Banner After Header

காவிரி போராட்டத்தை கொச்சைப் படுத்தும் மூத்த நடிகர்களின் மூத்த ரசிகர்கள்! – தயாரிப்பாளர் கிண்டல்

0

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை ‘உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக இயக்கியிருக்கிறார்.

இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் ஆதரவுடன் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார்.

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் பாடல் வெளியீட்டு விழா மே 8-ம் தேதி மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வ.கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபிசரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்களான சபரிமாலா, கம்பம் குணாஜி, விவசாயிகள் தரப்பிலிருந்து ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை விவசாயி செல்வமணி உள்ளிட்ட சில விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

விழாவில் ஆல்பத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் பயணிக்கும் போது ஒருகாலத்தில் அங்கே பசுமையாக இருந்த நிலங்கள் இன்று வறண்டுபோய் கிடப்பதை பார்க்கும் போது, அந்தப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில் ரொம்பவும் வருத்தப்பட்டேன்.

இப்போதும் கூட அங்கே மண் அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஹெலிகேம் வைத்து படமாக்கும் போது அதை கல்லெறிந்து உடைத்தார்கள், ஸ்லீப்பர் செல்போல அந்தப்பகுதியில் சிலர் இருக்கிறார்கள். இதை யாருக்காக செய்கிறோம் என அவர்களுக்கு தெரியவில்லை.. ஆனால் தாங்கள் செய்வது தப்பு என அவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது.

காவிரிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அது கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிவிட்டது, விவசாயிகளின் வலி, வேதனையை இந்த ஆல்பத்தில் பதிவு செய்துள்ளோம்” என்றார்.

இந்திரா புராஜெக்ட்ஸ் பூபேஷ் நாகராஜன் பேசும்போது, “விவசாயிகளுக்காக போராடுகிறோம் என சொல்கிறார்கள்.. இங்கே விவசாயிகளுக்கு உள்ள ஒரே பிரச்சனை பொருளாதார பிரச்சனை தான். விவசாயிகளுக்கு அவர்கள் பொருட்களை மதிப்பு கூட்டல் செய்து விற்கமுடியவில்லை. இன்றைய இளைஞர்கள் இணையதள உதவியுடன் மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்தி விவசாயிகளுக்கு உதவுங்கள். அனைவரையும் உங்களை தேடி வரவழையுங்கள்..

கர்நாடகாவில் அணையே கட்டியிருக்கவில்லை என்றால் நாம் என்ன செய்திருப்போம்.. நாம் ஏன் தண்ணீரை சேமித்து வைக்கும் முயற்சியை எடுக்கவில்லை. நாம் கேள்விகேட்க வேண்டியது இதை செய்ய தவறியவர்களைத்தான்.. எந்த ஒரு பேக்டரியும் முப்பது சதவீதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பை வழங்கி விட முடியாது.. விவசாயம் மட்டும் தான் எழுபது சதவீதம் வேலைவாய்ப்பை தருகிறது.. உணர்ச்சிகரமாக பேசுவது இடையூறாக இருக்கக்கூடாது.. இளைஞர்களுக்காக இருக்க வேண்டும்:” என்றார்.

பின்னர் பேச வந்த தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி மூத்த நடிகர்களின் ரசிகர்களை ஒருபிடி பிடித்தார்… “சமீபத்தில் காவிரிக்காக போராட்டம் நடத்தினோம், எல்லோரும் காவிரிக்காக எதற்கு ஐ.பி.எல்லை நிறுத்த சொல்கிறீர்கள் என கேட்கிறார்கள். நடிகை ஸ்ரீபிரியா சேப்பாக்கம் மைதானத்தின் முன்பாக போராட்டம் நடத்தியதற்கு பதிலாக தலைமை செயலகம் முன்பு நடத்தியிருக்கலாமே என்கிறார்.

எங்கே போராட்டம் நடத்தினால் கவனம் ஈர்க்கப்படுமோ? அங்கே தான் போராட வேண்டும்.. உங்களிடம் ஆட்கள் இருக்கிறார்களே.. நீங்கள் சென்று போராட்டம் நடத்தி இருக்கலாமே.. நாங்கள் தடுக்கவில்லையே.. இதில் நாங்கள் காசுக்காக போராடுகிறோம் என சமீபகாலமாக குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளார்கள். இப்படி நம் போராட்டங்களை விமர்சித்து பதிவிடுபவர்கள் யாரென பார்த்தால், மூத்த நடிகர்களின் மூத்த ரசிகர்கள் தான்.. அவர்களுடைய உச்சகட்ட போராட்டமே 120 ரூபாய் டிக்கெட்டை 1500 ரூபாய் கொடுத்து வாங்கி பார்ப்பது தான். அதை தவிர வேறு போராட்டத்தை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

இவ்வளவு பாலங்கள், நான்கு வழி சாலைகள் அமைக்கும் அரசாங்கம் ஏன் அணைகள் மட்டும் கட்ட முன் வரவேயில்லை..? 50 வருஷமாக கர்நாடகாவுடன் போராடியதற்கு பதிலாக பத்து அணைகள் கட்டியிருக்கலாம். மற்ற மாநிலங்களில் மணல் அள்ளி விற்க தடை போட்டு விட்டு இறக்குமதி செய்கிறார்கள்.. ஆனால் இங்கே நம் தமிழ்நாட்டில் தான் மணலை இறக்குமதி செய்யக்கூடாது என கூறி மணல் அள்ள அனுமதித்துள்ளார்கள் என்பது விசித்திரம்.

நீட் தேர்வுக்கு எதிராக பாரதிராஜா குரல் கொடுத்தால், உடனே ஏன் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்திற்கு எதிராக இவர் குரல் கொடுக்கவில்லை என்கிறார்கள்.. அதுவா பாராதிராஜாவின் வேலை..? தயவுசெய்து போராடுபவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.. இல்லையென்றால் நீங்கள் வந்து போராடுங்கள்.. உங்களுக்காகவும் தான் போராடுகிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.. பிரச்சனைகளை பேசுவதை விட தீர்வுகளை பற்றி பேசுவோம்.. இப்போது நாம் போராடவேண்டியது ஏன் அணைகட்டவில்லை என மாநில அரசை எதிர்த்துத் தான்” என உணர்ச்சி பொங்க பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.