Banner After Header

ரூபாய் – விமர்சனம்

0

rupaai-review1

RATING : 2.8/5

நிம்மதியான வாழ்க்கைக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல, பணத்தின் மீதான பேராசையால் ஒரு மனிதன் என்னென்ன சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைச் சொல்லும் படம் தான் இந்த ”ரூபாய்.”

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை லோடு ஏற்றி இறக்கப்போகும் ஹீரோ சந்திரனுக்கும், கிஷோருக்கும் விடிந்தால் தங்களுடைய மினி லாரிக்கான கடன் பணம் 18,000 ரூபாயை கட்ட வேண்டிய கட்டாயம்.

அதற்கான பணம் குறைவாக இருப்பதால், அதே இடத்தில் வீடு மாறிப்போக வண்டி தேடிக்கொண்டிருக்கும் சின்னி ஜெயந்த்திடம் வண்டிக்கு 2,000 ரூபாய் வாடகை என்று டீல் பேசி பொருட்களை ஏற்றிக் கொண்டு புது வீட்டைத் தேடிப் போகிறார்கள். போன இடத்தில் அவர்கள் எதிர்பார்த்த வீடு கிடைக்காமல் போகிறது. புரோக்கரும் ”சரி வேற வீடு பார்த்துக்கலாம்” என்று சின்னி ஜெயந்த்திடம் 5,000 ரூபாயை வாங்கிக் கொண்டு ”நீங்க அந்த வழியா வாங்க, நான் இந்த வழியா வர்றேன்” என்று ஒரு சந்துக்குள் புகுந்து எஸ்கேப் ஆகி விடுகிறான்.

இதனால் நாள் முழுக்க சின்னி ஜெயந்தியும், அவரது மகளான ஆனந்தியும் லாரியிலேயே சுற்ற வேண்டிய நிலை. இந்த விஷயத்தில் கிஷோருக்கும், சின்னி ஜெயந்த்திக்கும் மோதல் வர, அவரது மகள் மீது காதலில் விழும் சந்திரனோ இருவரையும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.

இன்னொரு புறம் இரவோடு இரவாக வங்கி ஒன்றில் ஓட்டையைப் போட்டு 2 கோடியே 30 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்கிறார் செய்கிறார் வில்லனாக வரும் ஹரீஸ் உத்தமன். கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்று கொண்டிருக்கும் போது டோல்கேட் அருகே வருகிற வாகனங்களை போலீஸ் சோதனை செய்வதைப் பார்க்கும் ஹரீஸ், அந்தப் பணப்பையை தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் சந்திரன் – கிஷோருக்கு சொந்தமான வண்டியில் பொருட்களோடு பொருட்களாக போட்டு விடுகிறார்.

நாள் முழுக்க வண்டியோடு கடுப்பில் கிஷோர் சின்னி ஜெயந்த்திடம் கோப முகம் காட்டுகிறார். அந்த மோதல் உச்சக்கட்டத்தில் வெடிக்க, அதன் விளைவாக வண்டியில் இருக்கும் சின்னி ஜெயந்தியின் பொருட்களை ரோட்டில் தூக்கி எறிகிறார் கிஷோர். அப்போது அங்கே இருக்கும் பணப்பையும் கீழே விழுந்து அதில் கட்டு கட்டாக பணம் இருப்பதும் தெரிய வருகிறது.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாலு பேரும் அடுத்தடுத்து என்ன செய்தார்கள்? அதனால் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது? என்பதே கிளைமாக்ஸ்.

‘கயல்’ ஜோடி சந்திரனும், ஆனந்தியும் மீண்டும் இப்படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். காதல் காட்சிகளில் சந்திரனின் நடிப்பு ஏற்றுக் கொள்ளும்படியான யதார்த்தமான நடிப்பு.

