சங்கமித்ராவிலிருந்து ஸ்ருதிஹாசன் விலகல் : ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்த கலாய்த்த ரசிகர்கள்!

shruthi-haasan1

சுந்தர் சி இயக்கத்தில் தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கும் சரித்திரப் படம் தான் ‘சங்கமித்ரா’.

இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஸ்ருதிஹாசனை நீக்கி விட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

முன்னதாக இப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடுக்குச் சென்று வாள் பயிற்சி, கத்தி சுழற்றும் பயிற்சி உள்ளிட்டவைகளை கற்றுக் கொண்டிருந்தார் ஸ்ருதிஹாசன். இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நடைபெற்ற கேன்ஸ் பட விழாவில் கூட ஸ்ருதி கலந்து கொண்டார்.

Related Posts
1 of 5

இப்படி அந்தப்படத்தின் அத்தனை விஷயங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரை தயாரிப்பு நிறுவனம் வெளியேற்றியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஆமாம், நேற்று இந்தச் செய்தி வெளியானதும் சமூகவலைத்தளங்களில் குவிந்த ரசிகர்கள் சுந்தர் சியும், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் நல்லதொரு முடிவை எடுத்திருக்கிறது என்று வரவேற்பு தெரிவித்தார்கள்.

இன்னும் சிலரே இந்த மாதிரியான சரித்திரக் கதையில் நாயகி கேரக்டருக்கு அனுஷ்கா அல்லது நயன்தாரா தான் பக்காவான சாய்ஸ் ஆக இருப்பார்கள் என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

வழக்கமாக ஒரு நடிகைக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மொத்த ரசிகக் குஞ்சுகளும் சம்பந்தப்பட்ட அந்த நடிகைக்குத் தான் ஆதரவாக நிற்பார்கள். ஆனால் ஸ்ருதிஹாசனைப் பொருத்தவரை பிரேமம் தெலுங்கு பதிப்பில் நடிக்கிறார் என்று சொன்ன போதும் சரி, இப்போதும் சரி அவருக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது என்ன மாதிரி டிசைன்னு சொல்லுங்கப்பா!