Banner After Header

தொட்ரா – விமர்சனம் #Thodra

0

RATING – 2.3/5

நடித்தவர்கள் – பிரித்விராஜ், வீணா, எம்.எஸ்.குமார், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர்

இசை – ஆர்.என்.உத்தமராஜா

ஒளிப்பதிவு – செந்தில் குமார்

இயக்கம் – மதுராஜ்

வகை – நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 1 மணி நேரம் 58 நிமிடங்கள்

”சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்றவர் புரட்சியாளர் மாமேதை டாக்டர் அம்பேத்கர். ‘தொட்ரா’ படத்தின் கதைக்களமும் அந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.

விழுப்புரம் மாவட்டங்களில் அதிகளவில் நடைபெறுவதாக சொல்லப்படும் ‘நாடகக் காதல்’ என்கிற நிஜ சமாச்சாரத்தை அதே மாவட்டத்தில் அதிகளவில் நடைபெறும் ஆணவக்கொலையோடு முடிச்சு போட்டு சாதியை வைத்து அரசியல் செய்யும் தலைவர்களுக்கு பாடம் புகட்டும்படியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மதுராஜ்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஹீரோ பிரித்வி தன்னை விட உயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த ஹீரோயின் வீணாவை காதலிக்கிறார். பிரித்வியின் காதலுக்கு பணம் கொடுத்து உதவுகிற இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவரை வைத்து வீணாவின் குடும்பத்தினரிடம் கோடிக்கணக்கில் பணம் பறிக்க திட்டம் போடுகிறார்.

ஆனால் நிஜமாகவே காதலிக்கும் காதல் ஜோடியை ஒருபக்கம் ஹீரோயின் குடும்பத்தார் சாதி வெறியில் பிரிக்க நினைக்க, இன்னொரு பக்கம் ஏ.வெங்கடேஷ் பணம் பறிப்பதற்காக துரத்த காதல் ஜோடி ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

கதாநாயகனாக வரும் பிரித்வி தன் வயதுக்கே உரிய சேட்டைகளோடு கூடிய காதல் காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியின் அண்ணனிடம் அடிவாங்கிக் கொண்டே ”சார் என்னை விட்டுடுங்க நான் எங்கேயாவது போயிடுறேன்” என்று கையெடுத்துக் கும்பிடும் காட்சியில் ‘உச்’ கொட்ட வைக்கிறார்.

நாயகி வீணா கேரள வரவு. பார்க்க கொழுக் மொழுக்கென்று பார்க்க அழகாகத்தான் இருக்கிறார். நடிப்பில் குறையில்லை. வில்லனுக்கேற்ற வில்லி மனைவியாக வருகிறார் ‘மைனா’ படப்புகழ் சூசன்.

சாதிச் சங்கத்தலைவராக வரும் புதுமுக வில்லன் கேரக்டருக்கு பொருத்தமானவராக வருகிறார் தயாரிப்பாளர் எம்.எஸ்.குமார்.

ஒரு பக்கம் தங்கை மீதான பாசம் அவரை துரத்தினாலும், இன்னொரு பக்கம் சாதி தரும் நெருக்கடியால் தன் மனைவியிடமே அவமானப்படுகிற இடங்களில் சாதிதலைவர்களை ஞாபகப்படுத்துகிறார்.

காதலர்களை ஒன்று சேர்ப்பதாகச் சொல்லி அவர்களின் குடும்பத்தினரிடம் கோடிகளை சுருட்டுகிற கேரக்டரில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அபாரம். அவரைப் போன்றவர்களிடம் சிக்கிக் கொள்கிற காதலர்களின் நிலைமை அந்தே பரிதாபம்!

அறிமுக இசையமைப்பாளர் உத்தமராசாவின் இசையில் சிம்பு பாடியிருக்கும் ‘பக்கு பக்குங்குது’ பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது.

இது நாடகக் காதலை சொல்கிற படமா? அல்லது ஆணவக்கொலைகளின் பின்னால் இருக்கும் சாதித் தலைவர்களின் முகத்திரையை கிழிக்கும் படமா? என்கிற திரைக்கதை குழப்பத்தை தவிர்த்திருந்தால் முழுப்படமும் இதயத்தை கனக்கச் செய்யும் படமாக இருந்திருக்கும்.

கலப்பு திருமணம் செய்கிற காதல் ஜோடிகளின் பின்னால் ஒளிந்து கொண்டு ‘என் இனம்’ என்று சுயநல அரசியல் செய்யும் தலைவர்களின் சாதி வெறிக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதுராஜ்.

Leave A Reply

Your email address will not be published.