அருண்குமாரை எந்த ஹீரோவும் நம்பவில்லை! – வருத்தப்பட்ட விஜய் சேதுபதி

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார்.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது, ”பண்ணையாரும் பத்மினியும் படம் வெற்றி பெற்ற பிறகு என்னோடு நீ இருந்தால் சோம்பேறி ஆகி விடுவாய், அதனால் வேறு ஹீரோவை வைத்து படம் பண்ணு என்று அருணிடம் சொன்னேன். ஆனால் அவரை யாரும் நம்பவில்லை. பிறகு மீண்டும் என்னிடம் வந்தபோது சேதுபதி படத்தில் இணைந்தோம்.

Related Posts
1 of 215

அந்தப்படமும் வெற்றி பெற்ற பிறகு வேறு ஹீரோவை வைத்து படம் இயக்கு என்று வெளியில் அனுப்பினேன். நானே சில ஹீரோக்களுக்கு நேரடியாக போன் செய்து அருண் உண்மையிலேயே நன்றாக படம் இயக்குவான் என்று சொன்னேன். அப்போதும் அவனை யாரும் நம்பவில்லை. பிறகுதான் சிந்துபாத் கதையில் நானே நடிக்க முடிவு செய்தேன்.

இந்தப்படம் வெற்றி பெற்றால் வேறு ஹீரோவை வைத்து படம் இயக்க வெளியே அனுப்பி விடுவேன். ஹீரோவின் மனைவியை வில்லன் கடத்திச் சென்று விடுகிறார். அவரை கடல் கடந்து போய் மீண்டும் ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த சிந்துபாத் படத்தின் கதை. மிகவும் பழைய கதையான இது யாருடைய கதை என்கிற ரகசியத்தை வெளியில் சொன்னால் படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டார்கள். அதனால் அதை நான் சொல்ல மாட்டேன்.

இந்தப் படத்தில் என் மகன் சூர்யாவை நடிக்கக் கேட்டப்போது நான் நடிக்கவில்லை என்றாலும் அவனை நடிக்க வைக்க முடிவு செய்தேன். அந்தளவுக்கு இந்தக்கதை நல்ல கதை. இந்தப்படத்தின் நாயகி கத்திப் பேச வேண்டும். அஞ்சலி இயல்பாகவே அப்படி பேசுபவர் என்பதால் இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார். எப்படி இளையராஜாவின் பாடல்கள் நமக்கு நெருக்கமாக இருக்குமோ? அப்படி ஒரு நெருக்கத்தை யுவனின் இசை உணர வைக்கும்” என்றார் விஜய் சேதுபதி.