ஜல்லிக்கட்டுக்கு ‘நோ வாய்ஸ்’ : எரிச்சலூட்டிய ரஜினியின் மௌனம்!

0

பொங்கலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

மத்திய அரசோ, மாநில அரசோ, உச்ச நீதிமன்றமோ அனுமதி கொடுத்தாலும், அனுமதி கொடுக்காவிட்டாலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவோம் என்று ஜல்லிக்கட்டு வீரர்களும் தயாராகி வருகிறார்கள்.

ஜல்லிகட்டு விளையாட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் சென்னை, மதுரையில் பிரம்மாண்டமாக ஒன்று கூடிய நிலையில் திரையுலக பிரபலங்களும் தங்களது ஆதரவை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முதலில் அறிக்கை வெளியிட்டவர் நடிகர் சிம்பு தான். மேலும் ட்விட்டரிலும் தனது ப்ரொபைல் படத்தை வைத்து அதன் மூலமும் ஜல்லிக்கட்டை ஆதரித்துள்ளார்.

‘ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும் 💪#WeNeedJallikattu’ என்று நடிகர் சிவகார்த்திகேயன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ‘கொம்புவச்ச சிங்கம்டா’என்ற பாடலை வெளியிடுகிறார் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்.

”ஜல்லிக்கட்டு என்று கூறாதீர்கள், ஏறுதழுவுதல் என்று கூறுங்கள், காளைகளை தழுவுகிறோமே தவிர அவற்றை காயப்படுத்துவது இல்லை” என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

இப்படி வயசு வித்தியாசம் இல்லாமல் முன்னணி நாயகர்கள் பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான நிலைப்பாட்ட எடுத்து வர, நடிகர் ரஜினி மட்டும் இதுவரை ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்காதது அவரது ரசிகர்கள் மத்தியிலேயே கடும் ஆத்திரத்தை கிளப்பி விட்டிருக்கிறது.

ரூபாய் நோட்டு தடைக்கு முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தவர் ரஜினி. அதேபோல ஜல்லிக்கட்டுவுக்கும் ஆதரவு தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றுவரை அவர் மெளனமாகவே இருக்கிறார்.

அவரின் இந்த மெளனம் ரசிகர்கள் மத்தியில் கடும் எரிச்சலைக் கிளப்பியிருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.

நோட்டுக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுப்பீங்களா? எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்கு ஆதரவா குரல் கொடுக்க மாட்டீங்களா? இங்க மெளனமா இருக்கிறதுக்குப் பதிலா பேசாம இமயமலைக்கே போயிடுங்களேன் ரஜினி சார்… என்றெல்லாம் ரஜினி மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.