Banner After Header

சொல்லிவிடவா – விமர்சனம்

0

 

RATING – 2.5/5

நடித்தவர்கள் – சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜூன், கே.விஸ்வநாத், சுஹாசினி மணிரத்னம், பிரகாஷ் ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ்

இசை – ஜாஸி கிப்ட்

ஒளிப்பதிவு – ஹெச்.சி வேணுகோபால்

இயக்கம் – அர்ஜூன்

வகை – நாடகம், ரொமான்ஸ்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 31 நிமிடங்கள்

விஷாலுடன் ‘பட்டத்து யானை’ படத்தின் தோல்விக்குப் பிறகு பட வாய்ப்புகள் அமையாத தன் மகள் ஐஸ்வர்யாவுக்காகவே அர்ஜீன் சொந்தமாகத் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் தான் ‘சொல்லி விடவா.’

எப்படி வாரிசு நடிகர்கள் முதல் படத்தை காதல் கலந்த கதையை தேர்ந்தெடுத்து நடிப்பார்களோ? அதே ஃபார்முலாவில் தனது மகளுக்கு காதல் கதையோடு தனது வழக்கமான தேசப்பற்று என்கிற விஷயத்தையும் திரைக்கதையாக்கியிருக்கிறார்.

தனியார் டிவி சேனல் ஒன்றில் வேலை பார்க்கும் ஹீரோ சந்தன் குமாரும், அவரைப் போலவே திருமணம் நிச்சயமான இன்னொரு தனியார் டிவி சேனலில் வேலை பார்க்கும் நாயகி ஐஸ்வர்யா அர்ஜூனும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

இருவரையுமே அந்தந்த சேனல்கள் தங்கள் தரப்பில் கார்கில் போரை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக காஷ்மீருக்கு அனுப்புகிறது. சென்னையில் இருக்கிற போது சந்தன் குமாருடன் மோதிக்கொள்ளும் ஐஸ்வர்யாவுக்கு காஷ்மீரில் அவருடைய நல்ல குணங்களைப் பார்த்ததும் காதல் வருகிறது. திருமணம் நிச்சயமாகி விட்டதால் தன்னுடைய காதலை சந்தன் குமாரிடம் தெரிவிக்க தயங்குகிறார். அதேபோல சந்தன் குமாரும் தனது காதலை ஐஸ்வர்யாவிடம் சொல்ல தயங்குகிறார்.

போர் முனையில் காதலில் விழுந்த ஜோடிகள் தங்கள் காதலில் ஜெயித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

அர்ஜூன் படங்கள் என்றாலே தேசப்பற்றும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் தாராளமாக இருக்கும், இந்தப் படத்திலும் அந்த இரண்டு விஷயங்கள் இருந்தாலும் கூடுதலாக காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் சந்தன் குமாரின் நடிப்பு, ஆக்‌ஷன் எல்லாமே அப்படியே அர்ஜூனை திரையில் பார்த்தது போன்ற உணர்வைத் தருகிறது. தெருக்களின் சந்து பொந்துகளிலும், வீட்டு மாடிகளிலும் பரபரவென்று ஓடுவதும், வில்லன் கோஷ்டிகளை அடித்து நொறுக்குவதுமாக ஓப்பனிங் சண்டைக் காட்சியிலேயே அசத்துகிறார்.

நாயகியான ஐஸ்வர்யா அர்ஜூன் முதல் படத்தை விட, இதில் நடிப்பில் ஒருபடி முன்னேறியிருக்கிறார். போக்குவரத்துக் காவலரான நெல்லை சிவாவிடம் அவர் பேசும் நீண்ட டயலாக், எப்போதுமே துறுதுறுவென்றிருப்பது, ஹீரோவை கேலி செய்வது, நடனம், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார். சில காட்சிகளில் அவருடைய வயதை மீறியை முதிர்ச்சியை முகம் காட்டுகிறது.

யோகி பாபு, சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் இருந்தும் சிரிக்கும் படியான காமெடிக்காட்சிகள் என்பது வெகுகுறைவு. நாயகியின் அத்தையாக வரும் சுஹாசினி மணிரத்னமும், தாத்தாவாக வரும் கே.விஸ்வநாத்தும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரே காட்சியில் வந்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் நடிப்பில் நெகிழ வைக்கிறார் பிரகாஷ்ராஜ்!

கார்கில் போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டமாகவும், காஷ்மீரின் இயற்கை அழகை கண்ணுக்கு குளிச்சியாகவும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது ஹெச்.சி.வேணுகோபாலின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஜாஸி கிப்ட் இசையில் ‘சொல்லி விடவா’, ‘உயிரே உயிரே’ இரண்டு பாடல்களும் மெல்லிசை.

ஹீரோ கிண்டல் செய்தால் பதிலுக்கு ஹீரோயினும் அதேமாதிரி கிண்டல் செய்வது போன்ற ஓல்ட் டைப் காட்சிகளும், படத்தின் நீளமும் சோர்வைத் தருகின்றன.

காதல் தான் கதையில் பிரதானம் என்பதால் திரைக்கதையில் சுவாரஷ்யமான, விறுவிறுப்பான காட்சிகள் இல்லாததும், ஏற்கனவே பார்த்து சலித்த பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. ராணுவ வீரர்கள் படும் துயரங்களையும், அவர்களது தியாகத்தையும் காட்சிப்படுத்தி தேச உணர்வை திரையில் கொண்டு வந்ததற்காக அர்ஜூனைப் பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.