‘கயல்’ படத்தில் எப்படி அப்பாவியாகவும், பரிதாப முகத்தோடும் வருவாரோ? அப்படிப்பட்ட முகத்தோடு தான் இந்தப்படத்திலும் வருகிறார் ஆனந்தி. அதனாலோ என்னவோ நாம் ‘கயல்’ படத்தைப் பார்க்கிறோமா? அல்லது ‘ரூபாய்’ படத்தைப் பார்க்கிறோமா? என்பதில் பெருங்குழப்பம்! அடுத்தடுத்த படங்களிலாவது இந்த ஒரே மாதிரியான எக்ஸ்பிரசன்களை மாற்றிக் கொள்ளுங்கள் ஆனந்தி.

சந்திரனின் நண்பராக வரும் கிஷோர் கவனிக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வழக்கமான இல்லாமல் இந்தக் கேரக்டரில் இவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பார்க்க சகிக்காது என்று சர்ட்டிபிகே கொடுக்கிற வகையில் உணர்ச்சிகரமாக நடித்து கைதட்டல்களை அள்ளுகிறார் சின்னி ஜெயந்தி. நீண்ட இடைவேளிக்குப் பிறகு சின்னி ஜெயந்தியை இப்படி ஒரு கேரக்டரில் பார்ப்பதே ரசிகர்களுக்கு புது ரசனை அனுபவமாகத்தான் இருக்கும்!

ஆனந்தியைப் போலவே பேங்க் கொள்ளையராக வரும் ஹரீஸ் உத்தமனும் அவரது முந்தைய படங்களில் நாம் பார்த்தது போல இதிலும் சேம் டைப் எக்ஸ்பிரஷன்கள். வங்கியில் கை ரேகை படாமல் இருக்க ஒரு பொடியைத் தூவி விடுகிறார். பணப்பையும் ஜி.பி.எஸ் வைத்து ட்ரேக் செய்கிறார். இந்தளவுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்கும் அவரால் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாப்பாக கொண்டு செல்லத் தெரியாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இமானின் பின்னணி இசையும், பாடல்களும் ஏற்கனவே அவர் பிரபு சாலமன் படங்களுக்கு போட்ட ட்யூன்களாகவே காதுகளை உறுத்துகிறது.

”சாட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் வந்திருக்கும் படமிது.

”பணத்தாசை தான் தீமைகளுக்கு வேர்” என்று கருத்து சொல்ல நினைத்த இயக்குநர் படத்தில் ஹரீஸ் உத்தமனைத் தவிர, மற்றவர்கள் தேவைக்கு மீறிய பணத்துக்கு ஆசைப்படுவதாக காட்சிப்படுத்தியிருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம். கிடைத்தது தீமையால் வந்த பணமா? இல்லையா? என்றே தெரியாதவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மட்டுமே அந்தப் பணத்தை பயன்படுத்தி விட்டு, அதே பணத்தில் மீண்டும் ஹோட்டல் வைத்து உழைத்து சாப்பிட நினைப்பதும் எந்த வகையில் பணத்தாசை லிஸ்ட்டில் சேருமென்று தெரியவில்லை. அம்பானி சம்பாதித்தால் ”உழைப்பு” என்றும், நடுத்தர வர்க்கம் சம்பாதித்தால் ”பணத்தாசை” என்றும் அடையாளப்படுத்துவது போன்ற திரைக்கதை குழப்பங்களை தவிர்த்திக்கலாமே டைரக்டர் சார்?

இப்படி சின்னச் சின்ன திரைக்கதை லாஜிக் மீறல்களும், குழப்பங்களும் இருந்தாலும் சந்தோஷமான வாழ்க்கைக்கு பணம் தான் முக்கியமென்று பணத்தைத் தேடி ஒடி அலைகிற மனிதர்களை, அதைத்தாண்டிய நிம்மதியான வாழ்க்கை ஒன்று இருக்கிறது என்று ஒரு நிமிடம் யோசிக்க வைத்த விதத்தில் இயக்குநர் அன்பழகனைப் பாராட்டலாம்.

ரூபாய் – பழைய நோட்டு!

Leave A Reply

Your email address will not be published.