ரஜினி தலைவர்னா… அப்போ பிரபாகரன், காமராஜர், கக்கனெல்லாம் யாரு..? – சீமான் சுளீர் கேள்வி

Get real time updates directly on you device, subscribe now.

‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ ஆகிய படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்குனராக அடியெடுத்து வைத்திருக்கும் படம் தான் ‘மிக மிக அவசரம்’.

காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றைப் பற்றி மிக யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இப்படத்தில் ஸ்ரீ பிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இப்படத்தில் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைக்க, பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குனருமான சீமான், நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சீமான் வழக்கம் போல தனது தனித்துவமான பேச்சாற்றலால் அரங்கத்தை அதிர வைத்தார். அவர் பேசியதாவது, “பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு நம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மை தான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது அவர்களுக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன எந்த பண்டிகை கொண்டாட்டங்களும் கிடையாது.

ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும், அவர்களை விட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.

Related Posts
1 of 17

காவலர்களுக்கு பணிச்சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் போது தான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும்.

இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும்.. ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. இந்த படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது.. இவ்வளவு நல்ல கதைகளை வைத்து இருக்கும்போது, எதற்காக ‘என் ஆளோட செருப்ப காணோம்’ போன்ற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான்.

இந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது.. இந்த படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய மார்கெட் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும்.. ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகை தான் தெரிவார் ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித்திருப்பதால் தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது அதுதான் இந்த படத்திற்கு பலம்.

சினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்து விட்டார்கள்.. சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள்.. பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவிற்கு வர ஆரம்பிப்பார்கள்.

இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன்.. தலைவருடன் பேசினேன்.. தலைவருக்காக கதையை தயார் செய்தேன்… என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள்.. அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்..? சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது. அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே” என்றார்.