அழச்சொன்னா சிரிக்கிற..? – கதாநாயகியின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட பாக்யராஜின் சிஷ்யர்!

0

Thodraaமுன்பெல்லாம் இயக்குனர்கள் கன்னத்தில் அறைந்தால் அதை அதிர்ஷ்டம் என்று எடுத்துக் கொள்வார்கள் கதாநாயகிகள். ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் வரை இயக்குனரை பஞ்சாயத்து இழுத்து விடுவார்கள்.

நல்ல வேளையாக அப்படி ஒரு பளார் சம்பவம் நடந்தும் படத்தின் இயக்குனரான மதுராஜை பஞ்சாயத்து வரை இழுக்காமல் முழுப்படத்திலும் எந்த பிரச்சனையும் செய்யாமல் நடித்துக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார் அறிமுக நாயகி வீணா.

ஜே.எஸ். அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்து வரும் படம் ‘தொட்ரா’.

இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது இயக்குனராக தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்..

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா அறிமுகமாகிறார். மேலும் எம். எஸ் குமார் அழுத்தமான வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் ஜெய் சந்திராவின் கணவர் தான்.

“இன்று ரியல் எஸ்டேட் பிஸினஸ் போல சத்தமில்லாமல், வெளியே தெரியாமல் வளர்ந்து வருவதுதான் லவ் பிசினஸ்.. இவர்களின் டார்கெட்டே காதலர்கள் தான்.. காதலர்களை பிரித்து வைக்க வேண்டுமா, இல்லை சேர்த்து வைக்க வேண்டுமா..? இரண்டுக்குமே பணம் வாங்கிகொண்டு ஆபீஸ் போட்டு பஞ்சாயத்து நடத்தும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

நானே இதை பல இடங்களில் கண்கூடாக பார்த்தபின் தான் இந்த கதையை உருவாக்கியுள்ளேன்.. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. கிருஷ்ணகிரியை கதைக்களமாக எடுத்துக்கொண்டாலும், வட மாவட்டங்களில் நடைபெற்ற, தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு பயங்கரமான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன். என்ற இயக்குநர் மதுராஜிடம் கதாநாயகியை அடித்த தகவலைப் பற்றியும் கேட்டோம்…

மலையாளத்தில் இருந்து வீணா என்பவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தியுள்ளோம்.. ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றை படமாக்கிக் கொண்டு இருந்தோம்.. ஆனால் அதன் சீரியஸ்னெஸ் உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாகயே இருந்தார். கிட்டத்தட்ட 30 டேக்கிற்கு மேல் போனது. அதனால் ஒருகட்டத்தில் கோபம் வந்து அவரை அடித்தும் விட்டேன். இன்றுவரை என்னோடு அவர் பேச மாட்டார். கண்டிப்பாக படம் ரிலீசானபிறகு நான் அடித்தது சரிதான் என்று அவர் நினைப்பார். மற்றபடி படம் முழுதும் நன்றாக நடித்துள்ளார் என்றார்.

கணவருக்காக சினிமா தயாரிக்க வந்த கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய் சந்திரா சரவணக்குமார்.

எந்நேரமும் பிசினஸ் பிசினஸ் என ஓடிக்கொண்டிருப்பவள் நான்.. சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் வாழ்க்கையில் இதுவரை நான் மூன்று படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் படம் தயாரிக்க முன்வந்ததே என் கணவருக்காகத்தான்.

எங்கள் திருமணத்தின் போதே என் கணவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருப்பது நன்கு தெரியும்.. ஆனால் தொழிலில் வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்தவர்கள் என்பதால், சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என்றதும் ஆரம்பத்தில் தயங்கினேன்..

ஆனால் எனது மாமியார், அவர் இறக்கும் தருவாயில் என்னை அழைத்து எனது கணவரின் சினிமா கனவை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டதுடன், உன் கணவன் நல்ல நடிகனாக வருவான், உன்னால் சினிமாவிலும் சாதிக்க முடியும் என ஊக்கமும் தந்தார். அந்த ஒரு வார்த்தை தான், இதோ இப்போது படத்தயாரிப்பாளராக என்னை உங்கள்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

என்றவரிடம் கணவனை ஹீரோ ஆக்காமல் வில்லனாக ஆக்கியது ஏன் என்கிற கேள்வியை கேட்காமல் இருக்க முடியுமா?

பணம் போடும் தயாரிப்பாளர் என்பதால் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்று இல்லையே.. மேலும் அப்படி வந்த கதைகள் எதுவும் எங்களை ஈர்க்கவில்லை..

அதுமட்டுமல்ல, வில்லனாக நடித்து உங்களது நடிப்புத் திறமையை முதலில் நிரூபியுங்கள்.. உங்களிடம் திறமை இருக்கும் பட்சத்தில் அதுவே உங்களை ஹீரோவாக ஆக்கும் என கணவரிடம் சொல்லி வந்தேன். அந்த சமயத்தில் தான் இயக்குனர் மதுராஜ், ‘தொட்ரா’ படத்தின் கதையுடன் எங்களை சந்தித்தார். அவர் இந்த கதையை சொன்ன விதம், எங்கள் இருவரை மட்டுமல்ல, என் குழந்தையையும் ஈர்த்து விட்டது என்றார்.

போக்கிரிராஜா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். பின் அவர் மற்றொரு தெலுங்கு படத்தில் பிஸியாகிவிட பாதி படம் ஒளிப்பதிவாளர் செந்தில் படமாக்க தொட்ரா உருவாகி உள்ளது. ‘ஆறாது சினம்’ உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் என்பவர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். சண்டைக் காட்சிகளை உறியடி படத்திற்கு காட்சிகள் அமைத்த விக்கி நந்தகோபால் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, பழநி, கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave A Reply