Banner After Header

டு லெட் – விமர்சனம் #ToLet

0

RATING – 4.5/5

புதிய பொருளாதாரக் கொள்கையால் 2007ம் ஆண்டில் இந்தியாவுக்குள் ஐடி கம்பெனிகள் அணிவகுத்தன. உரிமையாளர்கள் கேட்ட பணத்தை மறுப்பேதும் சொல்லாமல் கொடுக்கும் கொடை வள்ளல்களாக ஐடி ஊழியர்கள் மாறிப்போனதால் சென்னை மாதிரியான பெருநகரங்களில் வீட்டு வாடகை தாறுமாறாக உயர்ந்தன.

இந்த வாடகை உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டது நடுத்தர வர்க்கம் தான். அந்த பாதிப்பை உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருக்கும் படம் தான் இந்த ‘டு-லெட்’.

80க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்த இந்தப்படம் ‘அறம்’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற தமிழ்சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளில் இன்னொரு வரவு.

சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ஹீரோ சந்தோஷ் தன் மனைவி, மகனுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். ஒரு மாதத்துக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று வீட்டு உரிமையாளர் கறார் காட்ட, மனைவியையும், மகனையும் கூட்டிக்கொண்டு வாடகைக்கு வீடு தேடி சென்னை முழுக்க சுற்றுகிறார். வீடு கிடைப்பதற்குள் என்னென்ன சிரமங்களை அவர்கள் சந்திக்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.

வழக்கமான சினிமாவுக்குரிய எந்த மேக்கப்பும் இல்லை. படம் முழுக்க யதார்த்தங்களை காட்சிக்கு காட்சி இழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான செழியன்.

லட்சியத்துக்கு நடுவே அன்றாட வாழ்க்கைக்கான பணத்தேடல், வீடு தேடி அலைவது என உதவி இயக்குனர் கேரக்டருக்கு நூறு சதவீதம் பொருந்தியிருக்கிறார் ஹீரோ சந்தோஷ். அவருக்கு ஏற்ற ஜோடியாக நடுத்தர குடும்பத்துப் பெண்ணின் கோபம், பயம், எரிச்சல், ஏக்கம், தவிப்பு என அத்தனை உணர்வுகளையும் மிக அற்புதமாக பிரதிபலித்திருக்கிறார் ஷீலா.

குழந்தைகளிடம் நடிப்பை வாங்குவது தான் இயக்குனருக்கு ஏற்படும் சவால்களில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் அந்த இடத்தையும் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார் செழியன்.சந்தோஷ் – ஷீலா தம்பதியின் மகனாக வரும் சித்தார்த்திடம் மிக அழகாக வேலை வாங்கியிருக்கிறார். வாடகை வீட்டில் வசிக்கும் பிள்ளைகள் சுவரில் கிறுக்கக் கூட சுதந்திரம் இல்லை என்பதை சித்தார்த் கேரக்டர் வழியாக பதிவு செய்திருப்பது அபாரம்.

கார்செட் சைஸ் வீடுகளை வாடகைக்கு விட்டுக் கொண்டு ஹவுஸ் ஓனர் என்று பில்டப் கொடுக்கும் வீட்டு உரிமையாளர்கள் காட்டும் கண்டிப்பையும், பில்டப்பையும் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆதிரா.

”கதைக்குள்ள இருக்கிற மனுஷங்க மேல காட்டுற அக்கறையை உன் பக்கத்துல இருக்கிறவங்க மேலேயும் காட்டு”, ”இந்த டிவி நம்மளோடது, இந்த வண்டி நம்மளோடது, அப்போ ஏம்பா வீடு மட்டும் நம்மளோடது இல்ல” போன்ற இயல்பான வசனங்கள் அழகோ அழகு.

புகை, மது, பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அவசியமற்ற ‘மசாலா இம்சைகள்’ எதுவும் இல்லாத படமாக தந்ததற்காகவே இயக்குனரை வாய்வலிக்க பாராட்டலாம்

சொந்த வீடு கனவோடு வாடகை வீடுகளில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நடுத்தரக் குடும்பங்களின் வலியையும், வேதனையையும் நேர்மையாகவும், உண்மையாகவும் படமாக்கித் தந்திருக்கும் செழியனுக்கு எக்ஸ்ட்ரா பாராட்டுகள்.

‘டு லெட்’ மாதிரியான படங்களை ‘மாற்று சினிமா’ என்ற வழக்கமான வார்த்தையைப் போட்டு ஒதுக்காமல், இதுதான் நம்ம சினிமா என்கிற சிந்தனையோடு தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டியது நல்ல சினிமாவை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனின் கடமை.

Leave A Reply

Your email address will not be published.