நமீதாவை லேடி டான் ஆக்கிய டி.ராஜேந்தர்!
ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி போன்ற ஏராளமான வெள்ளிவிழாப் படங்களை இயக்கியவர் டி.ராஜேந்தர்.
தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவரான இவர், கடைசியாக ‘வீராசாமி’ என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ”இன்றைய காதல் டா” என்று வித்தியாசமான டைட்டிலை வைத்திருக்கிறார்.
இப்படத்தில் வித்தியாசமான லேடி டான் நடிக்கிறார் நமீதா. இவருடன் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாபு, கவண் ஜெகன், மைதிலி என்னை காதலி சுரேஷ், கூல் சுரேஷ், ‘நினைத்தாலே இனிக்கும்’ ராஜப்பா, கொட்டாச்சி, தியாகு போன்ற பல நடிகர்களுடன், புதுமுகங்கள் சிலரும் நடிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க இளமை சொட்டும் காதல் கதையாக இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற படமாக உருவாக இருக்கிறது. வழக்கம் போல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் என சகலத்தையும் கையில் எடுத்துள்ளார் டி.ராஜேந்தர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மும்மொழிகளில் தயாராகும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் உஷா ராஜேந்தர் தயாரிக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.