Banner After Header

தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு! – கட்சி அறிவிப்பை தள்ளி வைத்தார் ரஜினி

0

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். ரஜினியைப் பொருத்தவரை அவருடைய அரசியல் வாழ்க்கை எப்படி அமையப்போகிறது? என்பதற்கு உதாரணமாகி விட்டது அவர் சமீபத்தில் போட்ட ஒரு சர்ச்சைக்குரிய ட்வீட்.

ஆன்மீக அரசியலை கொண்டு வரப்போகிறேன் என்று அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெருத்த அமைதியே காத்து வந்தார்.

இதனால், எந்தப் பொதுப் பிரச்சனைகளிலும் கருத்து கூறாத ரஜினி எப்படி அரசியலுக்கு லாயக்கானவாராக ஆவார் என்று பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை, அதனால் அமைதியாக இருக்கிறேன் என பதில் கொடுத்தார் ரஜினி.

அப்படியே இருந்திருந்தால் பரவாயில்லை. அவர் தேர்ந்தெடுத்து சில விஷயங்களுக்கு மட்டும் ட்வீட்டரில் கருத்து சொல்வது தான் தமிழக மக்களை சந்தேகப்பட வைத்திருக்கிறது.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் போராடிய போது , அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அந்த களோபரத்தில் சிலர் போலீசாரை திருப்பி தாக்கினர்.

அது தொடர்பான வீடியோவைப் பார்த்த ரஜினி, சீருடையில் இருக்கும் போலீசாரை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கு தனி சட்டம் இயற்றினாலும் தப்பில்லை என்கிற கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அவரின் இந்த ஒருதலைப்பட்சமான கருத்து தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எளிய மக்களை போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய போது ரஜினி ஏன் வாயை பொத்திக் கொண்டிருந்தார்? அவருடைய இந்தக் குரல் பாஜகவில் குரல் மாதிரி இருக்கிறது அவருடைய குரலே அல்ல என்றும், இது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டால் தான் அவருக்கு போலீசாரின் உண்மை முகம் பற்றி தெரிய வரும் என்று ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இப்படி ஒட்டுமொத்த தமிழகமும் ரஜினிக்கு எதிரான மனநிலையில் இருக்கின்ற இந்த நேரத்தில் தான் ஏப்ரல் 14ம் தேதி சித்திரை திருநாளான இன்று திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தில் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் தான் போட்ட ட்வீட் பற்றி சில தினங்களாகவே வெளியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தனது நலம் விரும்பிகளிடம் கருத்தை கேட்டிருக்கிறார் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டம் பற்றி நீங்கள் போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் தமிழக மக்கள் அனைவரும் ஒரே எதிர்ப்பு மனநிலையில் இருக்கிறார்கள் என்கிற தகவலை நலம் விரும்பிகள் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் உடனே தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். அதில், தற்போது தமிழகத்தில் தனக்கு ஆதரவான சூழ்நிலை இல்லாததால், இப்போதைக்கு அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டாம். மக்களின் கொதிநிலை குறைந்த உடன் தள்ளி வைப்போம் என முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.

ஆக ரஜினி எப்போது கட்சியை பற்றி அறிவிப்பார்? என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

Leave A Reply

Your email address will not be published.