Banner After Header

எஸ் 3 – விமர்சனம்

0

RATING 3.2/5

முதல் இரண்டு பாகங்களில் தூத்துக்குடி, சென்னை என தமிழ்நாட்டு ரவுடிகளை ரவுண்டு கட்டி அடித்த துரைசிங்கம் இந்த மூன்றாம் பாகத்தில் தனது பாய்ச்சலை ஆந்திரா பக்கம் திருப்பியிருக்கிறார்.

ஆந்திராவில் கமிஷனர் ஜெயப்பிரகாஷை ரவுடிக் கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்கிறது. அதன் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அம்மாநில அரசு திணறிக்கொண்டிருக்க, கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு தமிழ்நாட்டு போலீஸ் கமிஷனரான துரைசிங்கம் சூர்யா சிறப்பு சி.பி.ஐ அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

கமிஷனர் மரணத்துக்கு காரணமானவர்களைத் தேடிப்போகும் சூர்யாவுக்கு அதன் பின்னணியில் வெளிநாட்டு ஈவேஸ்ட், மெடி வேஸ்டுகளை இறக்குமதி செய்து இந்தியாவை ஒரு குப்பை நாடாக்கிக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சரும், ஆஸ்திரேலியாவிலிருந்து அந்த நாசகார வேலையைச் செய்து வரும் அவருடைய மகனும் இருப்பது தெரிய வருகிறது. இந்த விஷயம் தெரிய வரவும் ஆந்திராவிலிருந்து ஆஸ்திரேலியா வரை தனது வேட்டையை தொடரும் சூர்யா அந்த ‘வேஸ்ட்’ கும்பலை சாய்த்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

முந்தைய இரண்டு பாகங்களை விடவும், இந்தப்படத்தில் மூன்று மடங்கு ஆக்ரோஷத்தோடு பொளந்து கட்டுகிறார் சூர்யா. வருகிற காட்சிகளில் எல்லாம் வேகம்னா வேகம் அப்படி ஒரு வேகம்! செண்டிமெண்ட், ஆக்‌ஷன், லவ், கோபம், பஞ்ச் பேசுவது என எல்லா சீன்களும் பரபரவென்று செல்கிறது. அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் ஈடுகொடுக்கிறது சூர்யாவின் மிரட்டலான நடிப்பு.

முதல் இரண்டு பாகங்களில் வந்த அனுஷ்காவுக்கு இந்தப் படத்தில் சூர்யாவுடன் திருமணமாகி விடுகிறது. அதைப் பார்த்ததும் ‘அப்பாடா’வாகிறார்கள் ரசிகர்கள். உடம்பு பெருத்த அனுஷ்காவிடம் பொலிவு குறைந்திருப்பது கண்களை உறுத்துகிறது.

இன்னொரு நாயகி ஸ்ருதிஹாசன் இரண்டாம் பாகத்தில் வந்த ஹன்ஷிகாவைப் போல ஒன்சைடாக ரூட்டு விடுகிறார். டபுள் மீனிங்கில் பேசுவது, பாடல் காட்சிகளில் முடிந்தவரை ஆடைக்குறைப்பு என குறையில்லாமல் கவர்ச்சி காட்டினாலும், வாரப்பத்திரிகை நிருபராக கேரக்டரில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

சிரிப்பு போலீசாக வரும் சூரி காமெடியில் ஒரே மாடுலேஷன்களை செய்வதை நிறுத்தி விட்டு வெரைட்டியாகச் செய்வது நல்லது, சிரிப்பே வரவில்லை. இன்னொரு சிரிப்பு நடிகரான ரோபோ சங்கரோ சீரியஸ் கேரக்டரில் வந்து அவரும் ஏமாற்றுகிறார்.

