Banner After Header

40 நடிகைகள் நடிக்க மறுத்த படத்தில் ஹீரோயின் ஆன சதா! – அப்படி என்ன இருக்கு இந்தப் படத்துல?

0

தாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை த் தயாரிக்கவும் தயங்குவதில்லை. இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா.

‘அறம்’ வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது. அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட்’ என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன் வந்துள்ளார்.

அதற்கு முழு முதற் காரணம் மஜீத் இயக்கியுள்ள ‘டார்ச் லைட்’ படம் தான். அப்படி என்ன அந்தப் படத்தில் உள்ளது.

பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு, ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கிறது.

இப்படம் வறுமையால் பாலியல் தொழிலுக்கு வந்த பெண்கள் பற்றிப் பேசுகிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி ஓட்டுநர்களிடம் பாலியல் தொழில் செய்த பெண்கள் பற்றிய கதை இது .

பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்கள் இச்சையைத் தீர்க்கும் ஒரு நுகர்பொருளாக்கிடும் சமூக அவலத்தையும் அதன் பின்னணியில் இயங்கும் இழிவான ஆண்களையும் இப்படம் தோலுரிக்கிறது.

இது ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது. படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள். நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது, ” நான் முதலில் இயக்கிய “தமிழன்” படம் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை சட்ட அறிவு அவசியம் தேவை என்று கூறியது. அது பரவலான பாராட்டு பெற்றது மட்டுமல்ல பெரிய வெற்றியும் பெற்றது. அதன் பிறகு சில சிறிய படங்கள் இயக்கினேன். ஆனால் டார்ச் லைட் டுக்கான விஷயம் மனதில் பதிந்த போது இது என் லட்சியப் படமாகத் தெரிந்தது . நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது.

வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து இருந்தேன்.

நான் பல நடிகைகளிடம் இந்தக் கதையைக் கூறியபோது பாலியல் தொழிலாளியாக நடிக்க வேண்டுமே என்று பலரும் மறுத்து விட்டனர்.

இப்படி 4O பேரிடம் சொல்லியிருப்பேன். கடைசியில் சதாவிடம் கூறினேன். கதையைக் கேட்டு முடித்ததும் கண்ணீர் விட்டார். வீடியோ பதிவுகளை எல்லாம் பார்த்து விட்டுக் கலங்கினார். தான் நடிக்கச் சம்மதம் என்றார். இப்படம் சதா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். நிச்சயம் அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். அதே போல நடிகை ரித்விகாவும் கதை கேட்டு கலங்கிக் கண்ணீர் விட்டார். நிச்சயம் இப்படம் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும். பெண்களின் கண்ணீர்க் கதைகள் பெண்களிடம் போய்ச் சேர வேண்டும். அப்போதுதான் அவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.” என்றார்.

படத்தின் பிரதான பாத்திரத்தை சதா ஏற்க ரித்விகா, புதுமுகம் உதயா, இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா ரங்கநாதன் மற்றும் பலர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இது 90களில் நடக்கும் கதை என்பதால் பலவற்றைக் கவனிக்க வேண்டியிருந்ததாம். அப்போது இருந்த இரு வழிப் பாதைகள் எல்லாம் இப்போது நான்கு வழிப்பாதைகளாக மாறி விட்டன. எனவே சிரமப்பட்டு இடங்களைத் தேடிக் கண்டுபிடித்து படமாக்கியுள்ளனர். செல்போன், டிவி எல்லாம் இல்லாமல் படமாக்க வேண்டியிருந்ததாம்.

படத்தை அப்துல் மஜீத், எம். அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.