்வுக்கு காத்திருக்கிறேன். இன்னும் சில படங்களின் அறிவிப்பும் வரும். மலையாளம் போலவே தமிழ், தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்.

முதல்வர் உடல்நலம் பற்றி…

மாண்புமிகு அம்மா அவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்திருக்கிறார். அம்மாவுக்கு கடவுளின் ஆசி எப்போதுமே உண்டு. இத்தனை கோடி மக்கள் அம்மாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவர்கள் மீண்டு வருவார்கள் என தீர்க்கமாக சொல்லி முடித்தார் நமீதா