‘மீம்ஸ் போடுறவங்க பொறுப்பா இருக்கணும்’ – சதீஷ் காட்டம்
‘இவன் தந்திரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘பூமராங்’.
தனது மசாலா பிக்ஸ் சார்பில் அவரே தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரதன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும், சத்யஜோதி தியாகராஜனும் இணைந்து வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக இயக்குனர் மணிரத்னம் படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய காமெடி நடிகர் சதீஷ் மீம்ஸ் கிரியேட்டர்களை ஒரு பிடிபிடித்தார்.
இப்போதையை மிக முக்கியமான பிரச்சினையான தண்ணீர் பிரச்சனையைப் பற்றி பேசியிருக்கிறது இந்த ‘பூமராங்’ படம்.
தண்ணீர் சேமிப்பை நாம் வீட்டில் இருந்தே தொடங்கலாம். எல்லோரும் ஷவர் வைத்துக் கொண்டு குளிக்கும் போது அதில் நீர் வீணாகிறது. அதே போல பெரிய சைஸ் பாத் டப் என்ற பெயரில் பல லிட்டர் தண்ணீரை வீணாக்குகிறார்கள்.
சிலர் தண்ணீர் பைப்பை திறந்து விட்டு பல் விலக்குகிறார்கள். இந்த மாதிரியெல்லாம் செய்து தண்ணீரை வீணாக்கக் கூடாது. மாறாக ஒரு பக்கெட்ட்இல் நீர் பிடித்து, கைப்பை வைத்து தேவையான அளவு தண்ணீரை மட்டுமே குளிக்கப் பயன்படுத்தலாம். இதனால் நாம் தண்ணீரை சேமிக்கலாம். தண்ணீரை வீணாக்காதீர்கள், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் தண்ணீர் பஞ்சம் வரும்.
தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரை மதிக்காமல் பலர் சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்து மீம்ஸ் போடுகிறார்கள்.
அவருடைய ஆளுமைக்கும், வயதுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுக்க வேண்டும், மீம்ஸ் போடுகிறவர்கள் எல்லோரும் கொஞ்சம் பொறுப்பாக இருக்கணும், மக்களும் தங்களுக்கு வரும் கண்ட கண்ட மீம்ஸ்களை ஷேர் பண்ணக்கூடாது என்றார் காட்டமாக.
விழாவில் நாயகி மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன், ஞானவேல்ராஜா, ராம் பிரசாத், இயக்குனர் ஆர் கே சரவணன், முருகேசன், ஈரோடு கலெக்டர் அழகிரி, ஒளிப்பதிவாளர் பிரசன்ன எஸ் குமார், கலை இயக்குனர் சிவ யாதவ், எடிட்டர் செல்வா, வெங்கட் சுபா ஆகியோரும் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.