நாசர், விஜயகுமார், ராதிகா, ஜெயப்பிரகாஷ், நிதின் சத்யா, சரத்பாபு, ராதாரவி, இமான் அண்ணாச்சி, க்ரிஷ் என படத்தில் எண்ண முடியாத அளவுக்கு நடிகர், நடிகைகள் வருகிறார்கள். அத்தனை பேரும் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர்களுக்கான காட்சிகளை ரசிகர்களின் மனதில் நிறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

இரண்டாம் பாகத்தின் வில்லன் டேனிக்குப் பதில், அதே ஆஸ்திரேலியாவிலிருந்து மெயின் வில்லனாக இதில் தாகூர் அனூப் சிங் வருகிறார். ஆறடி உசரத்தில் கட்டுமஸ்த்தான உடம்போடு ஆள் பார்ப்பதற்கு ஜிம் பாய்ஸ் மாதிரி இருக்கிறார். நடிப்பில் பாஸ் மார்க் வாங்கினாலும் கஷ்டப்பட்டு சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருப்பார் போல? அவர் பேசுகிற டயலாக்குகளை புரிந்து கொள்வதற்குள் அடுத்தடுத்த காட்சிகள் நகர்ந்து விடுகிறது.

முந்தைய பாகங்களின் எல்லா கேரக்டர்களை மிகச் சரியாக இந்த பாகத்தில் பொருத்தி எந்த வகையிலும் கண்டினியூட்டி மிஸ் ஆகி விடக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்திருக்கிறார் டைரக்டர் ஹரி. அந்த மெனக்கிடலுக்கு ஸ்பெஷல் பாராட்டு. கங்காரு, ஓநாய் என ஆஸ்திரேலிய நாட்டு விலங்குகளையும், சிங்கம், புலி என இந்திய நாட்டின் விலங்குகளையும் ஒப்பிட்டு சூர்யா பேசும் அந்த பஞ்ச் வசனம் தியேட்டரில் பலத்த கைதட்டல்களை அள்ளுகிறது.

படத்தின் மொத்த உழைப்பில் முக்கால்வாசிப் பாராட்டுகள் ஒளிப்பதிவாளர் ப்ரியனுக்குத்தான் போய்ச் சேர வேண்டும். எத்தனை கேமராக்களில் எப்படியெல்லாம் காட்சிகளை ஷூட் பண்ணினார் என்று நினைத்துப் பார்க்கும் போதே வியப்பாக இருக்கிறது. படத்தின் வேகத்துக்கு இவருடைய ஒளிப்பதிவு ஒரு காரணம் என்றால் அதற்கு ஈடுகொடுத்து ரசிகர்களை படம் முடியும் வரை ஒருவித படபடப்போடு வைத்திருந்த எடிட்டர்கள் வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்க்கும் வெல்டன் வெல்டன்.

ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் வை வை வைஃபை பாடல் மட்டுமே மனசில் நிற்கிறது. சூர்யா ஆக்‌ஷனுக்கு தயாராகும் போதெல்லாம் வருகிற பின்னணி இசை பைரவாவின் ‘வர்லாம் வர்லாம்’ பின்னணி இசையை ஞாபகப்படுத்துகிறது.

கிளைமாக்ஸில் சூர்யாவும் வில்லன் தாகூர் அனூப் சிங்கும் மோதிக்கொள்ளும் லொக்கேஷன்ஸ், ஸ்டண்ட் சீன், ஹாரீஸின் பின்னணி இசை என எல்லாம் அப்படியே ‘ஏழாம் அறிவு’!

இதெப்படி? இதெப்படி? என்று ஒரு சீனைப் பார்த்து விட்டு யோசிக்கக் கூட விடாமல் சர் சர்ரென்று அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்தி ”அப்பாடா கொடுத்த காசுக்கு ஒரு சூப்பரான கமர்ஷியல் படம் பார்த்தாச்சு” என்கிற சந்தோஷ உணர்வைத் தருகிற வித்தையை திரைக்கதையில் முழுமையாகச் செய்திருக்கிறார்கள்.

வழக்கமான போலீஸ் பவர் என்பதோடு மட்டும் சுருங்கி விடாமல், வெளிநாட்டிலுள்ள மருத்துவ, எலெக்ட்ரானிக் கழிவுகளை இந்தியாவில் கொட்டி இந்தியாவை ஒரு குப்பைக்கார நாடாக மாற்ற முயற்சிக்கும் சதியை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிற சமூக சிந்தனையையும் கதையில் புகுத்தி  சிங்கத்தை மும்மடங்கு கர்ஜிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

சிங்கம் 3 – வேகம் குறையாத வேட்டை !

Leave A Reply

Your email address will not be published.