Banner After Header

சத்யா விமர்சனம்

0

RATING – 3/5

நட்சத்திரங்கள் – சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதீஷ், ஆனந்த்ராஜ், யோகிபாபு மற்றும் பலர்

இசை – சைமன் கே கிங்

ஒளிப்பதிவு – அருண்மணி பழனி

வகை – கிரைம் – த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 9 நிமிடங்கள்

2016-ல் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற சனம் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ‘சத்யா.’

ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் ஹீரோ சிபிராஜும், ஹீரோயின் ரம்யா நம்பீசனும் காதலிக்கிறார்கள். இருவரின் காதலுக்கும் ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்க்கிறார். அந்த எதிர்ப்பால் காதலியைப் பிரிந்த சோகத்தில் தாடி வளர்த்தபடியே ஆஸ்திரேயாவிலுள்ள ஐடி கம்பெனி ஒன்றில் நண்பன் யோகி பாபுவுடன் வேலை செய்து வருகிறார்.

சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு சென்னையிலிருந்து தன் காதலி ரம்யா நம்பீசனிடமிருந்து அழைப்பு வருகிறது. உடனடியாக சென்னை வரும் சிபிராஜிடம் காணாமல் போன தனது பெண் குழந்தையை கண்டுபிடித்துத் தருமாறு கேட்கிறார்.

குழந்தையைப் பற்றிய விசாரிப்பில் இறங்கும் சிபிராஜுக்கு போகிற இடதில் எல்லாம் அப்படி ஒரு குழந்தையே இல்லை என்றும், இல்லாத ஒரு குழந்தையை எப்படித் தேடி கண்டுபிடிக்க முடியும் என்கிற பதில் தான் கிடைக்கிறது. அப்படியானால் ரம்யா தனக்கு குழந்தை இருந்தது என்று சொன்னது உண்மை தானா? அவர் சொன்னது போன்ற ஒரு குழந்தை இருந்ததா? ஒருவேளை குழந்தை இல்லை என்றால் இல்லாத குழந்தையைத் தேடித்தர ஏன் சிபிராஜை ரம்யா அழைத்தார்? போன்ற குழப்பும் கேள்விகளுக்கு பதிலாக அமைவது தான் இந்த சத்யா.

நிஜமாகவே குழந்தை இருக்கிறதா? அல்லது இல்லையா? என்கிற கேள்வியை அதன் முடிச்சு கிளைமாக்ஸில் அவிலும் வரை ரசிகர்களை இருக்கையோடு கட்டிப்போட்டிருப்பது தான் படத்தின் மிகப்பெரிய பலமும், நம்மை படத்தைப் பார்க்கத் தூண்டுகிற விஷயங்கள்.

சிபிராஜின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக இந்தப்படம் அமைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. முந்தைய படங்களை விட நடிப்பில் தெரிகிற மெச்சூரிட்டி செம செம. எனக்கு நடிக்க வராது என்று சிபிராஜ் சொல்ல, அதுதான் இந்த உலகத்துக்கே தெரியுமே? என்று யோகிபாபு டைமிங்கில் கமெண்ட் அடிக்க தியேட்டரே அதிரச் சிரிக்கிறது. இப்படி தன்னைத்தானே கலாய்க்க அனுமதித்திருப்பதும் அருமை.

“நீ எல்லாம் ப்ளைன்ட் டேட் போக பொண்ணு வேணும், நானெல்லாம் டேட்டிங் போறதுக்கே, பொண்ணு ப்ளைன்டா இருக்கணும்” `நீ உட்காந்தாலே நிக்கற மாதிரி தான் இருக்கும், எதுக்கு எழுந்து நிக்கற?’ என கார்த்திக் கிருஷ்ணாவின் வசனங்கள் சீரியஸான கதையில் சிரிப்புக்கு உத்திரவாதம்.

முழுக்கதையுமே ரம்யா நம்பீசனைத்தான் சுற்றி வருகிறது. அதை உணர்ந்தவராய் சிபிராஜ் உடனான ரொமான்ஸ், குழந்தை உடனான செண்டிமெண்ட் காட்சிகள் என இரண்டு ஏரியாவிலும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். சில இடங்களில் தெரியும் அவருடைய பொருந்தாத மேக்கப் அவருடைய முக அழகை கொஞ்சம் குறைத்துக் காட்டியிருக்கிறது.

வருகிற காட்சிகளில் கிச்சு கிச்சு மூட்டுகிற ஆனந்த்ராஜ், அவருடைய உயர் அதிகாரியாக வந்து ட்விஸ்ட்டுகளை அவிழ்க்கும் வரலட்சுமி ஆகியோர் கச்சிதம். காமெடி கேரக்டரில் வரும் சதீஷுக்கு இதில் சீரியஸ் கேரக்டர் ரொம்பப் பொருத்தம். அடுத்தடுத்த படங்களில் இதையே பாலோ பண்ணுங்க ப்ரோ!

யவ்வனா உள்ளிட்ட பாடல்கள், த்ரில்லர் கதைக்கான பின்னணி இசையென எக்ஸ்ட்ராவாக ஸ்கோர் செய்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங். சிட்னி நகரின் பேரழகு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையின் பரபரப்பான காட்சிகள் என ஒளிப்பதிவில் ஈர்க்கிறார் அருண்மணி பழனி.

இரண்டாம் பாதியில் மெதுவாக நகரும் சில காட்சிகளில் கத்தரி போட்டிருக்கலாம எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன்.

காட்சிக்கு காட்சி யூகிக்க முடியாத ட்விஸ்ட்கள். காதல், குடும்பம், குழந்தை செண்டிமெண்ட் என முழுமையான விறுவிறுப்பான த்ரில்லர் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி!

Leave A Reply

Your email address will not be published.