Banner After Header

டிராஃபிக் ராமசாமி – விமர்சனம் #TrafficRamasamy

0

RATING – 2.3/5

நடித்தவர்கள் – எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகிணி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்

ஒளிப்பதிவு – குகன் எஸ். பழனி

இசை – பாலமுரளி பாலு

இயக்கம் – விக்கி

வகை – பயோகிராபி, நாடகம்

சென்சார் பரிந்துரை – ‘U’

கால அளவு – 1 மணி நேரம் 59 நிமிடங்கள்

பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக நீதி கேட்டு ‘ஒன் மேன் ஆர்மி’யாக போராடிக் கொண்டிருக்கும் சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை கதைதான் இந்த ‘டிராஃபிக் ராமசாமி’.

இது ஒரு பயோபிக் படம் இல்லை, அவர் தொடர்ந்த பல பொதுநல வழக்குகளில் மீன்பாடி வண்டிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு அந்த வண்டிகளின் பயன்பாட்டுக்கு தடை கேட்டு அவர் நடத்திய வழக்கை மட்டும் கதையாக்கி படமாக்கித் தந்திருக்கிறார்கள்.

மனைவி, மகள், பேத்தி, மருமகன் என குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வரும் ராமசாமி சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்கிறார்.
அத்தோடு சமூகத்தில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளையும் தட்டிக் கேட்பதால் கோர்ட் படியேறும் அவரிடம் சட்டத்தை நாமே கையில் எடுக்கக்கூடாது எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள், அதுதான் நீதியைப் பெற சரியான வழி என்று நீதிபதி எச்சரிக்கிறார்.

அன்றிலிருந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்கள் வைப்பது, நடைபாதை கடைகள் என ஒவ்வொரு பிரச்சனைக்கும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறார்.

அப்படித்தான் ஒருமுறை, மீன்பாடி வண்டி மோதி இளைஞர் ஒருவர் துடிதுடித்து இறந்து போவதை நேரில் பார்க்கும் அவர், அந்த சம்பவத்துக்குப் பின்னால் இருக்கும் மேயர், எம்.எல்.ஏ, அமைச்சர், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என அத்தனை பேர் மீதும் வழக்கு போட்டு அவர்களை நீதிமன்றத்துக்கு இழுக்கிறார்.

பெரிய கைகள் சம்பந்தப்பட்ட அந்த வழக்கில் அவருக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

தலைகீழாகத் தொங்கியபடி போலீஸிடம் அடிவாங்குவது, வில்லன்களிடம் அடிவாங்கி சேற்றில் விழுந்து புரள்வது, நிஜமாகவே கன்னத்தில் அறை வாங்குவது என 70ஐ தாண்டிய வயதிலும் உடம்பை வருத்திக் கொண்ட விதத்தில் ஆச்சர்யப்பட வைக்கிறார், எஸ்.ஏ.சந்திரசேகர்.

அதே சமயம், இயல்பான நடிப்பு என்று வரும்போது உடல்மொழிகளிலும், முகபாவனைகளிலும் செயற்கைத்தனத்தை வெளிப்படுத்துகிறார். வெள்ளைச் சட்டை, காக்கி பேண்ட், சட்டை பாக்கெட்டுகள் முழுக்க கேஸ் கட்டுகள், நெற்றியில் நாமம் என ரியல் டிராஃபிக் ராமசாமியின் தோற்றத்தில் நெற்றியில் நாமம் மட்டும் மிஸ்ஸிங்!

எஸ்.ஏ.சியை விட பல வருடங்கள் வயது குறைந்த ரோகிணி அவருடைய மனைவியாக வருகிறார். நடிப்பில் குறையில்லை என்றாலும் வயசு வித்தியாசம் சிரிப்பை வரவழைக்கிறது. வழக்கறிஞராக வரும் லிவிங்ஸ்டன் சில நீதிமன்ற காட்சிகளில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

ஆள் கடத்தல், கையை வெட்டுதல், கொலை செய்வதற்கெல்லாம் தனித்தனியாக ரேட் பிக்ஸ் செய்து ஜி.எஸ்.டியோடு விலைப்பட்டியல் போட்டு வைத்து ஆர்.கே.சுரேஷின் கதாபாத்திரத்தில் அத்தனை சினிமாத்தனம். கமிஷனராக ஒரு சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் சிக்சர் அடிக்கிறார் பிரகாஷ் ராஜ்.

ஒன் மேன் ஆர்மி என்ற புத்தக அறிமுக விழாவில் குஷ்பு, சீமான் ஆகியோர் வந்து போகிறார்கள். அந்தப் புத்தகத்தை படிப்பவராக சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் விஜய் சேதுபதி. ரவுடிகளிடமிருந்து எஸ்.ஏ.சி-யைக் காப்பாற்றி விட்டுச் செல்லும் நடிகராக விஜய் ஆண்டனி வருகிறார்.

‘போக்குவரத்து விதிகள் என்பது மினிஸ்டருக்கும் ஒண்ணு தான். பிச்சைக்காரனுக்கும் ஒண்ணு தான். இந்த அடிப்படை அறிவு கூட இல்லையே இவனுங்களுக்கு’, ‘பயம் இருக்கிறவங்க பொது வாழ்க்கைக்கு வரக் கூடாது’, `இப்போ நீதி கிடைக்க காந்தியும் இல்லை; காமராஜரும் இல்லை; காலிப்பசங்கதான் இருக்காங்க’ போன்ற வசனங்கள் நச்!

கோர்ட் வளாகத்தில் நீதிபதி ஆடிக்கொண்டே வரும் காட்சியையும், குத்தாட்டப் பாடல் காட்சியையும் யோசிக்காமல் எடிட்டர் நறுக்கியிருக்கலாம்.

டிராஃபிக் ராமசாமி போட்ட வழக்குகளில் பரபரப்பை கிளப்பிய வழக்குகள் பல இருக்கையில் மீன்பாடி வண்டிகள் என்ற அடித்தட்டு மக்கள் சம்பந்தப்பட்ட வழக்கை மட்டும் எடுத்துக் கொண்டு படமாக்கியிருப்பது பெரிய கைகளுக்கு பயந்து விட்டார்களோ என்று தான் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

டிராஃபிக் ராமசாமி போன்ற சமூகப் போராளிகளின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் போது அதில் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கம் இருக்கக்கூடாது. மாறாக அவரை பெருமைப்படுத்தும் படமாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமே பிரதானமாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்தப் படத்தில் போட்ட பணத்தையாவது திருப்பி எடுக்க வேண்டும் என்கிற சிந்தனை மேலோங்கியிருப்பது முழுப்படத்திலும் வெளிப்படுகிறது. அதனாலேயே இப்படத்தை பெரிய எதிர்பார்ப்போடு பார்க்க வரும் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

”டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாக எடுக்க நினைத்திருந்தேன்” என்று இந்தப் படத்தின் ஆடியோ பங்ஷனில் பேசியிருந்தார் இயக்குனர் ஷங்கர். ஆசைப்பட்டபடியே உங்களுடைய ஸ்டைலில் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை படமாகத் தரலாம் ஷங்கர் சார்!

Leave A Reply

Your email address will not be published.