Banner After Header

திருமணம் – விமர்சனம் #Thirumanam

0

RATING – 2.8/5

டம்பர திருமணத்தால் ஆயுள் முழுவதும் சந்தோஷத்தை தொலைப்பவர்களுக்கு பாடம் புகட்டும் விதமாக வெளியாகியிருக்கும் படம் தான் சேரனின் ‘திருமணம்’.

‘பாரதி கண்ணம்மா’ தொடங்கி தவமாய் ‘தவமிருந்து’ உட்பட ஆகச்சிறந்த படங்களை கொடுத்த இயக்குனர் சேரன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலமாக ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

கதைப்படி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சேரனின் தங்கை காவ்யா சுரேஷ் தனியார் பண்பலை வானொலியில் வேலை பார்க்கும் ஜமீன்தார் குடும்பத்து வாரிசான ஹீரோ உமாபதியை காதலிக்கிறார். இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண வேலைகளை ஆரம்பிக்கிறார்கள்.

உமாபதியின் குடும்பத்தார் சொந்தங்கள் மத்தியில் கெளரவம் குறைந்து விடக்கூடாது என்று திருமணத்தை ஆடம்பரமாக நடத்த ஆசைப்படுகிறார்கள். ஆனால் சேரனோ தேவையில்லாத வீண் செலவுகள் எதற்கென்று எளிமையாக கோவிலில் திருமணம் செய்ய விரும்புகிறார்.

திருமண அழைப்பிதழில் ஆரம்பிக்கும் இந்த இரு வீட்டாரின் சண்டை, ஜவுளிக்கடையில் துணி எடுப்பது, மண்டபத்தில் சாப்பாடு போடுவது உட்பட எல்லா விஷயங்களிலும் முரண்பட்டு நிற்கிறது.

இருவீட்டாருக்குமிடையே நடக்கும் இந்த மோதல்களை சமாளித்து திருமண பந்தத்தில் காதல் ஜோடி எப்படி இணைந்தார்கள்? என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்தாலும் ஒரு கமர்சியல் படம் என்று ஹீரோ பக்கம் சாயாமல் இன்றைய ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசைப்படும் சமூகத்துக்கு தேவையான கருத்துள்ள கண்ணியமான படத்தைக் கொடுத்திருக்கிறார் சேரன்.

படத்தில் கண்டிப்பான அண்ணனாக வந்தாலும், தங்கையின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்று அவர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் இப்படி ஒரு அண்ணன் தனக்கும் கிடைக்க மாட்டானா? என்று படம் பார்க்கும் தங்கைகளை ஏங்க வைத்து விடுகிறார்.

நாயகனாக வரும் உமாபதி ராமையாவை பார்த்தவுடன் ஏற்றுக்கொள்ள யோசித்தாலும் காட்சிகள் நகர, நகர தன் துடிப்பான நடிப்பால் கதையின் நாயகனாக நம்மை கவர்ந்து விடுகிறார். நாயகியாக வரும் காவ்யா சுரேஷ் எந்த இடத்திலும் அண்ணனை விட்டுக் கொடுக்காத பாசமுள்ள தங்கையாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கேரக்டருக்கு செட்டாகி விட்டாலும், கோடம்பாக்கத்துக்கு செட் ஆவார் என்பது சந்தேகம் தான்.

சீரியல் டைப்பில் நகரும் காட்சிகளில் அவ்வப்போது நம்மை ஆசுவாசப்படுத்துவது கார் டிரைவராக வரும் பால சரவணனின் லைட்டான காமெடி தான். மைண்ட் வாய்சில் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே சிரிப்புக்கு கியாரண்டி.

எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சுகன்யா, ஜெயப்பிரகாஷ் என படத்தில் வருகிற மற்ற நடிகர், நடிகைகளும் தங்கள் பங்களிப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

இடைவெளி விட்டு படம் இயக்க வரும் அத்தனை இயக்குனர்களும், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்பவும், கால மாற்றத்துக்கு ஏற்பவும் தங்களை அப்டேட் செய்து கொள்வது நல்லது.

சேரன் படங்களில் பாடல்கள் எப்போதுமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுபவையாக இருக்கும். ஆனால் இதில் அப்படியான பாடல் என்று ஒன்று கூட இல்லாதது ஏமாற்றம். அதேபோல பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் சபேஷ்-முரளி.

டிவி சீரியலே திரைப்படம் மாதிரி செலவு செய்து பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இந்த காலத்தில் ஒரு படத்தையே சீரியல் டைப்பில் நகர்த்தியதை ரசிக்க முடியவில்லை. அந்த வகையில் சேரனும் தன்னை இன்னும் கொஞ்சம் அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

இருந்தாலும் காசு முக்கியம் என்று கமர்ஷியல் பக்கம் போகாமல், சொந்தங்கள் மத்தியில் கெளரவத்துக்காக ஆடம்பர திருமணத்தை நடத்தும் இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்தை சரியான நேரத்தில் சொன்னதற்காக இயக்குனர் சேரனை பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.