Banner After Header

உறியடி 2 – விமர்சனம் #Uriyadi2

0

RATING 4/5

‘உறியடி’ படத்தில் ஜாதி அரசியலை துணிச்சலாகப் பேசிய இயக்குனரும், நடிகருமான விஜய்குமார் பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட தொழிலதிபர்கள், கமிஷனுக்காக புரோக்கர் வேலை பார்க்கும் அரசு அதிகாரிகள், சாதியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு எதிராக சாட்டையை சுழட்டியிருக்கும் படம் தான் இந்த ‘உறியடி 2’.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையுடன் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மலைக்கிராமத்துக்கு அருகில் வருகிறது.

முறையாக பராமரிக்கப்படாமல் இயங்கி வரும் அந்த தொழிற்சாலையால் கிராமத்து மக்களுக்கு உடல் ரீதியாக பெரும் பாதிப்புகள் ஏற்படுகிறது,

அரசும், சட்டமும், அதிகாரமும் தொழிலதிபர் பக்கம் நிற்க, அதைப் பார்த்து பொறுக்க முடியாமல் ஊர் மக்களை காப்பாற்ற தானே அரசியல்வாதியாக களத்தில் இறங்குகிறார் ஹீரோ.

மக்கள் நலன் சார்ந்த அவருடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

காதல், ஆக்‌ஷன் என்று கமர்ஷியல் வட்டத்துக்குள் இருந்து கொண்டு ‘சுயநல’ கம்பு சுற்றும் ஹீரோக்களுக்கு மத்தியில் தனது இரண்டாவது படத்திலும் மக்கள் பிரச்சனையை பொறுப்போடு பேசியிருக்கிறார் ஹீரோ கம் இயக்குனர் விஜய் குமார். அதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள்.

எந்த அலட்டலும் இல்லாத இளைஞராக வரும் ஹீரோ விஜய்குமார் படம் முழுக்க முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் என்று ஹீரோயின் பின்னால் சுற்றும் தமிழ்சினிமாவின் வழக்கமான ஹீரோவாக ஆரம்பத்தில் சில காட்சிகளில் வந்தாலும், தொழிற்சாலையால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்த பிறகு பொறுப்பானவராக மாறுகிற இடம் சரவெடி.

நம் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் போல அதிகம் ஒப்பனை இல்லாத நாயகியாக வருகிறார் விஸ்மயா. ஒரு சீரியசான கதையில் மெல்லியதாக வந்து போகும் காதல் காட்சிகளோடு குட்பை சொல்லாமல் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளிலும் ஒரு போராளியாக நடிப்பில் அசத்துகிறார்.

‘பரிதாபங்கள்’ யு-ட்யூப் சேனலில் வரும் சுதாகர் குணச்சித்திர கேரக்டரில் வந்து மனதில் நிற்கிறார். படத்தில் வருகிற மற்ற கேரக்டர்கள் எல்லாமே புதுமுகங்கள் தான். ஆனால் காட்சிகளின் விறுவிறுப்புக்கு பலமே அந்த புதுமுகங்கள் தான்.

முதல் காட்சியிலிருந்தே இப்படித்தான் ஒரு படம் இருக்க வேண்டும் என்கிற எந்தவித ரெகுலர் ஃபார்முலாவும் இல்லாமல் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்ல ஆரம்பித்து நம்மை இருக்கையோடு கட்டுப்போடுகிறார்கள்.

ஒரு தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்பு என்றதும் போபால் விஷவாயு கசிவு சம்பவம் தான் நம் எல்லோருடைய ஞாபகத்திலும் வரும். ஆனால் உடனே ஞாபகத்தில் வருவது சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த ஆறாத துயரம் தான். பாராளுமன்றத் தேர்தல் நேரமான இந்த காலகட்டத்தில் அதை ஞாபகப்படுத்தும் இந்தப் படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ஓட்டு போடப்போகும் மக்களை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆளும் கட்சியோ, எதிர் கட்சியோ இருவரில் யார் வந்தாலும் இங்கு எதுவும் மாறப் போவதில்லை என்கிற நிஜத்தை பொட்டில் அடித்தாற்போல் சொல்கிற அதே நேரத்தில், ‘ஒரு 500 அரசியல்வாதிகள், இந்த நாட்ல உள்ள கோடிக்கணக்கான மக்களோட வாழ்வையும், சாவையும் நிர்ணயிப்பீங்களா?’ ‘அரசியலில் நாம தலையிடணும். இல்லனா அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடணும்’ போன்ற மக்களை சிந்திக்க வைக்கிற வசனங்கள் கூடுதல் பலம்.

ஒரு தொழிற்சாலையை முறையாக பராமரிக்கவில்லை என்றால் அது எந்தளவுக்கு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மிகத் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிலும் இடைவேளைக்கு முன்பாக வரும் அந்த தொழிற்சாலை காட்சிகளும், அதற்கு கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், பிரவீன் குமாரின் ஒளிப்பதிவும் படம் பார்ப்பவர்களின் ஹார்ட்-பீட்டை எகிற வைக்கின்றன.

இப்படி உச்சி முகர்ந்து பாராட்ட படத்தில் கைத்தட்டல்களுக்குரிய காட்சிகள் பல இருந்தாலும், வழக்கமான தமிழ்சினிமாவுக்குரிய சில காட்சிகளும் படத்தில் உண்டு.

ஆனாலும் பணம் ஒன்றே பிரதானமாகக் கொண்டு கமர்ஷியல் வட்டத்துக்குள் வண்டி ஓட்டும் மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு பொறுப்பான ஹீரோவாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் ஜெயித்திருக்கிறார் விஜய்குமார்.

‘உறியடி 2’ – அதிகாரத்துக்கு எதிரான செருப்படி!

Leave A Reply

Your email address will not be published.