Banner After Header

தானா சேர்ந்த கூட்டம் – விமர்சனம்

0

RATING – 3.5/5

நட்சத்திரங்கள் – சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்

இசை – அனிருத்

இயக்கம் – விக்னேஷ் சிவன்

வகை – ஆக்‌ஷன், காமெடி, நாடகம்

சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 18 நிமிடங்கள்

‘மாஸ்’ என்ற பெயரில் தொடர்ந்து ‘சிங்கமாக’ சீறிக்கொண்டிருந்த சூர்யா அதிலிருந்து கொஞ்சம் ரூட்டை மாற்றி ப்ரெண்ட்ஸ்’ கால கட்டத்தில் பார்த்த அதிகம் அலட்டல் இல்லாத ஹீரோவாகியிருக்கும் படம் தான் இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்.’

சி.பி.ஐ ஆபீஸ்ல கிளர்க்கா வேலை செய்ற தம்பி ராமையா மேலதிகாரியான சுரேஷ்மேனன் லஞ்சம் வாங்கிட்டு செய்ற சில சட்டத்துக்கு புறம்பான விஷயங்களைப் பத்தி அரசுக்கு மொட்டைக் கடுதாசியாக எழுதி போட்டுடுறார்.

அதனால அவர் மேல செம கடுப்புல இருக்கிற சுரேஷ் மேனன், அங்க வேலைக்குச் சேர வர்ற தம்பிராமையாவோட மகன் சூர்யாவை தகுதியிருந்தும் தன்னோட அதிகார பலத்தால வேலை கிடைக்காமச் செய்றார்.

இன்னொரு பக்கம் போலீஸ் வேலைக்கு முயற்சி பண்ணி அது கெடைக்காம தற்கொலை பண்ணிக்கிறார் அவரோட நண்பரான கலையரசன்.

இதனால் கோபப்படுற சூர்யா எந்த வேலையை யார் தனக்கு கெடைக்காமச் செஞ்சாரோ அதே சுரேஷ் மேனன் பேர்ல போலி சிபிஐ அதிகாரியா மாறி தன்னை மாதிரியே வேலையில்லாமல் இருக்கிற இளைஞர் கூட்டத்தை வெச்சுக்கிட்டு அரசுக்கு கணக்கு காட்டாம கோடிக்கணக்குல பணத்தையும், நகைகளையும் பதுக்கி வெச்சிருக்கிறவங்களோட வீடுகள்ல சோதனையை நடத்த ஆரம்பிக்கிறார்.

அப்படி நடத்துற சோதனைகளால அவர் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறார்? சோதனைகள்ல கெடைக்கிற பணத்தையும், நகைகளையும் சூர்யா என்ன பண்ணினார்? என்பதே மீதிக்கதை.

இதுவரை சிங்கமாக சீறி சீனுக்கு சீன் படங்களில் ஓவர் மாஸ் காட்டி வந்த சூர்யா இதில் வேலையில்லாத இளைஞர்களின் மனசாட்சியாகி அவர்களின் பிரச்சனையை ஒரு சாதாரண இளைஞராக திரையில் பேசியிருப்பது ரசிகர்களுக்கு பழைய சூர்யாவை மீண்டும் திரையில் பார்த்த உணர்வைத் தரும்.

பிராமணப் பெண்ணாக வரும் நாயகி கீர்த்தி சுரேஷ் அதற்காக சில பிரமாணப் பாஷைகளைப் பேசுகிறார். சூர்யாவோடு டூயட் பாடுகிறார். கேமராவில் கொள்ளை அழகாகத் தெரிகிறார். இதைத்தாண்டிய எந்த முக்கியத்துவமும் இல்லை.

‘பாகுபலி’யில் சிவகாமியாக கம்பீரம் காட்டிய ரம்யா கிருஷ்ணன் இதில் ‘படையப்பா’ ரம்யாகிருஷ்ணனை ஞாபகப்படுத்துகிறார்.

செந்தில், சத்யன், யோகிபாபு, நந்தா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி என படத்தில் சின்னச் சின்ன கேரக்டர்களுக்குக் கூட ரசிகர்களுக்கு தெரிந்த முகங்களாகப் போட்டு பட்ஜெட்டை எகிற வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அரசியல்வாதி ஆனந்தராஜ் வருகிற காட்சிகளில் எல்லாம் குலுங்கி குலுங்கிச் சிரிக்கலாம்.

படத்தில் வருகிற பெரும்பாலான காட்சிகள் சமகாலத்தில் நடப்பது போல தெரிகிறது. இருந்தாலும் எங்கே படத்துக்கு எதிராக ஏதாவது அரசியல்கட்சி பஞ்சாயத்தைக் கூட்டி விடுவார்களோ என்பதில் உஷாராகி படத்தின் கதைக்காலம் 80களில் நடப்பது போல காட்டியிருப்பது புத்திசாலித்தனம்.

பின்னணி இசை, ‘சொடக்கு’ ‘ஒரு பட்டாம் பூச்சியாம்’ பாடல்கள் என இசையில் இளவட்டங்களின் மனசை கொள்ளையடித்திருக்கிறார் அனிருத்.

அம்பாசிடர் கார்கள், தினசரி பேப்பர்கள், கோல்ட் ஸ்பாட் குளிர்பானம் என 80களின் கால கட்டத்தை அப்படியே கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் கரண். அவருடைய தேடலுடன் கூடிய அந்த  கடின உழைப்புக்கு ஸ்பெஷல் பாராட்டு.

ஹிந்தியில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக் தான் இந்தப்படம். ஆனால் அதை அப்படியே படமாக்காமல் தமிழுக்காக சில மாற்றங்களைச் செய்த விதத்தில் லாஜிக் மீறல்கள் உட்பட ஒரு சில இடங்களில் சொதப்பியிருக்கிறார்கள்.

இருந்தாலும் திறமை இருந்தும் வேலை கிடைக்காத சூழல், மீறி வேலை கிடைத்தாலும் அதை லஞ்சம் கொடுத்து தான் வாங்க வேண்டிய இக்கட்டான நிலை என இக்கால இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை 80-களின் பின்னணியில் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் பேசிய விதத்தில் பாராட்டுகளைப் பெறுகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

தானா சேர்ந்த கூட்டம் – இளைஞர்களின் மனசாட்சி!

Leave A Reply

Your email address will not be published.