Banner After Header

ஸ்கெட்ச் – விமர்சனம்

0

RATING – 3/5

நட்சத்திரங்கள் – விக்ரம், தமன்னா, ஸ்ரீமன், ஹரிஷ் பெரடி மற்றும் பலர்

இசை – எஸ். தமன்

ஒளிப்பதிவு – சுகுமார்

இயக்கம் – விஜய் சந்தர்

வகை – ஆக்‌ஷன், த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 18 நிமிடங்கள்

‘மெய் வருத்த கூலி தரும்’ என்கிற திருவள்ளுவரின் குறளுக்கேற்ப எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதற்காக உடல் வருத்தி  உயிர் கொடுக்கும் விக்ரமின் நடிப்பில் வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு வந்திருக்கும் படம் தான் இந்த ‘ஸ்கெட்ச்.’

வட சென்னை என்றாலே எப்படி சேரிப்பசங்க நம்ம ஞாபகத்துக்கு வந்துட்டு போவாங்களோ? அதே மாதிரி தான் பைனான்ஸ் கொடுக்கும் சேட்டுகளும்..!

அப்படி சேட்டு ஒருத்தர்கிட்ட பைனான்ஸ் வாங்கி கார், டூவீலர்னு வண்டிகளை வாங்கிட்டு தவணையை கட்டாமல் டிமிக்கி கொடுக்கிறவங்களோட வண்டிகளை ப்ரெண்ஸ்களோட சேர்ந்து பக்காவா ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்குறது தான் விக்ரமோட ட்யூட்டி.

அதே ஸ்பெஷாலிட்டியோட அந்த ஏரியாவைச் சேர்ந்த பிரபல ரெளடி ஒருத்தனோட ராசியான காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குறார் விக்ரம்.

அதுக்கப்புறம் விக்ரமின் நண்பர்கள் ஒவ்வொருத்தரா கொலை செய்யப்படுகிறார்கள். ”ஷாக்” ஆகிற விக்ரம் காருக்கு சொந்தக்கார ரெளடி தான் இந்த கொலைகளை எல்லாம் செய்றான்னு சந்தேகப்பட, இன்னொரு பக்கம் கொலையாளியை போலீசும் தன் பங்குக்குத் தேட யாருமே எதிர்பார்க்காத கிளைமாக்ஸோட சமூகத்துக்கு ஒரு நல்ல சோஷியல் மெசேஜ் உடன் மாஸ் எண்டர்டெயினரா கொடுத்திருக்கார் இயக்குனர் விஜய் சந்தர்.

பேரன், பேத்தி எடுக்கிற வயசுக்கான அடையாளங்கள் முகத்துல தெரிஞ்சாலும் இளமைத் துடிப்பான நடிப்புல இப்பவும் நான் சேது விக்ரம் தான் என்று ஸ்கோர் செய்கிறார் விக்ரம். கை விரல்களில் அவர் காட்டும் புதுவித ஸ்டைல், இக்கால இளைஞர்களுக்கு செல்பி ஸ்டைலாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குறிப்பாக புழுதி பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே கதிகலங்குகிறது. அப்படிப்பட்ட பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை அமைத்த பைட் மாஸ்டருக்கு பாராட்டுகள் தனி!

ஆரம்பத்தில் கெட்டவனாகத் தெரிந்தாலும் போகப் போக விக்ரமின் நல்ல மனசு கண்டு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் அக்ரஹாரத்துப் பெண்ணாக வரும் நாயகி தமன்னா. அவருடைய வெள்ளைத் தோல் அந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறது. விக்ரமுடன் சில காட்சிகள் ரொமான்ஸ், டூயட் தவிர வியந்து பாராட்ட எக்ஸ்ட்ராவாக ஒன்றுமில்லை.

காமெடி, செண்டிமெண்ட் இரண்டிலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள் விக்ரமின் நண்பர்களாக வரும் ஸ்ரீமன், ‘கல்லூரி’ வினோத், ‘கபாலி’ விஷ்வந்த்!

பைனான்சியராக வரும் ஹரிஷ் பெரடி, அடிதடி வில்லன்களாக வரும் குமார், அருள்தாஸ், ஆர்.கே.சுரேஷ், எம்.எல்.வாக வரும் பி.எல்.தேனப்பன் என கதைக்குப் பொருத்தமான முகங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

படம் முழுக்க வந்து காமெடி செய்வார் என்று எதிர்பார்த்தால் ஒரு சில சீன்களில் மட்டும் தலையை காட்டி விட்டு காணாமல் போகிறார் சூரி.

மசாலா படத்துக்குரிய பின்னணி இசையைக் கொடுத்த தமன், பாடல்களில் தெலுங்கு வாடை வீசுவதை கவனித்து தவிர்த்திருக்கலாம். அல்லது பாடல்களை போடாமலே விட்டிருக்கலாம். ஏனென்றால் படத்தில் வரும் பாடல்கள் காட்சிகளின் வேகத்தை மட்டுப்படுத்துகின்றன.

விக்ரமையும், தமன்னாவையும் அழகாகக் காட்ட வேண்டுமென்பதில் ரொம்பவே அக்கறையோடு கேமராவை கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

வட சென்னை என்றாலே ரெளடியிஸம் தானா? என்கிற கேள்வி படம் பார்க்கும் போது எழுந்தாலும் எதிர்பாராத ட்விஸ்ட்டோடு முடிகிற கிளைமாக்ஸும், அப்போது சொல்லப்படுகிற சோஷியல் மெசேஜூக்காக இயக்குனர் விஜய் சந்தரை பாராட்டலாம்.

ஸ்கெட்ச் – கெத்து!

Leave A Reply

Your email address will not be published.