Banner After Header

மீண்டும் ஆதியை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் சுந்தர்.சி!

0

மாபெரும் வெற்றி பெற்ற ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஆதி.

அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்திருந்த இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சியே மீண்டும் தயாரிக்கிறார். இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இயக்குனர் கரு.பழனியப்பன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், ‘புட் சட்னி’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த டி.பார்த்திபன் தேசிங்கு இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும்.

காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக இப்படத்தின் தலைப்பு நவம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.