Banner After Header

தடம் – விமர்சனம் #Thadam

0

RATING – 3.8/5

‘தடையற தாக்க’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் – மகிழ் திருமேனி கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம் தான் ‘தடம்’.

இரட்டையர்களான ஹீரோ அருண் விஜய்யில் ஒருவர் நன்கு படித்தவர், சிவில் இன்ஞ்சினியராக வேலை செய்பவர். இன்னொருவர் படிக்காதவர், நண்பன் யோகிபாபுவுடன் சேர்ந்து சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்பவர்.

ஒரு சந்தர்ப்பத்தில் பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் நள்ளிரவில் படுகொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்ட இடத்தில் அருண் விஜய் வந்து போனதற்கான புகைப்பட ஆதாரம் ஒன்று போலீசிடம் சிக்குகிறது. அந்த ஆதாரத்தை வைத்து கொலையை துப்பு துலக்கும் பொறுப்பு பெண் போலீஸ் அதிகாரி வித்யா பிரதீப்பிடம் கொடுக்கப்படுகிறது.

கொலைகாரனை கண்டுபிடிப்பதற்கான அடுத்தடுத்து தடயங்கள் கிடைத்தாலும், கொலை செய்தவர் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர்களில் ஒருவர் என்பதால் கொலையாளி யார்? என்கிற முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுகிறது போலீஸ்.

வழக்கு நீதிமன்றம் போகிறது. இரட்டையர்களில் உண்மையான கொலைக் குற்றவாளி யார்? அவருக்கு தண்டனை கிடைத்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கதை தான் ஹீரோ, நமக்கெல்லாம் அதற்கடுத்த இடம் தான் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் அருண் விஜய். அந்த வரிசையில் இந்தப்படமும் அருண் விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் இன்னொரு படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டுமஸ்தான உடலமைப்பில் இரண்டு கேரக்டர்களுக்குமான வித்தியாசத்தை நடிப்பில் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் போலீஸ் ஸ்டேஷனில் இரட்டையர் அருண்விஜய்யும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நல்ல விருந்து.

இரண்டு அருண் விஜய்களுக்கும் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என இரண்டு புதுமுக நாயகிகள். கண்ணியமான காதல் காட்சிகளில் ரசிகர்களை கட்டிப் போடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருந்தால் நடிப்பில் எக்ஸ்ட்ராவாக ஸ்கோர் செய்திருப்பார்கள்.

கதாநாயகிகளை விடவும் அருண் விஜய்க்கு நிகராக திரையில் நின்று ஆடுகிறார் கொலை வழக்கை விசாரிப்பவராக வரும் பெண் போலீஸ் அதிகாரி வித்யா பிரதீப். ஒரு கொலை வழக்குக்காக தடயங்களை தேடி அலைவதும், அப்படியே தடயங்கள் கிடைத்தாலும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறுவதையும் பார்க்கும் போது படம் பார்க்கும் நமக்கே அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. ஒரு கொலை வழக்குக்காக காவல்துறை எந்தளவுக்கு வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்பதை அவருடைய கேரக்டர் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

சில காட்சிகளே வந்தாலும் அருண் நெகிழ வைக்கிறார் அருண் விஜய்யின் அம்மாவாக வரும் சோனியா அகர்வால். அதே சமயத்தில் எதற்காக அவர் சீட்டு விளையாட்டுக்கு அடிமையானார் என்பதற்கு வலுவான காரணம் இல்லாலது ஏமாற்றம்.

இரவு நேரக் காட்சிகளின் பதட்டத்தை துல்லியமாக கேப்சர் செய்து கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்குரிய டெம்போவை கொஞ்சமும் குறையாமல் பின்னணியில் இசைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் அருண் ராஜ்.

தமிழ்சினிமாவில் எத்தனையோ ஒரே உருவ ஒற்றுமை கொண்ட ‘இரட்டையர்’ கதைகளை திரைப்படங்களாக பார்த்திருக்கிறோம். அந்த ‘ரெகுலர் டச்’ கொஞ்சம் கூட இல்லாமல் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கதை எழுதி, ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் வகையில் காட்சிக்கு காட்சிக்கு விறுவிறுப்பைக் கூட்டி பக்காவான ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

தடம் – வெற்றி மகுடம் சூட்டலாம்!

Leave A Reply

Your email address will not be published.