தெரு நாய்கள் – விமர்சனம்

0

theru-naaigal

RATING 3/5

நட்சத்திரங்கள் : பிரதீக், பாவல் நவகீதன், அப்புக்குட்டி, மதுசூதனனன், மைம் கோபி, அக்‌ஷிதா, இமான் அண்ணாச்சி மற்றும் பலர்

இயக்கம் : எஸ். ஹரி உருத்ரா

வகை : த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U’

கால அளவு : 1 மணி நேரம் 42 நிமிடங்கள்

மிழக விவசாயிகளைப் பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களின் பின்னணியில் இருக்கும் அரசியலையும், அரசியல்வாதிகளையும், அவர்களின் பின்னால் ஒழிந்து கொண்டு நினைத்ததை சாதிக்க எந்த லெவலுக்கும் போகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோர முகத்தையும் பற்றி துணிச்சலோடு காட்சிப்படுத்தியிருக்கும் படம் தான் இந்த ‘தெரு நாய்கள்.’

மன்னார்குடியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு ரேட்டுக்கு விளை நிலங்களை பறித்துக் கொடுக்கும் தரகர் வேலையைச் செய்கிறவர் எம்.எல்.ஏவான மதூசூதனன். அதே வழியில் சுவீட் கடை நடத்தி வரும் இமான் அண்ணாச்சியிடமும் நிலத்தைக் கேட்கிறார். அவரோ தர மாட்டேன் என்று முரண்டு பிடிக்க, தனது அடியாட்களை வைத்து கொலை செய்கிறார்.

இதனால் கொதித்தெழும் இமான் அண்ணாச்சியின் நண்பர்களான பிரதீக், அப்புக்குட்டி, ஆறுபாலா, பாவல் நவகீதன் ஆகியோர் தேர்தல் நேரத்தில் எம்எல்ஏ மதுசூதன ராவைத் கடத்தி மக்கள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்குள் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். அவர்களிடமிருந்து எம்.எல்.ஏ மதூசூதனன் எப்படி தப்பிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

இதுவரை பல படங்களில் காமெடி கேரக்டரில் நாம் பார்த்து ரசித்த இமான் அண்ணாச்சி இதில் குணச்சித்திர கேரக்டரில் அழுத்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதை முழுக்க முக்கிய நாயகர்களாக வரும் அப்புகுட்டி, ப்ரதீக், ஆறு பாலா, பாவல் நவகீதன் ஆகியோர் கன கச்சிதம் காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருந்தாலும், சொல்ல வந்த விஷயம் முக்கியமானது என்பதால் காதலை ஒரு ஊறுகாய்த் துண்டைப்போல லைட்டாகத்தான் தொட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா.

தளபதி ரத்னத்தின் ஒளிப்பதிவும், ஹரிஸ் – சதிஷ் ஆகியோரது இசையும், ஆக்‌ஷன் படத்துக்குரிய மிரட்டலை குறையாமல் பார்த்துக் கொள்கின்றன. நறுக்க வேண்டிய இடத்தில் செம ஷார்ப்பாக கத்தரி போட்டு படத்துக்கு கூடுதல் விறுவிறுப்பை தந்திருக்கிறது மீனாட்சி சுந்தரத்தின் எடிட்டிங்.

இதுபோன்ற சமூகப்பிரச்சனையைப் பற்றிப் பேசும் படமென்றால் கொடி பிடித்துக் கொண்டு போராடுவது, போலீசுடன் மோதுவது என வழக்கமான ஃபார்முலாவாக இல்லாமல் இரண்டு ரெளடிகளுக்கிடையே நடக்கும் மோதலில் விவசாயிகளின் பிரச்சனையை அழகாகக் கோர்த்து திரைக்கதை அமைத்த விதம் பாராட்டுக்குரியது.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறது ஆளும் அரசு. ஆனால் அப்படிச் சொல்கிற அரசு தான் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாய நிலங்களை பாழாக்கும் திட்டங்களுக்கு அனுமதி தருகிறது. இதற்குப் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைதான் ஓங்கியிருக்கிறது என்கிற உண்மையை உரக்கச் சொல்லி அறிமுகப் படத்தையே சமூகப்பொறுப்போடு தந்திருக்கிறார் இயக்குநர் ஹரி உத்ரா.

Leave A Reply

Your email address will not be published.