Banner After Header

டிக் டிக் டிக் – விமர்சனம் #TikTikTik

0

RATING – 2.8/5

நடித்தவர்கள் – ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், வின்சென்ட் அசோகன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – எஸ்.வெங்கடேஷ்

இசை – டி. இமான்

வகை – அட்வென்ச்சர், சை-பை, த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 2 மணி நேரம் 11 நிமிடங்கள்

ந்திய சினிமாவின் முதல் விண்வெளிப்படம் என்கிற பெருமித அடையாளத்தோடு தமிழில் வெளிவந்திருக்கும் படம் தான் இந்த ‘டிக் டிக் டிக்’.

விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வரும் எரிகல் ஒன்று சென்னை எண்ணூர் பகுதியில் விழுகிறது. அந்த விபத்தில் பொதுமக்கள் சிலர் பலியாகிறார்கள். அந்த விபத்தைத் தொடர்ந்து அடுத்து, அதை விட பெரிய எரிகல் ஒன்று பூமியில் விழும் என்றும் அது விழுந்தால் சுமார் 4 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் இந்திய பாதுகாப்புத்துறை எச்சரிக்கிறது.

எப்படியாவது இந்த பேராபத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது இந்திய அரசு. அதற்காக விண்வெளியிலேயே அந்த எரிகல்லை தாக்கி அழித்தால் விபத்தை தவிர்க்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால் அதற்காக 200 பவுண்ட்டு எடையுள்ள அணு ஆயுதம் தேவை என்றும், அந்த ஆயுதத்தை சீனா யாருக்கும் தெரியாமல் விண்வெளியில் மறைத்து வைத்திருக்கிறது என்றும் தெரிய வருகிறது.

கேட்டால் தர மாட்டார்கள், அதனால் அந்த அணு ஆயுதத்தை திருடு நாட்டுக்கு வரப்போகும் பேராபத்தை தடுக்க வேண்டும் என்று நினைக்கும் இந்திய பாதுகாப்புத்துறை அதற்காக திருட்டு வேலைகளைச் செய்யும் ஜெயம் ரவி மற்றும் அவரது இரண்டு நண்பர்களின் துணையோடு களமிறங்குகிறது.

அணு ஆயுதத்தை கைப்பற்றினார்களா? பேராபத்து தவிர்க்கப்பட்டதா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

திருடனா? மேஜிக் மேனா? ஹேக்கரா என ஜெயம் ரவியின் கேரக்டரில் அவ்வளவு குழப்பம். அதையும் தாண்டி வழக்கமான கமர்ஷியல் ஹீரோவாக இல்லாமல் பல நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் அன்பான அப்பாவாகவும் நடிப்பில் சிறப்பு செய்திருக்கிறார் ஜெயம் ரவி. அதுவும் அவருடைய மகனே படத்திலும் மகனாக வருவதால் அப்பா – மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூடுதல் யதார்த்தம்.

ஜெயம் ரவியைப் போலவே ஹீரோவைச் சுற்றி காதல் செய்யும் வழக்கமான ஹீரோயின் கேரக்டராக இல்லாமல் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார் நிவேதா பெத்துராஜ். அவருடைய ஓங்கு தாங்கான லுக் கேரக்டருக்கு வலு சேர்த்திருக்கிறது.

ஜெயம் ரவியின் நண்பர்களாக வரும் அர்ஜூனனும், ரமேஷ் திலக்கும் காமெடி என்ற பெயரில் எரிச்சலையே தருகிறார்கள்.

பிரம்மாண்டமான விண்வெளி மையம், ராக்கெட், விண்வெளியிலேயே நடக்கும் சாகசங்கள் என படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் அத்தையும் அட்டகாசம். அதற்கேற்ற பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். ‘குறும்பா…’ பாடல் மனதை மயக்கும் இனிய பாடல்!

போட்டி போட்டுக் கொண்டு உழைப்பைக் கொட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷுக்கும், ஆர்ட் டைரக்டருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

கற்பனைக் கதை என்றாலும் அப்பட்டமாகத் தெரியும் சில அடிப்படையான லாஜிக் மீறல்களை கவனித்து தவிர்த்திருந்தால் ‘இந்தியாவின் முதல் விண்வெளிப்படம்’ என்கிற பெருமை நிஜமாகவே கிடைத்திருக்கும்!

‘ஸ்பேஸ் மூவி’யா அப்படின்னா என்ன? என்று கேட்கும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கிற படம் தான் இந்த ‘டிக் டிக் டிக்’!

Leave A Reply

Your email address will not be published.